பைக்குகளை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சர்கள் எதுக்கு நேரில் வரனும்? இதுக்கு பின்னால் இவ்வளவு காரணம் இருக்குதா?
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெற்றிக்கரமாக அதன் முதல் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. அதுவும் ஒன்றல்ல, பிரபலமான ஸ்பிளெண்டர் மற்றும் எச்.எஃப் டீலக்ஸ் என இரு பைக்குகளில் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பெட்ரோல் பைக்குகளுடன் ஒப்பிடுகையில் இவை எந்த அளவிற்கு வேறுப்பட்டவை என்பதையும், ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகளில் ஹீரோ நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் என்ன என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் பெட்ரோலின் பயன்பாட்டை குறைப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஏனெனில் இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை குறைக்க முடியும்; அந்நிய செலவாணியை குறைக்க முடியும். பெட்ரோலுக்கு மாற்றாக, CNG, ஹைட்ரஜன், எத்தனால், எலெக்ட்ரிக் என ஏகப்பட்ட மாற்று எரிபொருட்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதில், எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்களை தான் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வாகனங்கள் என அழைக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால், வழக்கமான பெட்ரோலில் இருந்து சற்று வேறுப்பட்ட எரிபொருளில் இயங்கக்கூடிய வாகனங்கள் என்பது ஆகும். எத்தனாலை இதுநாள் வரையில் பெட்ரோல் உடன் கலந்தே வாகனங்களில் பயன்படுத்தி வருகிறோம். 90% பெட்ரோல் மூலக்கூறுகள் உடன் 10% எத்தனால் கலக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.
அதன்பின் இது 80% மற்றும் 20% என மாறியது. 70% மற்றும் 30% ஆக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. இந்த நிலையில்தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சுமார் 85% எத்தனாலில் இருந்து முழுவதுமாக 100% எத்தனாலில் இயங்கக்கூடிய ஸ்பிளெண்டர் மற்றும் எச்.எஃப் டீலக்ஸ் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக்குகளை முழுவதுமாக பெட்ரோல் இல்லாமல் இயக்க முடியும் என்பதினாலேயே சிறப்புமிக்க இந்த ஹீரோ ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகளின் அறிமுக நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் புரி உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.
இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியதாக அமைந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) ஹர்ஷவர்தன் சிதலே, ஹீரோ நிறுவனத்தில் இருந்து அடுத்த இரண்டு வருடங்களில் புதியதாக 12 ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பைக்குகளில் பெட்ரோலை பயன்படுத்த தேவை இருக்காது என்பது மட்டுமின்றி, அதிகப்பட்சமாக 7% கூடுதல் இயக்க ஆற்றலையும், 3% கூடுதல் டார்க் திறனையும் பெறலாம். இவ்வாறு நன்மைகள் இருக்கும் போதிலும், பெட்ரோலை விட எத்தனால் குறைவான ஆற்றலை கொண்டிருப்பதாகவும், இதனால் லிட்டருக்கு மைலேஜை அதிகமாக பெற முடியாது எனவும் ஹீரோ மோட்டோகார்ப் CEO ஹர்ஷவர்தன் சிதலே கூறியுள்ளார்.
இதனால், அதிக எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள ஹர்ஷவர்தன் சிதலே, லிட்டருக்கு அதிக தொலைவிற்கு பயணிக்க முடியவில்லை என்றால் தற்போதைய இ20 பெட்ரோலை காட்டிலும் குறைந்த விலையில் அதிக எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அடுத்த 2 வருடங்களில் 12 புதிய ஹீரோ ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அப்படியென்றால் 2 மாதங்களுக்கு ஒரு பைக். இவ்வாறு மார்க்கெட்டிற்கு வரும் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், இந்தியாவில் இ85- இ100 பெட்ரோலை பெறுவது இன்னமும் கடினமானதாகவே உள்ளது.
அப்படியே கிடைத்தாலும், என்ன காரணம் என்றே தெரியாமல் விலைகள் அதிகமாக உள்ளன. இதனாலேயே நம் இந்திய மக்கள் மத்தியில் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகள் இன்னும் கவனத்தை பெறாத சூழலில், ஹீரோ நிறுவனத்தில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள ஸ்பிளெண்டர் மற்றும் எச்.எஃப் டீலக்ஸ் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications