புதிய ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் HF டீலக்ஸ் பைக்குகளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஹீரோ
இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனமான ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை மத்திய அரசு அதிகரித்து வருவது நமக்குத் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில், 85 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலையும் பயன்படுத்த முடிகிற வகையில் புதிய ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது ஹீரோ.
ஸ்ப்ளெண்டருக்குப் பிறகு ஹீரோ மோட்டோகார்ப்பின் லைன்-அப்பில் அதிகம் விற்பனை செய்யப்படும் பைக் என்றால் அது HF டீலக்ஸ். எனவே ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குடன் HF டீலக்ஸையும் E85 எரிபொருளைப் பயன்படுத்த முடிகிற வகையில் அப்டேட் செய்துள்ளது ஹீரோ. இந்த பைக்குகளை வாங்குவதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் எந்தவொரு புதிய எத்தனால் கலப்பு அறிவிப்பையும் குறித்து வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை.

தற்போது E20 எரிபொருளே இந்தியாவில் பிரதானமாகப் பயன்பாட்டில் இருக்கிறது. E என்பது எத்தனாலையும், 20 என்பது அதன் கலப்பு சதவீதத்தையும் குறிக்கிறது. எத்தனாலை பெட்ரோலில் கலப்பதனால் என்ன பிரச்சினை என்றால், எத்தனால் தண்ணீர் சதவீதம் சற்று அதிகம். இதனால் எரிபொருள் பயணிக்கும் பாகங்கள் விரைவில் தண்ணீருடன் விணைபுரிந்து துருப்பிடிக்கவும் அல்லது பெர்ஃபாமன்ஸ் குறைவும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே எந்தளவிற்கு எத்தனால் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ற வகையில் இன்ஜின் மற்றும் பாகங்களை மாற்றியமைக்க வேண்டும்.
புதிய E85 ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் HF டீலக்ஸ் பைக்குகளில் அதனையே செய்துள்ளது ஹீரோ. ECU கேலிபரேஷனை மாற்றியமைத்திருப்பதோடு, மேலே கூறியது போல எரிபொருள் பயணிக்கும் பாகங்கள், எரிபொருள் பம்ப் மற்றும் இரண்டாம் எரிபொருள் ஃபில்டர் ஆகியவற்றை E85 எரிபொருளுக்கு ஏற்ப மாற்றியமைத்திருக்கிறது ஹீரோ.

இந்தப் புதிய பைக்குகளை ஃப்ளெக்ஸ் ஃப்யூல் (Flex Fuel) என அழைக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். மேலும் ஸ்டாண்டர்டான E20 ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் HF டீலக்ஸ் பைக்குகளில் இருந்து புதிய பைக்குகளை வேறுபடுத்திக் காட்ட வண்ணமயமான நிறங்களையும் பயன்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்குகளை வாடிக்கயாளர்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். இது இந்த பைக்குகளுக்கு ஃப்ரஷ்ஷான லுக்கையும் கொடுக்கிறது.
பைக்கின் இன்ஜின் திறனில் எந்த மாற்றமும் இல்லை. அதே 97.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான். E85 எரிபொருளில் இயங்கும் போது இந்த இன்ஜினானது 8.6 hp பவர் மற்றும் 8.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு பைக்குகளிலுமே ஒரே இன்ஜின் தான்.
ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் HF டீலக்ஸ் ஆகிய இரண்டின் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்குகளிலும் டிஜி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைடு-ஸ்டாண்டு இன்ஜின் கட்-ஆஃப், டியூப்லெஸ் டயர்கள் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸில் கூடுதலாக i3S ஐடியல் ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் மைலேஜூக்காக இதனை ஹீரோ கொடுத்திருக்கலாம எனத் தெரிகிறது.
தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கை விட 5,153 ரூபாய் கூடுதலாக 82,710 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது புதிய ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக். HF டீலக்ஸ் பைக்கானது தற்போதைய மாடலை விட 172 ரூபாய் மட்டுமே கூடுதலாக 72,792 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக டெல்லியிலும், மகாராஷ்டிராவின் சில பகுதிகளிலும் மட்டுமே இந்த இரண்டு ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்குகளையும் விற்பனைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். அதனைத் தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் இந்த பைக்குகளின் விற்பனையை அந்நிறுவனம் விரிவாக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோவின் இந்தப் புதிய பைக்குகளின் வெளியீடு மிகவும் வரவேற்கத்தக்கது. ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும HF டீலக்ஸ் ஆகிய பைக்குள் அடிப்படை மக்களாலேயே அதிகம் வாங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை எரிபொருள் தேர்வினை மத்திய அரசு மாற்றி வந்தால் குறைவான வருவாய் பெறும் அவர்களால் அதற்கேற்ப புதிய பைக்குகளை வாங்கிக் கொண்டே இருக்க முடியாது.
எனவே விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டிருப்பது மிகவும் சிறப்பான ஒரு செயலாகும். மேலும், அதிகம் விலையை உயர்த்தாமல், கிட்டத்தட்ட அதே விலையிலேயே வெளியிட்டிருப்பது இன்னும் வரவேற்கப் படவேண்டிய ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications