மூன்று சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் ஹீரோ.. எங்கேயும் இந்த மாதிரி ஒன்னைப் பார்த்திருக்க மாட்டீங்க!
ஆட்டோமொபைல் சந்தை ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கும் போது, சில நேரங்களில் சில நிறுவனங்கள் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும். அந்த முயற்சிகள் சந்தையின் போக்கையே மொத்தமாக திருப்பிவிடவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியான ஒரு முயற்சியாக ஹீரோவின் இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாம் பார்க்கலாம்.
விடா பிராண்டின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், விடா பிராண்டின் கீழ் வெளியிடும் நோக்கத்தோடு புதிய மூன்று சக்கர வாகனம் ஒன்றை உருவாக்கி வருகிறது ஹீரோ. இதனை பொதுவாக எப்படி அழைப்பது என்பது யாருக்குமே புரியாத புதிர் தான். ஏனெனில் இப்படியொரு வாகனத்தை இதுவரை இந்திய ஆட்டோமொபைல் சந்தை பார்த்ததில்லை.

இதனை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று கூற முடியாது. எலெக்ட்ரிக் பைக் என்றும் கூறமுடியாது. பொதுவாக அனைவரும் சேர்ந்து ஒரு பெயர் வைக்கும் வரை மூன்று வீல்கள் இருப்பதனால் ட்ரைக் (Trike) என இப்போதைக்குக் குறிப்பிடுவோம். கடந்தாண்டு நவம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற்ற EICMA என்ற இருசக்கர வாகனங்களுக்கான ஆட்டோமொபைல் நிகழ்வில் இதனை கான்செப்ட்டாக காட்சிப்படுத்தியிருந்தது ஹீரோ.
நெக்ஸ் 2 (Nex 2) என இதனை அப்போது ஹீரோ குறிப்பிட்டது. Nex 1, Nex 2 மற்றும் Nex 3 என மூன்று கான்செப்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை EICMA நிகழ்வில் காட்சிப்படுத்தியிருந்தது ஹீரோ. மூன்றுமே மூன்று விதமான வகையில் வித்தியாசமாக இருந்தது. Nex 1 எலெக்ட்ரிக் வாகனமானது கையில் எடுத்துச் செல்லும் வகையில் போர்டபிளான ஒன்றாக இருந்தது.

Nex 2-வை இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள். Nex 3, பேர் பயணிக்கும் வகையில் கார் போன்ற வடிவமைப்பிலான நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனமாக இருந்தது. இந்த மூன்றில் நெக்ஸ் 2-வின் டிசைனை இந்தியாவில் தற்போது காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது ஹீரோ. இதன் மூலம் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் வாகனம் குறித்த எந்தவொரு தகவலையும் ஹீரோ நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும் இதன் வடிவமைப்பே ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது. நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான வாகனமாக இதனை ஹீரோ வடிவமைத்து வருகிறது. மூன்று சக்கரங்கள் இருப்பதனால் இது செல்ஃப் பேலன்ஸ் செய்து கொள்ளும். முழுமையாக நிறுத்தும் போது நாம் பேலன்ஸ் தவறுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
இதனால் இதன் உயரமும் சற்று அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் முன்பக்கம், இன்ஜின் இருக்கும் இடத்தில் பெரிய ஸ்டோரேஜ் ஸ்பேஸைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பிராக்டிகலான அம்சம் இதுவாகத் தான் இருக்க வேண்டும். இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில் வழக்கமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளை விட அதிக விலையே இதற்கு நிர்ணயிக்கப்படும்.
அந்த வகையில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் மேலான விலையையே இந்த நெக்ஸ் 2 எலெக்ட்ரிக் வாகனம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று சக்கரங்களைக் கொண்டிருந்தாலும், வழக்கமான இருசக்கர பைக் போலவே இதனை எளிதாக ஓட்ட முடியும். வளைக்கும் போதும் முன்பக்கம் இரண்டு சக்கரங்களும் ஒத்துழைக்கும் வகையிலான சஸ்பென்ஷன் செட்டப்பையே இந்த வாகனம் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.
இது எப்படிங்க வொர்க்அவுட் ஆகும் என நீங்கள் கேட்பது கேட்கிறது. இதேபோல் முன்பக்கம் இரண்டு சக்கரங்கள் மற்றும் பின்பக்கம் ஒரு சக்கரத்துடன் கூடிய ஸ்கூட்டர் ஒன்று ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. யமஹாவின் டிரைசிட்டி 300 என்ற ஸ்கூட்டர் தான் அது. ஆனால் இதனைப் போல இல்லாமல், அது தெளிவாக ஸ்கூட்டர் வடிவமைப்புடன், முன்பக்கம் இரண்டு சக்கரங்களை கொண்ட ஒன்றாக இருக்கும் அவ்வளவு தான்.
விடா பிராண்டை ஐரோப்பாவிலும் வலுவாக பிளேஸ் செய்ய விரும்புகிறது ஹீரோ. எனவே இந்த டிரைசிட்டி 300 ஸ்கூட்டருக்குப் போட்டியான எலெக்ட்ரிக் மாற்றாகக் கூட இந்த நெக்ஸ் 2-வை அந்நிறுவனம் உருவாக்கி வரலாம். எனினும் இந்தியாவில் சோதனை அடிப்படையிலாவது இந்த வாகனத்தை ஹீரோ விற்பனைக்குக் கொண்டு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்ற வாகனங்கள், பிராக்டிகாலிட்டிக்காவோ, பெர்ஃபாமன்ஸுக்காகவோ வாங்கப்படாமல், ஃபன் டூ டிரைவ் அனுபவத்திற்காகவே வாங்கப்படுபவை. ஆனால் அப்படியான வாடிக்கையாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா, அதுவும் அதிகளவில் இது போல சோதனை வாகனங்கள் வாங்கப்படுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications