ஸ்ப்ளெண்டரைப் போலவே புதிய 125 சிசி பைக்கை இந்தியாவில் வெளியிடும் ஹீரோ
இந்தியாவில் கம்யூட்டர் பைக் கிங் என்றால் அது ஹீரோ மோட்டோகார்ப் தான். ஸ்பிளெண்டர் பிளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர், கிளாமர், HF டீலக்ஸ் மற்றும் பேஷன் ப்ரோ என ஹீரோவின் பெயர் சொல்லும் கம்யூட்டர் பைக்குகள் நிறைய இருக்கின்றன. இவை வாடிக்கையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் மற்றுமொரு புதிய கம்யூட்டர் பைக் ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது ஹீரோ.
சமீபத்தில் தான் இந்தப் புதிய பைக்கின் டிசைனிற்கு காப்புரிமையும் பெற்றிருக்கிறது. காப்புரிமைக்குப் பதிவு செய்வதற்காக ஹீரோ கொடுத்த புதிய பைக்கின் டிசைன் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இந்த புதிய பைக் என்னவாக இருக்கும் என நாங்களும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தோம்.

பார்த்தவுடனே தற்போது இந்தியாவில் ஹீரோ அல்லது வேறு எந்த நிறுவனத்தின் கம்யூட்டர் பைக்கும் கொண்டிருக்காத வித்தியாசமான டிசைனை இந்தப் புதிய பைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த டிசைன் இந்தியாவில் தான் இல்லை, உகாண்டாவில் இருக்கிறது. ஆம், உகாண்டா, நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இதே போன்ற வடிவமைப்பு கொண்ட பைக்கை ஹீரோ விற்பனை செய்து வருகிறது.
ஹண்டர் 125 (Hunter 125) என்ற பெயரில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு கம்யூட்டர் பைக்கை விற்பனை செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப். டிவிஎஸ் XL போல அந்நாடுகளில் அனைத்து விதமான கடினமான வேலைகளுக்கும் பயன்படும் ஒரு பைக்காக இந்த ஹண்டர் 125 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஹண்டர் 125 பைக்கில் இருக்கும் ஒரு தனித்துவமான அம்சம், அதன் இரண்டு பக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும் அகலமான ஃபுட்ரெஸ்ட் தான். நம்ம ஊர் கம்யூட்டர் பைக்குகளில் பெண்கள் பின்னாள் பாதுகாப்பாக அமர்வதற்கு ஏதுவாக ஒருபக்கம் மட்டும் அகலமான ஃபுட்ரெஸ்ட் பின்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கும். ஹண்டர் 125 பைக்கில் இந்த வகையான அகலமான ஃபுட்ரெஸ்ட் பைக்கின் இரண்டு பக்கமும் இருக்கும். புதிதாக பதிவு செய்யப்பட்டிருக்கும் ஹீரோ பைக்கிலும் இதே போன்ற ஃபுட்ரெஸ்ட் டிசைன் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
அப்படியென்றால் ஹண்டர் 125 பைக்கைத் தான் இந்தியாவில் ஹீரோ வெளியிடவிருக்கிறதா? அது தான் இல்லை. ஹண்டர் 125 பைக்கில் இருந்து நிறைய டிசைன் அம்சங்களை கடன் வாங்கி இந்தப் புதிய பைக்கில் ஹீரோ பயன்படுத்தியிருக்கிறது. ஆனால் இன்ஜின் ஹண்டர் 125 பைக்கின் இன்ஜின் கிடையாது. மாறாக இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கிளாமர், சூப்பர் ஸ்பிளெண்டர் ஆகிய பைக்குகளின் 125 சிசி இன்ஜினைப் போலவே இருக்கிறது புதிய பைக்கின் இன்ஜின்.
பைக்கின் சைடு பேனல்கள், ஒரு காலத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சூப்பர் ஸ்பிளெண்டர் ப்ரோ கிளாஸிக் பைக்கில் இருந்ததைப் போலவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த டிசைன் அம்சங்களை எல்லாம், மேலே குறிப்பிட்டிருக்கும் பைக்குகளில் இருந்தே ஹீரோ எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறது தெரிகிறது. ஆனால், அங்கே இருப்பது போல் அப்படியே பயன்படுத்தவில்லை. அவற்றை கொஞ்சம் வேறு மாதிரியாக மாற்றிப் பயன்படுத்தியிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக, எந்தெந்த டிசைன் அம்சங்களை மற்றும் பயன்பாட்டு அம்சங்கள் எல்லாம் வாடிக்கையாளர்களிடம் ஹீரோ வொர்க்அவுட் ஆகும் என நினைத்ததோ அந்த அம்சங்களை எல்லாம் எடுத்துப் போட்டு புதிய பைக்கை அந்நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. இதுவொரு 125 சிசி பைக் தான் என்பதை மட்டும் அதன் இன்ஜின் வடிவமைப்பை வைத்துக் கூற முடிகிறது.
இந்தியாவில் ஹீரோ 100 சிசி பிரிவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் பைக்குகளின் கையில் அவை பத்திரமாக இருக்கின்றன. ஆனால் 125 சிசி பிரிவில் அதேபோல் ஒரு மெகா வெற்றி கொடுக்கும் பைக் ஹீரோவிடம் இல்லை. ஹீரோவின் 125 சிசி பைக்குகள் எல்லாம் 25,000 யூனிட்டுகள் அல்லது அதற்கும் கீழாகவே விற்பனையாகி வருகின்றன. மற்ற நிறுவனங்களுக்கும் அதே நிலை தான்.
எனவே தான் புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கி அதற்கேற்ப இந்தப் புதிய பைக்கை ஹீரோ உருவாக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக இதன் வட்ட வடிவ முகப்பு விளக்குகள், ட்வின் பாடு டேஷ்போர்டு ஆகியவற்றை எல்லாம் பார்க்கும் போது ஹீரோ ஏதோவொரு முடிவுடன் இருப்பது தெரிகிறது. விரைவில் இந்த பைக் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான விலையில், அடித்து வேலை வாங்கக்கூடிய வகையிலான பைக்காக ஹீரோவின் இந்த புதிய பைக் தெரிகிறது. குறிப்பாக ஹண்டர் 125 பைக்கின் டிசைனை அடிப்படையாகக் கொண்டிருக்கும் போது அப்படி நாங்கள் எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை.
மேலும், இந்தியா போன்ற உழைக்கும் வர்க்கம் அதிகம் இருக்கும் ஒரு நாட்டில், இப்படி ஒரு பைக்கை வெளயிட ஹீரோ முயற்சி செய்யாமல் இருந்தால் தான் தவறு. எனினும், புதிய பைக் இப்படித் தான் இருக்கும் எனத் திட்டவட்டமாக இப்போது கூற முடியாது. எனவே பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications