ஹீரோ கூட்டணியில் உருவான ஹார்லி டேவிட்சன் X350T பைக் வெளியானது!
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துடன் இணைந்து புதிய X350T மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலியில் நடைபெறும் EICMA 2026 கண்காட்சியில் இந்த புதிய பைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன் X440T மாடலின் வடிவமைப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக், புதிய 350சிசி எஞ்சின் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கவனம் ஈர்க்கிறது. இந்திய சந்தையை முக்கிய இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக் குறித்த முழு விபரங்களை பார்க்கலாம்.

தனித்துவமான வடிவமைப்பு
ஹார்லி டேவிட்சன் X350T பைக்கில் வட்ட வடிவ முகப்பு விளக்கு, கம்பீரத்தை தரும் எரிபொருள் டேங்க், அகலமான கைப்பிடி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆலிவ் பச்சை நிறத்தில் செக்கர்டு கிராபிக்ஸ் உடன் காட்சியளிக்கும் இந்த பைக், பாரம்பரிய ரோட்ஸ்டர் தோற்றத்தை விரும்பும் இளைஞர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவ பின்புற கண்ணாடிகள், சிறிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஒற்றை இருக்கை அமைப்பு ஆகியவை இதன் தோற்றத்தை மேலும் அழகாக்குகின்றன. பின்புறத்தில் கச்சிதமான டெயில் லைட் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய 350சிசி எஞ்சின்
ஹார்லி டேவிட்சன் X350T பைக்கில் முற்றிலும் புதிய 350சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிக டார்க் திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதன் துல்லியமான பவர் மற்றும் டார்க் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த புதிய எஞ்சின் இந்தியாவில் நடைமுறையில் உள்ள BS6 OBD2P2 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது. கியர்பாக்ஸ் விபரங்கள், அதிகபட்ச வேகம் மற்றும் மைலேஜ் உள்ளிட்ட தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் இந்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன தொழில்நுட்ப வசதிகள்
இந்த புதிய ஹார்லி டேவிட்சன் பைக்கில் எலக்ட்ரானிக் த்ராட்டில் பாடி, பல்வேறு ரைடிங் மோடுகள், ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. இவை வெவ்வேறு சாலை நிலைகளில் பைக்கை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் இயக்க உதவும்.
ரைடிங் மோடுகள் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் வசதிகள் மூலம் பயணிகள் தங்களுடைய தேவைக்கேற்ப பைக்கின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள முடியும். குறிப்பாக, வழுக்கும் சாலைகளில் பயணிக்கும்போது டிராக்ஷன் கன்ட்ரோல் பாதுகாப்பை மேம்படுத்த உதவும். இந்த வசதிகள் 350சிசி பிரிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங்
ஹார்லி டேவிட்சன் X350T பைக்கில் ட்ரெல்லிஸ் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் இடம்பெற்றுள்ளன. நகர சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சிறப்பான நிலைத்தன்மை, கையாளும் திறன் மற்றும் பயண வசதியை வழங்கும் வகையில் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பைப்ரே பிரேக் காலிப்பர்கள் இடம்பெறுகின்றன. அலாய் வீல்கள், அகலமான கைப்பிடி மற்றும் ரோட்ஸ்டர் வகை கால் வைக்கும் அமைப்பு ஆகியவை அன்றாட பயன்பாட்டிற்கும் நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
இந்தியாவில் அறிமுகம் எப்போது?
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகும் புதிய பைக்குகளில் X350T முக்கியமான மாடலாக பார்க்கப்படுகிறது. இதன் விலை, இந்திய அறிமுக தேதி மற்றும் முழுமையான தொழில்நுட்ப விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நிறுவனங்களின் 350சிசி பைக்குகளுக்கு போட்டியாக X350T களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை மற்றும் செயல்திறன் விபரங்கள் வெளியான பிறகே சந்தையில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பது தெரியவரும்.


Click it and Unblock the Notifications
