லிட்டருக்கு 60- 65கிமீ மைலேஜ் அசால்ட்டா கிடைக்கும்! ரூ.87 ஆயிரத்தில் புதிய ஸ்பிளெண்டர் பைக் அறிமுகம்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC பைக்கை அப்கிரேட் செய்து மே 27ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 'சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC 2.0' என்கிற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய 125சிசி ஹீரோ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியா உள்பட உலகளவில் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தியில் மிக பெரும் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து ஸ்பிளெண்டர் பைக்குகள் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் விற்பனையாகுகின்றன. 1994ஆம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் ஸ்பிளெண்டர் பைக்குகள் இதுவரையில் கோடிக்கணக்கிலான மக்களை சென்று சேர்ந்துள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் பல்வேறு விதமான மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள், 125சிசி என்ஜின் உடன் சற்று அதிக விலையில் கிடைக்கும் பிரீமியம் தரத்திலான ஸ்பிளெண்டர் மாடலாக சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC விளங்குகிறது. அதிகம் என்றவுடன் இந்த பைக்கின் விலையை இலட்சங்களில் எதிர்பார்க்க வேண்டாம்.
தற்போது மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC 2.0 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.86,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பளபளப்பான கருப்பு, கேண்டி பிளாஸிங் சிவப்பு, மேட் ஆக்ஸிஸ் கிரே, மேட் நெக்ஸஸ் நீலம் மற்றும் மேட் செஸ்ட்நட் பிரவுன் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC 2.0 பைக் கிடைக்கும்.

இதில் எந்த நிறத்தில் வாங்கினாலும் பைக்கின் விலை ரூ.86,500 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC 2.0 பைக்கின் தோற்றத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஸ்பிளெண்டர் பைக்குகளுக்கே உண்டான கிளாசிக் தோற்றம் அப்படியே பின்பற்றப்பட்டுள்ளது என்றாலும், பைக்கை சுற்றிலும் வழங்கப்படும் கிராஃபிக்ஸ் புதிய டிசைனில் புதிய நிறங்களில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பைக்கில் 'Hero', 'Super Splendor' உள்ளிட்ட லோகோக்கள் பிரீமியம் தரத்திலான 3டி எஃபெக்ட்டில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், இதற்கேற்றவாறு இருக்கை ஆனது இரு விதமான தையல்கள் உடன் அலங்கரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சக்கரங்களில் ரிம்களும் பார்ப்பவரின் கண்களை கவரக்கூடியதாக உள்ளன. தொழிற்நுட்ப அப்கிரேட்களாக, சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்குகளில் முதல்முறையாக ஹசார்ட் விளக்குகளை ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு கருதி வழங்கப்பட்டு இருக்கும் இந்த ஹசார்ட் விளக்குகளின் மூலம் ஒரே நேரத்தில் நான்கு இண்டிகேட்டர்களையும் ஒளிர செய்யலாம். இதனுடன், பைக்கின் முன்பக்க பிரேக்கிலும் அப்கிரேட் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறந்த பாதுகாப்பாக பைக்கின் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எளிதாக பைக்கை இயக்குவதற்காக ஹேண்டில்பாரில் புதியதாக என்ஜின் கில் ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, என்ஜின் இயங்குவதை உடனடியாக அணைக்க முடியும். இந்த பைக்கில் பொருத்தப்படும் 124.7சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 10.7 பிஎச்பி மற்றும் 6,000 ஆர்பிஎம்-இல் 10.6 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபலமான மற்றும் நம்பகமான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை பிரீமியம் தரத்திலான அம்சங்கள் உடன் வாங்க விரும்புபவர்களுக்கு புதிய சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC 2.0 பைக் ஏற்றதாக இருக்கும். பைக்கின் தோற்றம் மெருக்கேற்றப்பட்டு இருப்பதுடன், கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்களும் புதியதாக வழங்கப்பட்டு உள்ளதால், மற்ற சூப்பர் ஸ்பிளெண்டர் XTEC பைக் உரிமையாளர்களில் இருந்து இதன்பின் வாங்குபவர்கள் ஸ்பெஷல் ஆனதாக விளங்குவர்.


Click it and Unblock the Notifications