மின்சார இருசக்கர வாகன சந்தையில் முதலிடத்தில் டிவிஎஸ்... ஆகஸ்ட்டில் டாப் 10 நிறுவனங்கள் விபரம்!!
இந்தியாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ஏத்தர் என முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து அசத்தி வருகின்றன. அதே நேரத்தில் ரிவர், பிகாஸ், சிம்பிள் எனெர்ஜி, மோட்டோவோல்ட் போன்ற வளர்ந்து வரும் நிறுவனங்களும் தங்களது இருப்பை வலுப்படுத்தி வருகின்றன.
மத்திய அரசின் வாகன் தளத்தின் வாகனப் பதிவு தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட்டில் இந்தியாவில் மொத்தம் சுமார் 1.83 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 67 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் 2.06 லட்சம் யூனிட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மாத பதிவு 11 சதவீதம் குறைந்துள்ளது.

முதலிடத்தில் டிவிஎஸ்
கடந்த மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 48,875 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், தொடர்ந்து முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதன் மூலம் மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 27 சதவீத பங்கை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 25,646 டிவிஎஸ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 91 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் ஜூலை மாதத்தில் பதிவான 55,823 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட்டில் 12.5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப், ஆர்பிட்டர் ஆகிய மாடல்கள் நிறுவனத்தின் விற்பனைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.
இரண்டாவது இடத்தில் பஜாஜ்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 41,019 யூனிட்டுகள் என்ற பதிவு எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெறும் 12,246 யூனிட்களை மட்டுமே பதிவு செய்திருந்த அந்நிறுவனத்தின் பதிவு தற்போது 235 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, முன்னணி நிறுவனங்களில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை பார்க்கும்போது பஜாஜ் மிகவும் வேகமாக முன்னேறியுள்ளது.
இருப்பினும் ஜூலை மாதத்தில் 45,862 யூனிட்டுகள் என்ற பதிவு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட்டில் 10.6 சதவீதம் குறைந்துள்ளது. டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ இடையிலான வித்தியாசம் தற்போது 7,856 யூனிட்டுகளாக உள்ளது. எனவே வரும் மாதங்களில் இந்த இடைவெளி குறையுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மூன்றாவது இடத்தில் ஏத்தர்
மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் புதிதாக களமிறங்கிய ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 28,709 என்ற வாகனப் பதிவு எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் பதிவான 19,210 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 49 சதவீதம் அளவுக்கு பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் ஜூலை மாதத்தின் 30,636 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் 6.3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும் டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

ஹீரோ விடா வளர்ச்சி
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கீழ் செயல்படும் விடா பிராண்டில் சென்ற மாதம் 18,978 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக, நான்காவது இடத்தை விடாப்பிடியாக பிடித்துள்ளது விடா பிராண்டு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 13,769 யூனிட்டுகளாக இருந்த பதிவு எண்ணிக்கை தற்போது 38 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் ஜூலை மாதத்தின் 22,989 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் சரிந்துள்ளது. விடாவின் விஎக்ஸ்2 என்ற வரிசையில் உள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஓலாவுக்கு பின்னடைவு
ஒரு காலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி சந்தையின் முன்னணி நிறுவனமாக இருந்த ஓலா எலெக்ட்ரிக், ஆகஸ்ட் மாதத்தில் 13,849 வாகனங்களை பதிவு செய்த எண்ணிக்கையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது அதன் பதிவு எண்ணிக்கை 29 சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 2.7 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது. அண்மையில் 300 கிமீ ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கி மீண்டும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.
சிறிய நிறுவனங்களின் வளர்ச்சி வேகம்
ஆம்பியர் பிராண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் க்ரீவ்ஸ் மொபிலிட்டி நிறுவனம் கடந்த மாதத்தில் 8,612 பதிவுகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 89 சதவீத வளர்ச்சி என்றாலும், ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைந்துள்ளது.
அடுத்து ரிவர் மொபிலிட்டி நிறுவனம் 5,134 ஸ்கூட்டர்களின் பதிவுகளுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 170 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எட்டாவது இடத்தில் பிகாஸ் நிறுவனம் 4,844 வாகனங்களை பதிவு செய்து 180 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இரு நிறுவனங்களும் எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும், வளர்ச்சி வேகத்தில் முன்னணி நிறுவனங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.
அடுத்து சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் 1,635 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பதிவுகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டுடன் ஒப்பிடுகையில் 122 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கிடையே மோட்டோவோல்ட் மொபிலிட்டி நிறுவனம் 1,365 பதிவுகளுடன் டாப் 10 பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது மோட்டோவோல்ட் வாகனப் பதிவு 108 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அளவுடன் ஒப்பிடும்போது அதன் வளர்ச்சி ஐந்து மடங்குக்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக பார்க்கும்போது, ஜூலை மாதத்தில் சாதனை அளவு பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் மின்சார இருசக்கர வாகனப் பதிவுகள் குறைந்தன. இருப்பினும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த சந்தை 67 சதவீதம் வளர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பது தெளிவாகிறது. பண்டிகை காலம் துவங்க இருப்பதால், அடுத்த சில மாதங்களுக்கு விற்பனை வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


