மிகவும் குறைவான விலையில் வெளியான புதிய எலெக்ட்ரிக் பைக்.. அம்சங்கள் எல்லாம் வேற ரகம்
லைவ்வயர் (Livewire) என்ற துணை நிறுவனத்தின் மூலமாக எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன். இருப்பதிலேயே குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்றை தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது அந்நிறுவனம். விலையைக் கேட்டால் அசந்து போவீர்கள், பைக்கில் இருக்கும் வசதிகளைக் கேட்டால் இன்னும் அசந்து போவீர்கள்.
S4 ஹான்ச்சோ (S4 Honcho) என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக்கை ட்ரெயில் மற்றும் ஸ்ட்ரீட் என இரண்டு வடிவில் யுகேயில் வெளியிட்டுள்ளது லைவ்வயர். மினி மோட்டோ, அதாவது சிறிய ரக பைக் என்றே இவை அழைக்கப்பட்டாலும், விலை அப்படி இல்லை. S4 ஹான்ச்சே ட்ரையல் பைக்கை இந்திய மதிப்பிற்கு 5.88 லட்சம் ரூபாய் என்ற விலையிலும், S4 ஹான்ச்சோ ஸ்ட்ரீட் பைக்கை 6.39 லட்சம் ரூபாய் என்ற விலையிலும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

இவை தான் அந்நிறுவனத்தின் குறைவான தொடக்க நிலை எலெக்ட்ரிக் பைக்குகள். A1 லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் மையப்படுத்தி இந்த பைக்கை வெளியிட்டுள்ளது லைவ்வயர். இந்தியாவைப் போல இல்லாமல், ஐரோப்பிய நாடுகளில் பைக்கின் திறனைப் பொறுத்து லைசன்ஸ் வழங்கும் முறையில் படிநிலைகள் இருக்கின்றன.
A1 என்பது 125 சிசி அல்லது அதற்கு இணையான எலெக்ட்ரிக் மோட்டார் திறன் கொண்ட பைக்குகளை இயக்குவதற்காக வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் ஆகும். இதற்கு 17 வயது நிரம்பியிருக்க வேண்டும். 19 வயது நிரம்பியவர்கள் A2 லைசன்ஸ் பெற முடியும். 47 hp வரையிலான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை A2 உரிமம் வைத்திருப்பவர்கள் இயக்கலாம்.

125 சிசி எரிபொருள் இன்ஜினுக்கு இணையான திறனை S4 ஹான்ச்சோவின் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் வெளிப்படுத்துவதைத் தொடர்ந்து A1 உரிமம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி இந்த 'விலை குறைவான' 'தொடக்கநிலை' எலெக்ட்ரிக் பைக்குகளை வெளியிட்டுள்ளது லைவ்வயர். இதில் ட்ரெயில் பைக்கானது அதற்கேற்ற ட்ரெயில்களில் பயன்படுத்துவதற்கு மட்டுமே, இதனை சாலைகளில் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. ஸ்ட்ரீட் பைக்கை வழக்கமாக சாலைகளில் ஓட்ட முடியும்.
விலை கொஞ்சம் அதிகமாக இருப்பதால், (யுகேயின் மற்ற தொடக்கநிலை பைக்குகளுடன் ஒப்பிடும் போது இது 1000 யூரோ வரை விலை அதிகமாக பைக் தான்) பவர்ட்ரெயினும் அதற்கேற்ப சிறப்பாக இருக்கும் என நினைக்க வேண்டாம். இந்த பைக்கில் இரண்டு 1.74 kWh பேட்டரி பேக்குகளைக் கொடுத்துள்ளது லைவ்வயர். இந்த பேட்டரி பேக்குகளானது 85 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆம் வெறும் 85 கிமீ தான்.
மணிக்கு 20 கிமீ என்ற குறைவான வேகத்திலேயே பயணம் செய்தால் 117 கிமீ வரையிலான ரேஞ்சைப் பெற முடியுமாம். அதிகபட்சமாக மணிக்கு 95 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது மினி எலெக்ட்ரிக் பைக். ஆனால் இதன் பேட்டரியை கொஞ்சம் வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வெறும் 2 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐரோப்பா அல்லது அமெரிக்காவிற்கு ஏற்ற பைக்காக இந்த S4 ஹான்ச்சோ இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இந்தியாவிற்கு ஏற்ற பைக் கிடையாது. ஹார்லி டேவிட்சன் தங்களுடைய பெரும்பான்மையான எரிபொருள் பைக் மாடல்களை இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது. ஆனால் அதன் துணை நிறுவனமான லைவ்வயரின் பைக்குகளை இந்தியாவில் வெளியிடுவது குறித்து அந்நிறுவனம் நினைத்துக் கூட பார்க்காது என்பது மட்டும் உறுதி.


Click it and Unblock the Notifications