திருட படுவதற்கு முன்பே அலார்ட் செய்யும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்! இந்த 5ல் ஒன்றை வாங்கினால் எப்போதும் பாதுகாப்பு
ஜிபிஎஸ் டிராக்கிங் (GPS Tracking), இன்றைய கால மாடர்ன் உலகில் மிகவும் அடிப்படை அம்சமாக மாறிவிட்டது. ஆட்டோமொபைல் (Automobile) துறையில் தற்போது எந்த வாகனத்தை எடுத்தாலும் அதில் ஜியோ டிராக்கிங் வசதி இல்லாமல் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வரையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கார்களில் மட்டுமே இந்த அதிநவீன தொழிற்நுட்ப வசதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலமாக மொபைல் போனில் உள்ளதை போன்று வரைப்படத்தை பெறுவது மட்டுமின்றி, ஸ்கூட்டர் திருடு போவதையும் தடுக்கலாம். அத்தகைய சிறப்புமிக்க ஜியோ ஃபென்சிங் வசதி உடன் இந்திய சந்தையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஏத்தர் 450எக்ஸ் & ரிஸ்டா (Ather 450X & Rizta): ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் மற்றும் ரிஸ்டா என இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் அவற்றின் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் திரையில் கூகுள் மேப்ஸ் (Google Maps) ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இது ஸ்கூட்டர் செல்ல வேண்டிய வழியை காட்டுவது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல் குறித்தும் நேரலையில் தெரிவிக்கும். அத்துடன், ஸ்கூட்டரை யாராவது இழுத்துச் சென்றாலோ அல்லது திருடி சென்றாலோ அதுகுறித்த எச்சரிக்கைகளையும் ஏத்தர் மொபைல் செயலி வாயிலாக தெரிவிக்கும்.
ஓலா எஸ்1 புரோ & எஸ்1 ஏர் (Ola S1 Pro & S1 Air): ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் வாகனங்களுக்கு என்றே பிரத்யேகமாக வரைப்படங்களை 'ஓலா மேப்ஸ்' என்கிற பெயரில் வழங்குகிறது. பயணத்திற்கான வழிக்காட்டுதலை வழங்குவது மட்டுமின்றி, மூவ் ஓஎஸ் (MoveOS) வாயிலாக ஜியோ-ஃபென்சிங் (Geo-fencing), திருட்டு-தடுப்பு எச்சரிக்கைகள் மற்றும் வாகனத்தின் நேரலை இருப்பிடத்தையும் தெரிவிக்கிறது. ஆனால், இந்த வசதி ஆனது அனைத்து எஸ்1 ஸ்கூட்டர்களிலும் கிடையாது; எஸ்1 புரோ மற்றும் எஸ்1 ஏர் ஸ்கூட்டர்களில் மட்டுமே ஆகும்.

டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube): டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எஸ் மற்றும் எஸ்டி (ST) என இரு வேரியண்ட்களிலும் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் டெக்னாலஜியை வழங்குகிறது. இது, பயணத்திற்கான வழிக்காட்டுதல் மற்றும் ஜியோ ஃபென்சிங் உடன் வாகனத்தின் இருப்பிடத்தை உரிமையாளர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கண்காணிக்கும் வசதியையும் ரியல் டைமில் வழங்குகிறது.
பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak): 2024ஆம் ஆண்டில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிஎஃப்டி (TFT) டிஸ்பிளேவில் பயணத்திற்கான நேவிகேஷன் (Navigation) வசதியை பஜாஜ் வழங்கியது. அத்துடன், சேத்தக் மொபைல் செயலி வாயிலாக ஜியோ ஃபென்சிங் மற்றும் சந்தேகத்திற்கு உரிய நடவடிக்கைகளை கண்காணிக்கலாம். சேத்தக்கின் பிரீமியம் மற்றும் அர்பன் என இரு வேரியண்ட்களிலும் இந்த வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஹீரோ விடா வி1 (Hero Vida V1): ஹீரோ மோட்டோகார்பின் தயாரிப்பான விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புரோ மற்றும் பிளஸ் என இரு வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்சங்களாக ஜியோ-ஃபென்சிங், ஸ்கூட்டர் திருடப்பட நேர்ந்தால் மோட்டார் ஸ்டார்ட் ஆகாத வசதி, லைவ் லொக்கேஷ் டிராக்கிங் உள்ளிட்டவை 'மை விடா' மொபைல் செயலி வாயிலாக கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அந்தந்த காலத்தில் கிடைக்கும் தொழிற்நுட்பங்களை பயன்படுத்துவது நம்மை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். வேறொருவர் உங்களது ஸ்கூட்டரை பயன்படுத்தினாலும் அதனை இருக்கும் இடத்தில் இருந்தே தெரிந்துக் கொள்வது எவ்வளவு அட்வான்ஸான வசதி... இத்தகைய வசதி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க நினைப்போர் இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








