வெறும் 45,000 ரூபாய் விலை கொண்ட ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஒரே வருஷத்துல விற்பனை 175 சதவீதம் கூடிருச்சு!
இந்தியாவில் டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டுகளில் ஒன்றாக இருந்து வருகிறது விடா. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தங்களுடைய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த விடா பிராண்டின் பெயரில் தான் விற்பனை செய்து வருகிறது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே இந்த நிறுவனத்தின் பிரதான குறிக்கோளாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஓராண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் பன்மடங்கும் மேம்பட்டிருக்கிறது விடா. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது தற்போது அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மூன்று மடங்கு வரை உயர்ந்திருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் இந்தியாவில் 7,920 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையே விடா விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த ஜூன் மாதம் இந்த அளவு 175 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

ஆம், சுமார் 175 சதவீதம் அதிகமாக 21,792 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது விடா. இந்த விற்பனை அளவுடன் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையின் 11.26 சதவீதம் சந்தைப் பங்குகளையும் அந்நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. கடந்தாண்டு இது 7.15 சதவீதமாக இருந்தது. மேலும் தற்போது இந்தியாவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யும் நிறுவனங்களில் நான்காவது இடத்தில் இருக்கிறது ஹீரோ விடா.
அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வது மட்டுமின்றி, குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாகவும் ஹீரோ விடா இருக்கிறது. தற்போது V2 மற்றும் VX2 என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விடா பிராண்டின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் VX2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் மிகவும் குறைவான விலையிலேயே வாடிக்கையாளர்கள் வாங்க முடிகிற ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த VX2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு BaaS (Battery as a Service) திட்டத்தையும் வழங்கி வருகிறது ஹீரோ. இந்தத் திட்டத்தின் கீழ் 44,990 ரூபாய் என்ற குறைவான எக்ஸ்-ஷோரூம் விலைக்கே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் வாங்க முடியும். பேட்டரியுடன் இந்த ஸ்கூட்டரானது 83,490 ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது.
இந்த விலைக்கு 2.2 kWh பேட்டரி பேக் தேர்வை VX2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுத்துள்ளது ஹீரோ. இது ரிமூவபிள் டைப் பேட்டரி தான். எனவே ஸ்கூட்டரை பார்க்கிங்கில் வைத்து தான் சார்ஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. பேட்டரியை வீட்டினுள் எடுத்து வந்து சார்ஜ் செய்து மீண்டும் ஸ்கூட்டரில் பொருத்திக் கொள்ளலாம். இந்த வசதியுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களில் இது முக்கியமான ஒன்று.
இந்த பேட்டரியை 2.41 நிமிடத்திலேயே 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும் என ஹீரோ தெரிவித்துள்ளது. 92 கிமீ வரையிலான ரேஞ்சை இந்த ஸ்கூட்டர் கொடுக்கிறது. இது குறைவான ரேஞ்சு தான் என்றாலும், ஸ்கூட்டரின் தொடக்க விலையும் குறைவாக இருக்கும் போது இந்த ரேஞ்சு ஓகேவாகத் தான் இருக்கிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்பை விட வேகமாக வளர்ந்து வருகிறது ஹீரோ விடா. இதே வேகத்தில் சென்றால் விரைவிலேயே டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களுக்கு எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நேரடிப் போட்டியாக வந்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாப் 5 நிறுவனங்களிலேயே மிகவும் குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியும் என்றால் அது ஹீரோவின் விடா பிராண்டில் மட்டும் தான். மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 1 லட்சம் ரூபாய்க்கு குறைவான விலையில் நம்மால் வாங்க முடியாது. வரும் ஆண்டுகளில் விடாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை இன்னும் அதிகரிக்கவே செய்யும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications