ஸ்பிளெண்டர் உருவாக்கும் ஹீரோ கம்பெனி எலெக்ட்ரிக் பைக் உருவாக்குனா இப்படித்தான் இருக்கும்! அறிமுகம் எப்போது?
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான 'புராஜெக்ட் விடா வி.எக்ஸ்.இசட்' (Project Vida VXZ)-க்கான காப்புரிமையை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் இத்தாலி நாட்டில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஹீரோ விடா எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) இந்த 2026 இறுதி அல்லது 2027 தொடக்கத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான், இந்த எலெக்ட்ரிக் பைக்கின் தோற்றத்திற்கான காப்புரிமையை ஹீரோ மோட்டோகார்ப் பெற்றுள்ளது. அமெரிக்கன் எலெக்ட்ரிக் பைக் நிறுவனமான ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் (Zero Motorcycles) உடன் இணைந்து உருவாக்கப்படும் இது, வெகுஜன உற்பத்திக்குத் தயாராகி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் மூலம் ஹீரோ, இந்திய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் நுழைகிறது.

புதிய, தனித்துவமான இவி தளத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய விடா விஎக்ஸ்இசட், இந்திய சாலை நிலைமைகளுக்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இது கூர்மையான, மஸ்குலர் நேக்கட் ஸ்ட்ரீட்ஃபைட்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். இதன் வடிவமைப்பு அமெரிக்காவில் உள்ள எந்த ஜீரோ எலெக்ட்ரிக் பைக்கையும் பிரதிபலிக்கவில்லை. இதன் அம்சங்களில் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப், தனித்துவமான எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் ஆகியவை அடங்கலாம்.
ஸ்மார்ட்போன் இணைப்புடன் பல ரைடிங் மோடுகளை வழங்கும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை நவீன டிஜிட்டல் அனுபவத்தை வழங்கக்கூடியதாக இருக்கும். விளையாட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் வகையில், பைக்கின் முன்பக்கத்தில் USD ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்படலாம்.

இந்த எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுகத்திற்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், இதன் தோற்றம் EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதன் மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது. அதன்படி, மேம்பட்ட பிரேக்கிங் மற்றும் வெப்பச் சிதறலுக்காக இரு சக்கரங்களிலும் பெடல் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ட்யூப்லெஸ் டயர்களுடன் கூடிய 17 அங்குல அலாய் சக்கரங்கள் இதன் சிறப்பம்சங்களாக இருக்கும்.
பாரம்பரிய செயின் டிரைவை விட அமைதியான, திறன் வாய்ந்த பெல்ட் டிரைவ் சிஸ்டம் இதில் உள்ளது. இரண்டாக பிளவுப்பட்ட இருக்கைகள் பயணச் சௌகரியத்தை அதிகரிக்கக் கூடியவைகளாக உள்ளன. பைக்கின் மையத்தில் பொருத்தப்பட்ட பேட்டரி பேக், ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கி.மீ ரேஞ்சை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), ஓபன் எலக்ட்ரிக் (Oben Electric), ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors) மற்றும் அல்ட்ரா வயலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்க்கெட்டில் போட்டி உருவாகி வந்தாலும், பாரம்பரிய பெட்ரோல் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹீரோ ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால், சாதகமான அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான விலையுடன், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற ஒரு பெரிய உற்பத்தியாளர் இந்த பிரிவில் நுழைவது, சந்தைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும்.
விடா விஎக்ஸ்இசட் எலெக்ட்ரிக் பைக்கின் காப்புரிமை வெளியீடு, ஹீரோ நிறுவனம் அதன் உற்பத்திக்குத் தயாராகுவதில் தீவிரம் காட்டுவதை சுட்டிக்காட்டுகிறது. தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இதன் வெளியீடு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. ஏனெனில், அந்த அளவிற்கு தினசரி நகர்ப்புற பயணங்களுக்கேற்ப இந்த இ-பைக்கின் செயல்திறன் இருக்கும்.


Click it and Unblock the Notifications








