ஹிமாலயனுக்குப் போட்டியாக குறைவான விலையில் புதிய அட்வென்சர் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் ஹீரோ
எக்ஸ்பல்ஸ் 200 பைக் மூலமாக பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு அட்வென்சர் அனுபவத்தைக் கொடுத்த ஹீரோ, அதனை அடுத்து கிராண்டாக செய்யவிருக்கிறது. ஆம், பெரிய இன்ஜின் கொண்ட அட்வென்சர் பைக் ஒன்றை விரைவில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். கடந்தாண்டு EICMA நிகழ்விலேயே இது தொடர்பாக சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த பைக்கை இந்தியாவில் சோதனை செய்யத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
இந்தியாவிலேயே சிறிய இன்ஜின் கொண்ட அட்வென்சர் பைக்காக எக்ஸ்பல்ஸ் 200 இருந்தாலும், அதுவொரு முறையான அட்வென்சர் பைக். எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல், பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான ஒரு அட்வென்சர் பைக்காக அதனை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது ஹீரோ. இதுவே புதிய பெரிய இன்ஜின் கொண்ட எக்ஸ்பல்ஸ் பைக்கின் மீதான ஆர்வத்தை உயர்த்துகிறது.

இந்தப் புதிய பெரிய இன்ஜின் கொண்ட ஹீரோ அட்வென்சர் பைக்கானது எக்ஸ்பல்ஸ் 421 என அழைக்கப்படும் எனத் தெரிகிறது. பெயரை வைத்துப் பார்க்கும் போது 421 சிசி இன்ஜினை இந்தப் புதிய பைக்கில் ஹீரோ பயன்படுத்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதுவரை எந்த ஹீரோ பைக்கிலும் பயன்படுத்தாத, 421 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினாக, பவர்ஃபுல்லான ஒன்றாக புதிய இன்ஜின் இருக்கும்.
இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஹீரோ கொடுக்கலாம். தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (452 சிசி இன்ஜின்) மற்றும் கேடிஎம் 390 அட்வென்சர் S (399 சிசி இன்ஜின்) உள்ளிட்ட அட்வென்சர் பைக்குகளுக்குப் போட்டியாக புதிய ஹீரோ அட்வென்சர் பைக் விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

முன்பை விட கடந்த சில மாதங்களில் இந்த எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் சோதனையை ஹீரோ துரிதப்படுத்தியிருப்பது தெரிகிறது. இதனால் அடுத்த சில மாதங்களிலோ அல்லது இந்தாண்டு இறுதிக்குள்ளாகவோ இந்த பைக்கை ஹீரோ விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தாண்டு நவம்பர் மாதம் ஐரோப்பாவில் நடைபெறும் EICMA நிகழ்வில் இந்தப் புதிய பெரிய இன்ஜின் கொண்ட அட்வென்சர் பைக்கை ஹீரோ அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
மேவ்ரிக் 440 பைக்கின் விற்பனையை இந்தியாவில் ஹீரோ நிறுத்தியதையடுத்து, அதன் புதிய ஃபிளாக்ஷிப் பைக்காக இந்த எக்ஸ்பல்ஸ் 421-ஏ இருக்கும். இந்த பைக்கை முற்றிலுமாக ஹீரோ வடிவமைத்து வருவது பெயர் சொல்லும் ஒரு விஷயமாக இருக்கும். மேலும், மெக்கானிக்கலாகவும் சரி, தொழில்நுட்ப ரீதியிலும் சரி, மேம்பட்ட அம்சங்கள் கொண்ட ஒரு பைக்காகவே இந்தப் புதிய ஹீரோ அட்வென்சர் பைக் இருக்கும் எனத் தெரிகிறது.
குறிப்பாக உயரமான விண்டு ஸ்கிரீன், பெரிய எரிபொருள் டேங்க், லாங் டிராவல் கொண்ட சஸ்பென்ஷன் செட்டப்புகள், வயல் ஸ்போக் வீல்கள், நேராக அமர்ந்து ஓட்டும் வகையிலான ரைடிங் பொசிஷன் ஆகிய அம்சங்களை புதிய பைக் கொண்டிருப்பதை ஸ்பைஷாட் புகைப்படங்களின் மூலமே நாம் பார்க்க முடிகிறது. அதில் பைக் முழுவதுமாகவும் மறைக்கப்பட்டிருந்தாலும், சில்அவுட்டே நம்மை சிலிர்ப்படைய வைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
தற்போதைய 400-450 சிசி அட்வென்ச் பைக்குகளை வைத்துப் பார்க்கும் போது 3 லட்சம் ரூபாய் அல்லது அதனை ஒட்டிய விலையில் இந்தப் புதிய பைக் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 லட்சம் ரூபாய்க்கு கொஞ்சம் குறைவான விலையில் இது வெளியாகலாம் என நினைக்கிறோம். ஹீரோவிற்கு அதிகம் விற்பனையாகும் பைக்காக இது இருக்காது. ஆனால் ஹீரோவின் பிராண்டு வேல்யூவை உயர்த்தும் ஒரு பைக்காக புதிய எக்ல்பல்ஸ் 421 இருக்கும்.
தலைப்பில் 'ஹிமாலயனக்குப்' என எழுத்துப்பிழையுடன் இருந்தது 'ஹிமாலயனுக்குப்' என மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications