ஹோண்டாவை கதறவிட சூப்பரான புதிய பைக்கை களமிறக்கிய ஹீரோ.. என்ன பைக்னு தெரியுமா?
இந்தியாவில் ஸ்ப்ளெண்டர் பைக்கின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையைப் பற்றி நாங்கள் தனியாகக் கூறத் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ஸ்ப்ளெண்டர் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இந்த எண்களே அதனைக் கூறி விடும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிராண்டு என்பதால், ஸ்ப்ளெண்டர் பெயரில் புதிய பைக்குகளை வெளியிடுவதில் ஹீரோ கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுகிறது.
இதனால் தற்போது மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்பிளெண்டர் பைக் ஒன்றை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது . அது வேறெதுவும் இல்லை, ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0 பைக் தான். தற்போது சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC என்ற பைக் விற்பனையில் இருக்கும் நிலையில், அதனை விட கொஞ்சம் மேம்பட்ட வெர்ஷனாக இந்த 2.0-ை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பைக் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

ஸ்ப்ளெண்டர் பிளஸ் மற்றும் சூப்பர் ஸ்ப்ளெண்டர் இடையில் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஸ்ப்ளெண்டர் என்பது நாம் அதிகம் வாங்கும் 100 சிசி பைக். இது தான் நாம் சாலைகளில் அதிகம் பார்க்கும் சிம்பிளான ஸ்ப்ளெண்டர் பைக். எந்த விதமான ஃபேன்ஸிலான டிசைனும் இல்லாமல் மிகவும் எலிகண்ட்டாக இருக்கும்.
சூப்பர் ஸ்ப்ளெண்டர் என்பது ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸை விட சற்று பெரிய 125 சிசி இன்ஜினைக் கொண்ட பைக். வடிவமைப்பும் ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸில் இருந்து வேறுபட்டே இருக்கும். சிம்பிளான அந்த டிசைன் வேண்டாம் என்பவர்களுக்காக இந்த சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்கை ஹீரோ விற்பனை செய்து வருகிறது.

புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0 பைக்கில் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை, அதே 124.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 10.7 hp பவர் மற்றும் 10.6 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. XTEC பைக்கிலும் இதே இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதனை விட 4 கிமீ வரை கூடுதலாக 72 கிமீ மைலேஜை புதிய XTEC 2.0 பைக் கொடுக்கும் என ஹீரோ தெரிவித்துள்ளது.
சாதாரண கம்யூட்டர் பைக்குகளில் டிஜிட்டல் டிஸ்பிளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொடுத்து XTEC பைக்குகளாக ஹீரோ விற்பனை செய்கிறது. அந்த வகையில் இந்த சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0 பைக்கிலும் இந்த டிஜிட்டல் அம்சங்களுடன், கால் அல்லது மெஸேஜ் அலர்ட், மைலேஜ் இன்டிகேட்டர் உள்ளிட்ட வசதிகளை ஹீரோ கொடுத்திருக்கிறது.
காஸ்மெடிக் ரீதியாக XTEC பைக்கில் இருந்து மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸை புதிய XTEC 2.0 பைக்கில் ஹீரோ கொடுத்திருக்கிறது. இத்துடன் XTEC 2.0 என்ற பேட்ஜிங் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஐந்து தனித்துவமான புதிய நிறங்களில் இந்த புதிய 125 சிசி பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ. சீட்டும் வழக்கமானதாக இல்லாமல் டூயல் டெக்ஸ்சர் மற்றும் ரிம் டேப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது.
USB டைப்-C சார்ஜிங் போர்ட் வசதியைக் கொண்டிருக்கும் இந்த பைக்கில் புதிதாக ஹஸார்ட் லைட்களை ஹீரோ கொடுத்திருக்கிறது. டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியன்ட்களாக இந்த சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0 பைக் வெளியிடப்பட்டுள்ளது. டிரம் வேரியன்டில் இரண்டு வீல்களிலும் டிரம் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிஸ்க் வேரியன்டின் பைக்கின் முன்பக்கம் மட்டும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கும்.
XTEC பைக்கை விட சில ஆயிரங்கள் கூடுதலாக 86,500 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0 பைக்கின் அடிப்படையான டிரம் வேரியன்டை ஹீரோ வெளியிட்டுள்ளது. டிஸ்க் வேரியன்டானது 90,000 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. இதுவரை விற்பனையில் இருந்து வரும் சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC பைக்கின் டிரம் மற்றும் டிஸ்க் வேரியன்ட்களானது முறையே 84,448 ரூபாய் மற்றும் 88,044 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொணடுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பைக்கை ரெஃப்ரஷ் செய்யும் விதமாக சற்று கூடுதல் அம்சங்கள் மற்றும் மாறுபட்ட டிசைனைக் கொடுத்து மேம்படுத்தியிருக்கிறது ஹீரோ. 125 சிசி பைக்குகளில் சிறப்பான ஒரு பைக்காக கண்டிப்பாக இந்த சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்குகளைக் கூறலாம். 125 சிசி இன்ஜினுடன் ஒரு கம்யூட்டர் வகை பைக்கை வாங்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த பைக்கைத் தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications