ஆந்திராவிற்கு படையெடுக்கும் முன்னணி நிறுவனங்கள்! நாயுடுகாரு அடிச்சு விளையாடுறாரு!
ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் (Telugu Desam Party) ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு சமீப காலமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டுள்ளது.
கூகுள் (Google) நிறுவனத்தின் சமீபத்திய முதலீடு இதற்கு ஒரு உதாரணம். ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டிணத்தில் (Visakhapatnam), கூகுள் (Google) நிறுவனத்தின் ஏஐ டேட்டா சென்டர் (AI Data Centre), 87,520 கோடி ரூபாயை முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது. அதேபோல் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனமும், ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதலீடு செய்யவுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் 2,200 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இந்த வரிசையில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp)நிறுவனமும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் 3,200 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குளோபல் பார்ட்ஸ் சென்டர் (Global Parts Centre), ராஜஸ்தான் மாநிலம் நீம்ரானா பகுதியில் இயங்கி வருகிறது. இதை தொடர்ந்து 2வது குளோபல் பார்ட்ஸ் சென்டரை ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் (Tirupati) ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அமைக்கவுள்ளது. இதற்காக 750 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆக்ஸஸரீஸ் தொழிலை விரிவுபடுத்த இது உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் திருப்பதியில் ஏற்கனவே இயங்கி வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்கவும் முதலீடு செய்யப்படவுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் திருப்பதி தொழிற்சாலையில் தற்போதைய நிலையில் ஒரு ஆண்டுக்கு 0.6 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்.
அதாவது அங்கு ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யலாம். இந்த உற்பத்தி திறனை (Production Capacity) அடுத்த ஒரு சில ஆண்டுகளில் 1.2 மில்லியன் - 1.5 மில்லியனாக உயர்த்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது திருப்பதி தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 12 லட்சம் - 15 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இப்படி திருப்பதியில் இரண்டாவது குளோபல் பார்ட்ஸ் சென்டரை அமைப்பது மற்றும் திருப்பதி தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிப்பது போன்ற விஷயங்களுக்காக ஒட்டுமொத்தமாக 3,200 கோடி ரூபாயை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. முன்னதாக திருப்பதி தொழிற்சாலையில் தற்போது ஐசி இன்ஜின் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கூடவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களும் அங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழ்நாட்டின் சென்னை (Chennai) மற்றும் ஓசூர் (Hosur) போன்ற பகுதிகள், இந்தியாவிலேயே மிகவும் முக்கியமான வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாக திகழ்கின்றன. ஏனெனில் இந்த பகுதிகளில் ராயல் என்பீல்டு, டிவிஎஸ் (TVS), ஹூண்டாய் (Hyundai) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) என ஏராளமான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இருக்கின்றன.
இந்த வரிசையில் திருப்பதியும் தற்போது மிக முக்கியமான வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. நாங்கள் இந்த செய்தியின் தொடக்கத்திலேயே குறிப்பிட்ட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையும் திருப்பதி பகுதியில்தான் அமைக்கப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications