இந்த இரண்டு ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குகளுக்கும் இடையே என்ன வேறுபாடு? எதை வாங்குவது? கவனமா படிங்க!
இந்தியாவில் தினசரி போக்குவரத்தை மிகவும் எளிதாக்கிய வாகனங்களுள் ஒன்று ஹீரோவின் ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus). நினைவு கூர்ந்து பார்க்கும் போது சிறு வயதில் எங்கள் வீட்டிலும் ஒரு ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக் இருந்தது. செகண்டு ஹேண்டாக அதனை வாங்கியிருந்தோம். அப்போது பைக்கின் ரெகுலர் சர்வீஸ் குறித்த புரிதல் பெரிய அளவில் இல்லாத காரணத்தினால் பல ஆண்டுகள் சர்வீஸ் செய்யாமலேயே பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தோம்.
மூன்றாண்டு வரை இன்ஜின் ஆயில் கூட மாற்றாமல் இருந்த போதிலும் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஸ்மூத்தாக இயங்கு வந்தது அந்த பைக். அப்படி மிக மிகக் குறைவான பராமரிப்புச் செலவு கொண்ட பைக்காகவும் ஸ்பிளெண்டர் பிளஸ் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பைக்கின் ஃபிளெக்ஸ் ஃப்யூல் வெர்ஷனை சமீபத்தில் வெளியிட்டது ஹீரோ.

வழக்கமான ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor Plus) மற்றும் ஃபிளெக்ஸ் ஃப்யூல் ஸ்ப்ளெண்டர் பிளஸ் (Splendor Plus Flex Fuel) பைக்குகளுக்கு இடையே என்ன வேறுபாடு? ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கை வாங்குவதனால் என்ன நன்மை? அதனை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான காரணம்? ஆகியவை குறித்த தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.
ரெகுலரான ஸ்ப்ளெண்டர் பிளக் பைக்கை விட கூடுதல் பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கும் வகையில் ஃப்ளெக்ஸ் ப்யூல் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கை மேம்படுத்தியிருக்கிறது ஹீரோ. இரண்டு பைக்கிலும் ஒரே 97.2 சிசி இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் E85 எரிபொருளில் இயங்கும் போது 7 சதவீதம் வரை கூடுதலாக 8.04 hp பவரையும், 3 சதவீதம் வரை கூடுதலாக 8.3 Nm டார்க்கையும் இந்த இன்ஜின் உற்பத்தி செய்கிறது.

வழக்கமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலை (E20) மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஆனால் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் 85 சதவீதம் வரையிலான எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருளைப் (E85) பயன்படுத்த முடியும். அதாவது, தூய்மையான பெட்ரோலையும் இந்த இன்ஜினில் பயன்படுத்தலாம், இல்லையென்றால் 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலந்த எரிபொருளையும் இந்த பைக்கில் பயன்படுத்தலாம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் வழக்கமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் E85 எரிபொருளை பயன்படுத்த முடியாது, E20 பெட்ரோலை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் E20 எரிபொருளையும் பயன்படுத்தலாம், E85 எரிபொருளையும் பயன்படுத்தலாம், தூய்மையான பெட்ரோலையும் பயன்படுத்தலாம்.
எத்தனால் இந்தியாவிலேயே விவசாய எச்சங்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் இதனைப் பயன்படுத்துவது இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இது உதவும். E85 பெட்ரோலைப் பயன்படுத்தும் போது அதற்கு இணையான பெட்ரோலை வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் செலவு குறைகிறது. இது இந்தியாவில் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவுவதோடு, சுயசார்பாக இருக்கவும் உதவி செய்கிறது.
பெட்ரோலை விட குறைவான அளவு காற்று மாசே இந்த எத்தனால் கலந்த எரிபொருள் மூலம் வெளியேறுகிறது. E85 எரிபொருளைப் பயன்படுத்துவதனால் கார்பன் மோனாக்ஸைடு 77 சதவீதமும், ஹைட்ரோகார்பன் 14 சதவீதமும், மீத்தேன் அல்லாத ஹைட்ரோகார்பன் வெளியேற்றம் 40 சதவீதம் வரையிலும் குறைகிறது. ஒரே கல்லில் பல மாங்காய் என்பது போலத் தான் இந்த E85 எரிபொருளில் இயங்கும் வாகனத்தின் பயன்பாடும்.
மேலும், வழக்கமான ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் மட்டுமே கூடுதலான விலையில் இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் வெளியாகியிருக்கிறது. ஸ்டாண்டர்டு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கானது 77,557 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் நிலையில், ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை 78,710 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே நாம் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்ப்ளெண்டர் பிளஸ் அல்லது வேறு ஏதேனும் கம்யூட்டர் பைக்கை அடுத்த சில மாதங்களில் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதற்கு பதிலாக ஸ்ப்ளெண்டர் பிளஸ் ஃபிளெக்ஸ் ஃப்யூல் அல்லது HF டீலக்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்கை வாங்கவே நாங்கள் பரிந்துரைப்போம். ஏனெனில் வரும் ஆண்டுகளில் பெட்ரோலில் எத்தனால் கலப்பை தொடர்ந்து உயர்த்தவே மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் அதிகளவிலான எத்தனால் கலப்பில் இயங்கக்கூடிய இது போன்ற ஃப்ளெக்ஸ் ஃப்யூல் பைக்கை வாங்குவதே சிறந்தது.


Click it and Unblock the Notifications