ஹீரோ கூட்டணியில் உருவான ஹார்லி டேவிட்சன் ஸ்பிரிண்ட் 440 அறிமுகம்!
அமெரிக்காவின் புகழ்பெற்ற இருசக்கர வாகன நிறுவனமான ஹார்லி டேவிட்சன், தனது மோட்டார்சைக்கிள் வரிசையில் புதிய ஸ்பிரிண்ட் 440 (Sprint 440) என்ற க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், ஆரம்பநிலை ரைடர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறவுள்ள EICMA 2026 மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த பைக் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. பாரம்பரிய ஹார்லி டேவிட்சன் வடிவமைப்புடன் நவீன தொழில்நுட்பங்களை இணைத்து, குறைந்த உயர இருக்கை மற்றும் எளிமையான கையாளும் வசதியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வடிவமைப்பு
ஹார்லி டேவிட்சன் ஸ்பிரிண்ட் 440 மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், கண்ணீர்த்துளி வடிவிலான எரிபொருள் டேங்க், தாழ்வான இருக்கை அமைப்பு, சிறிய பின்புற மட்கார்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் வடிவமைப்பு அந்நிறுவனத்தின் புகழ்பெற்ற பெரிய க்ரூஸர் பைக்குகளை மனதில் வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிள் டார்க் பில்லியர்ட் கிரே, விவிட் பிளாக் மற்றும் டீல் தண்டர் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். எரிபொருள் தொட்டியில் ஆரஞ்சு நிற கிராபிக்ஸ் மற்றும் செக்கர்டு கொடி வடிவமைப்பு இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்த தோற்றத்திற்கு இது தனித்துவமான அடையாளத்தை வழங்குகிறது.

எஞ்சின் விபரம்
ஹார்லி டேவிட்சன் ஸ்பிரிண்ட் 440 மோட்டார்சைக்கிளில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 440சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 எச்பி பவரையும், 38 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. குறைந்த ஆர்பிஎம்மில் சிறப்பான டார்க் கிடைக்கும் வகையில் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நகர்ப்புற போக்குவரத்திலும், நெடுஞ்சாலை பயணங்களிலும் எளிதாக ஓட்ட முடியும்.
நிறுவனத்தின் தகவலின்படி, இந்த மோட்டார்சைக்கிள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 34 கிமீ மைலேஜ் வழங்கும். இதில் 9 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி இடம்பெற்றுள்ளது. குறைந்த எடை மற்றும் எளிமையான பராமரிப்பை நோக்கமாகக் கொண்டு இந்த எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.
தாழ்வான இருக்கை மற்றும் சஸ்பென்ஷன்
இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று 671 மிமீ இருக்கை உயரம். குறைந்த உயரம் கொண்ட ரைடர்களும் சிரமமின்றி கால்களை தரையில் ஊன்ற முடியும். இதன் எடை 187 கிலோவாக இருப்பதால், நகர்ப்புறங்களில் கையாளுவதற்கும் எளிதாக இருக்கும். சஸ்பென்ஷனைப் பொறுத்தவரையில், முன்புறம் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் 130 மிமீ பயண அளவுடன் வழங்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் 7 நிலைகளில் மாற்றக்கூடிய பிரீலோடு வசதியுடன் கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்கள் இடம்பெற்றுள்ளன.
பிரேக்கிங் மற்றும் நவீன வசதிகள்
பிரேக்கிங்கிற்காக முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் ஏபிஎஸ் பாதுகாப்பு வசதி இடம்பெற்றுள்ளது. 19 அங்குல முன்புற வீல் மற்றும் 17 அங்குல பின்புற அலாய் வீல்கள் இந்த பைக்கிற்கு க்ரூஸர் தோற்றத்தை வழங்குகின்றன.
மேலும், இதில் 3.5 அங்குல வட்ட வடிவ கலர் டிஎஃப்டி டிஸ்பிளே, முழுமையான எல்இடி விளக்குகள் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், சாடில் பேக்குகள், விண்ட்ஸ்கிரீன், பேக்ரெஸ்ட் மற்றும் மாற்று இருக்கை வசதிகளை கூடுதல் உபகரணங்களாக வாங்கிக்கொள்ளலாம்.
இந்தியாவுக்கு எப்போது?
ஹார்லி டேவிட்சன் ஸ்பிரிண்ட் 440 மோட்டார்சைக்கிள் வரும் ஆண்டு முதலாவதாக அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. மற்ற நாடுகளிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவிலும் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதால், இந்திய சந்தையில் அறிமுகமாகும் வாய்ப்பு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதன் இந்திய விலை மற்றும் அறிமுக தேதி குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள இன்னும் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications


