இதுவும் ஆந்திராவுக்கு போய்டுச்சா!! நாட்டின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் சைக்கிள் கம்பெனி!
இமோட்டார்ராட், இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் சைக்கிள் நிறுவனம். இதனாலேயே இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நாளுக்கு நாள் தேவை அதிகரித்துவரும் சூழலில், டிமாண்டை சமாளிக்கும் விதமாக புதியதாக ஒரு தொழிற்சாலையை இமோட்டார்ராட் நிறுவவுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தை போல, இமோட்டார்ராட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையும் ஆந்திர பிரதேசத்தில் அமையவுள்ளது.
சமீப மாதங்களாகவே, நாட்டின் புது, புது முதலீடுகள் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் குவிந்து வருகின்றன. அதற்கேற்ப, இந்த இரு தெலுங்கு மாநிலங்களும் புதிய முதலீடுகளை தொடர்ந்து வெகுவாக ஈர்த்து வருகின்றன. சென்னையை சுமார் 70 வருடங்களுக்கும் மேல் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ராயல் என்ஃபீல்டு தனது புதிய தொழிற்சாலையை ஆந்திராவில் அமைக்க உள்ளதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த முதலீட்டின்படி, ராயல் என்ஃபீல்டின் புதிய தொழிற்சாலை சென்னைக்கு அருகே தான் அமையவுள்ளது என்றாலும், அது ஆந்திர பிரதேசத்தின் எல்லைக்குட்பட்ட திருப்பதி பகுதியில் அமைகிறது. சுமார் ரூ.2,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு இந்த புதிய RE ஆலையில் வருடத்திற்கு 9 இலட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்ய முடியுமாம்.
இந்த நிலையில், இந்தியாவின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் சைக்கிள் நிறுவனமான இமோட்டார்ராட் -உம் தனது புதிய தொழிற்சாலையை ஆந்திர பிரதேசத்தின் குப்பம் மாவட்டத்தில் அமைக்க உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் ஆந்திர முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. குப்பம் மாவட்டத்தின் பசுமை நகர திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முதலீட்டு திட்டம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த தொழிற்சாலைக்காக, 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. குப்பம் மாவட்டத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக ஆந்திரா அரசாங்கம் IIT கான்பூர் தொழில் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் நிலையில், அதன் மூலமாக இமோட்டார்ராட் நிறுவனத்தின் இந்த முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. "இமோட்டார்ராட் நிறுவனத்தின் பயணத்தில் குப்பம் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாங்கள் உலக சாதனை படைத்தது இங்குதான்" என இமோட்டார்ராட் நிறுவனத்தின் சிஇஓ-வும், துணை நிறுவனருமான குணால் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மார்க்கெட்டில் வலுவான இடத்தை பிடித்துள்ள இமோட்டார்ராட் நிறுவனத்தில் இருந்து அன்றாட பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அட்வென்ச்சர் பயணங்களுக்கும் ஏற்ற இ-சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதேபோல், மாணவர்கள், உடற்பயிற்சியாளர்கள் என பல்வேறு விதமான பயனர்களுக்கு ஏற்ப இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் உருவாக்கப்படுகின்றன. முதன்முதலாக 2020ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இமோட்டார்ராட் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் சுமார் 800க்கும் அதிகமான டீலர்ஷிப் ஷோரூம்கள் செயல்படுகின்றன. மேலும், 18க்கும் அதிகமான நாடுகளில் இந்த நிறுவனத்தின் நெட்வொர்க் அமைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இமோட்டார்ராட் நிறுவனத்தின் இந்த புதிய முதலீடு மூலமாக, பசுமை சுற்றுச்சூழல் பேணப்படுவது மட்டுமின்றி, குப்பம் பகுதியில் கணிசமான வேலைவாய்ப்புகளும் உருவாகும். இங்கு விலை குறைவான இமோட்டார்ராட் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் சைக்கிள்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு முன்னர், ஆந்திராவின் குப்பம் பகுதியில் அதிகமாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications