ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாட்டின் சாலைகளை ஆள போகும் இந்திய நிறுவனம்! உலகம் முழுக்க புகழ் பரவுது!
இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் மொத்தம் 4 நாடுகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவை இத்தாலி (Italy), ஸ்பெயின் (Spain), பிரான்ஸ் (France) மற்றும் இங்கிலாந்து (England) ஆகியவை ஆகும்.
இந்த வரிசையில் ஐரோப்பிய கண்டத்தில் 5வது நாடாக ஜெர்மனியில் (Germany) தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நுழைந்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சந்தையில் இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நுழைந்திருப்பது சிறப்பான ஒரு விஷயமாகும்.

ஜெர்மனி சந்தையில் நுழைவதற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கேஎஸ்ஆர் குழுமத்துடன் (KSR Group) கூட்டணியை ஏற்படுத்தி கொண்டுள்ளது. இது ஐரோப்பிய கண்டத்தின் ஆஸ்திரியாவை (Austria) சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும். ஜெர்மனி சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விநியோக பணிகளை கேஎஸ்ஆர் குழுமம் மேற்கொள்ளும்.
ஜெர்மனி சந்தையில் யூரோ 5+ (Euro 5+) மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான டூவீலர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி பார்த்தால் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4வி (Hero XPulse 200 4V) போன்ற பைக்குகள் எல்லாம் ஜெர்மனி சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

ஐரோப்பிய அளவில் பார்த்தால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ஜெர்மனி 5வது சந்தை ஆகும். ஆனால் உலக அளவில் பார்த்தால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ஜெர்மனி 53வது சந்தை ஆகும். முதற்கட்டமாக ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் உள்ள அதிகாரப்பூர்வமான 28 சேல்ஸ் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் மூலம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்களை கேஎஸ்ஆர் குழுமம் விற்பனை செய்யும். இதை தொடர்ந்து படிப்படியாக ஜெர்மனி முழுவதும் விற்பனையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெர்மனி சந்தையில் நுழைந்துள்ள அதே நேரத்தில், இந்தியாவில் ஏராளமான புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டு வர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நடப்பு 2026-27ம் நிதியாண்டில் 150 - 350 சிசி பிரீமியம் பைக் செக்மெண்ட்டில் பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்த தயாரிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எனினும் 150 - 350 சிசி பிரீமியம் பைக் செக்மெண்ட் என்பதால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகள், டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj) மற்றும் ராயல் என்பீல்டு (Royal Enfield) போன்ற நிறுவனங்களின் பைக்குகளுக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய நிறுவனம் ஒன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது விற்பனையை விரிவுபடுத்தி வருவது நாம் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இனிமேல் இந்திய சாலைகளை போலவே ஜெர்மனியின் சாலைகளையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்கள் ஆட்சி செய்யும் என நாம் நம்பலாம்.


Click it and Unblock the Notifications