ரூ.1 லட்சம் விலைக்குள்ள ஆறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.. வேற எந்த நிறுவனத்தாலையும் கொடுக்க முடியல!
டிவிஎஸ், பஜாஜ் (சேட்டக்) மற்றும் ஏத்தர் எனர்ஜி உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் முதலிடத்திற்குப் போட்டி போட்டு வரும் நிலையில், வேறு சில நிறுவனங்கள் சத்தமே இல்லாமல் சாமர்த்தியமாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. அப்படியான நிறுவனங்களில் ஒன்று தான் கிரீவ்ஸ் எலெக்ட்பிக் மொபிலிட்டி. ஆம்பியர் என்ற பெயரில் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம்.
இந்த நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. அதாவது, இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சுமார் 4 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது கிரீவ்ஸ் மொபிலிட்டி. முன்னணி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களைத் தவிர்த்து, விற்பனையில் இப்படி ஒரு மைல்கல்லை எட்டிய ஒரே நிறுவனம் கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி தான்.

மிகவும் குறைவான விலையில், அடிப்படையான வசதிகளைக் கொண்ட எலெக்ட்ரிக ஸ்கூட்டர்களை விற்பனை செய்வது தான் இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த திட்டமே. ஆனால் அதில் கணிசமான அளவில் வெற்றியும் கண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் 6,884 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், மே மாதம் 7,695 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்துள்ளது இந்நிறுவனம். இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 80 சதவீதம் வரை அதிகமாகும்.
இந்தியாவில் தற்போது நெக்சஸ், மேக்னஸ் G மேக்ஸ், மேக்னஸ் நியோ, மேக்னஸ் கிராண்டு, ரியோ வைப் மற்றும் ரியோ 80 என ஆறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது கிரீவ்ஸ் மொபிலிட்டி. இதில் ரியோ வைப் மற்றும் ரியோ 80 ஆகிய இரண்டும் குறைவான வேகத்தில் செல்லும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வகையைச் சேர்ந்தது. அதனால் விலையும் குறைவு தான்.

ரியோ 80 தான் இதன் லைன்-அப்பிலேயே மிகவும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். 60,000 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அதனைத் தொடர்ந்து 69,000 என்ற விலையிலான ரியோ வைப் சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேக்னஸ் சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களானது 90,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆம்பியர் லைன்-அப்பிலேயே விலையுயர்ந்த ஸ்கூட்டர் என்றால் அது நெக்சஸ் தான். 1.21 லட்சம் ரூபாய் என்ற விலையில் தொடங்கி விற்பனை செய்யப்படும் நெக்சஸ் தான் ஆம்பியரின் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட கணிசமான அளவில் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே இந்நிறுவனம் விற்பனை செய்து கணிசமான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
2025ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சந்தையில் கிரீவ்ஸ் மொபிலிட்டியின் சந்தைப் பங்கு 3.6 சதவீதமாக இருந்தது. கடந்த 2026ம் நிதியாண்டில் இது 4.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு 2027ம் நிதியாண்டில் அதன் விற்பனைப் பங்குகள் இன்னும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்னோட்டத்தையும் ஏப்ரல் மற்றும் மே ஆகிய முதலிரண்டு மாத விற்பனையிலேயே அந்நிறுவனம் காட்டியிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 1 லட்சம் ரூபாய்க்குள்ளான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை வெளியிடுவதன் மூலம் கணிசமான விற்பனையைப் பெற முடியும் என்ற ஸ்ட்ராடஜியைப் பின்பற்றி வெற்றி கண்டு வருகிறது கிரீவ்ஸ் மொபிலிட்டி. இதன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் ஓரளவு நம்பகமான நிறுவனமாகவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவெடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications