ரூ.76,400 விலையில் ஹீரோ டெஸ்டினி 110 கிளாசிக் எடிஷன் அறிமுகம்! என்னென்ன சிறப்பம்சங்கள்?
இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), தனது டெஸ்டினி 110 (Destini 110) ஸ்கூட்டரின் புதிய கிளாசிக் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிமுகமாகியுள்ள இந்த ஸ்கூட்டர், புதிய வண்ணங்கள் மற்றும் தனித்துவமான தோற்றத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கு ரூ.76,400 என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹீரோ டெஸ்டினி 110 கிளாசிக் எடிஷன், வழக்கமான மாடலைவிட வித்தியாசமான தோற்றத்தைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரட்டை வண்ணக் கலவையுடன் (Dual-tone Colours), புதிய கிராபிக்ஸ் மற்றும் பிரத்யேக 3D பேட்ஜ் ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

இந்த ஸ்கூட்டர் இரண்டு புதிய வண்ணக் கலவைகளில் கிடைக்கிறது. மேட் கோல்ட்ஃபிஷ் சில்வர் மற்றும் லைட் இன்டஸ்ட்ரியல் கிரே என்ற வண்ணத்தில் பழுப்பு நிற உள் பேனல்கள் கொண்ட ஒரு தேர்வும், மேட் ஏரீஸ் பிரவுன் என்ற வண்ணத்தில் கருப்பு நிற உள் பேனல்கள் கொண்ட மற்றொரு தேர்வும் வழங்கப்படுகிறது. மேலும், முன்பக்க ஹேண்டில் கவர் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் புதிய ஸ்டிக்கர்கள், வண்ணத்திற்கு ஏற்ற ரியர் வியூ கண்ணாடிகள், இருக்கை மற்றும் ரிம் டேப் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிரத்யேக 3D கிளாசிக் எடிஷன் பேட்ஜ் இந்த ஸ்கூட்டருக்கு கூடுதல் அழகை வழங்குகிறது.
புதிய டெஸ்டினி 110 கிளாசிக் எடிஷனில் குடும்பப் பயணங்களுக்கு ஏற்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் 785 மிமீ நீளமான இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பிரிவில் மிக நீளமான இருக்கை என ஹீரோ நிறுவனம் தெரிவிக்கிறது. இரண்டு பேரும் வசதியாக அமர்ந்து பயணிக்கும் வகையில் தாராளமான கால் வைக்கும் இடம், முன்புறம் மற்றும் பின்புறம் 12 அங்குல அலாய் வீல்கள், பின்புறத்தில் அகலமான 100/80-12 டயர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
பொருட்களை வைத்துச் செல்வதற்கு 19 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கைக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் வசதி உள்ளது. முன்பக்கத்தில் மொபைல் சார்ஜிங் வசதியுடன் சிறிய பொருட்களை வைக்கும் இடமும், இரவு நேரங்களில் பொருட்களை எளிதாக எடுக்க பூட் லேம்ப் வசதியும் இடம்பெற்றுள்ளன. மேலும், டிஜிட்டல் மற்றும் அனலாக் இணைந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், LED புரொஜெக்டர் ஹெட்லைட், LED டெயில் லைட் மற்றும் பொசிஷன் லைட் ஆகியவையும் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஸ்கூட்டரில் 110.9 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.2 எச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீரோ நிறுவனத்தின் i3S (Idle Stop-Start System) தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் வாகனம் நிற்கும்போது குறிப்பிட்ட சூழலில் எஞ்சினை தானாக அணைத்து, மீண்டும் ஆக்சிலரேட்டரை கொடுத்தால் ஸ்கூட்டர் இயங்கும். இது எரிபொருள் சிக்கனத்திற்கு உதவுகிறது.
ஹீரோ டெஸ்டினி 110 கிளாசிக் எடிஷன் இந்தியாவில் ரூ.76,400 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அடிப்படை VX வேரியண்ட்டைவிட ரூ.1,400 அதிகமாகும். அதே நேரத்தில், டாப் ZX வேரியண்ட் ரூ.83,800 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய ஸ்கூட்டர் நாடு முழுவதும் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் டீலர்ஷிப்புகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications


