பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட பல மடங்கு அதிக மைலேஜ்... பெட்ரோல் விலை எவ்வளவு ஏறினாலும் கவலையே இல்ல!
இந்தியாவில் டெல்லியில் மட்டுமே பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100-க்குள் உள்ளது. இருப்பினும், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய விலை உயர்வினால் டெல்லியிலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100ஐ நெருங்கியுள்ளது. இதனால், டெல்லியை தவிர்த்து நாடு முழுவதுமே பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி செல்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பெட்ரோல் ஸ்கூட்டரே வேண்டாம் என எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடிவெடுத்து விட்டீர்கள் என்றால், உங்களுக்காகவே இந்தியாவின் சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டிவிஎஸ் ஐக்யூப் (TVS iQube): எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகம் விற்பனை செய்வதில் முதலிடத்தில் இருக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்யும் பிரபலமான இ-ஸ்கூட்டர்களுள் ஒன்று, ஐக்யூப் ஆகும். அன்றாட நடைமுறைத்தன்மை, சவுகரியம் மற்றும் எளிமையான ஹேண்ட்லிங் என மூன்றும் கலந்த கலவையாக இருக்கும் ஐக்யூப் ஆனது 2.2kWh திறன் கொண்ட பேட்டரி மற்றும் 4.4 கிலோவாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டாரை கொண்டதாக உள்ளது.

ஏத்தர் ரிஸ்டா எஸ் (Ather Rizta S): ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் செயல்திறன்மிக்க '450' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று இல்லாமல், ரிஸ்டா ஆனது அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற ஃபேமலி எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது. ரிஸ்டாவில் அதிகப்பட்சமாக 4.3 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.
பஜாஜ் சேத்தக் சி2501 (Bajaj Chetak C2501): ஏறக்குறைய ரூ.1 லட்சத்தில் விலையை கொண்டதாக இருப்பினும், சற்று பிரீமியம் தரத்திலான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேடுவோருக்கு ஏற்றதாக சேத்தக் சி2501 விளங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் 4.2 கிலோவாட்ஸ் மோட்டார் மற்றும் அதில் 2.5kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது.

விடா வி.எக்ஸ்2 கோ (VIDA VX2 Go): இந்தியாவில் 2-வீலர்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா என்கிற பிராண்டின் மூலமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அதன்படி, விடாவில் விற்பனை செய்யப்படும் விஎக்ஸ்2 ஆனது ரூ.99,490-இல் இருந்து விலையை கொண்டுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa e): அதிகம் விற்பனையாகும் இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டரான ஹோண்டா ஆக்டிவாவின் எலெக்ட்ரிக் வெர்சனாக ஆக்டிவா இ விளங்குகிறது. ஆக்டிவாவுக்கு உண்டான பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கிட்டத்தட்ட அதே போன்றதான தோற்றம் மற்றும் ஃபார்முலாவில் ஆக்டிவா இ உருவாக்கப்படுகிறது.
ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ் (Ola S1 X Plus): இப்படியொரு லிஸ்ட்டை பார்க்கும்போது அதில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பார்க்காமல் எப்படி இருக்க முடியும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 எக்ஸ் பிளஸ் ஆனது அதிக மதிப்பு மிக்கதாக உள்ளது. இதில் பொருத்தப்படும் 3kWh பேட்டரி ஆனது 100கிமீ-இல் இருந்து 110கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கக்கூடியதாக உள்ளது.
ரிவர் இண்டீ (River Indie): 4kWh திறன் பேட்டரி உடன் 161கிமீ ரேஞ்சை வழங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பினும், அதை விட நம்மை இந்த ஸ்கூட்டரில் வசீகரிப்பது இண்டீயின் 43 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட அண்டர்-சீட் ஸ்டோரேஜ் ஆகும். இதன் அடிப்படையில் யமஹா நிறுவனம் தனக்கான ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு இண்டீ சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது. குறிப்பாக, குறுகிய தூர பயணங்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்த பலரும் ஆரம்பித்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் விலையை சமாளிக்க முடியாமல் அத்தகையவர்களுள் ஒருவராக உங்களை நீங்கள் இணைத்துக் கொள்ள மேலே கூறப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications