ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனின் விலையில் ஹீரோ களமிறக்கும் புதிய பைக்! லடாக்கில் சோதனை ஓட்டம்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக எக்ஸ்பல்ஸ் 421 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹீரோ நிறுவனத்தின் புதிய விலைமிக்க அட்வென்ச்சர் பைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ள இது தற்போது தீவிர சோதனை ஓட்டங்களில் உள்ளது. அந்த வகையில் லடாக்கில் பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே சோதனை செய்யப்பட்ட எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் எக்ஸ்பல்ஸ் பைக்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. ஏனெனில், எக்ஸ்பல்ஸ் பைக்குகளுக்கு எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனாலேயே 200சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் அதன்பின் எக்ஸ்பல்ஸ் 210 பைக்காக மாற்றப்பட்டது.

அந்த வரிசையில், பவர்ஃபுல்லான ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்காக எக்ஸ்பல்ஸ் 421 உருவாக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே, ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்குகள் கரடுமுரடான அட்வென்ச்சர் பயணங்களுக்கு கொண்டுச் செல்லக் கூடியவைகளாக உள்ளன. அப்படியிருக்கையில், ஆற்றல்மிக்க 421சிசி என்ஜின் உடன் உருவாக்கப்படுவது எக்ஸ்பல்ஸ் பைக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடியதாக அமைந்துள்ளது.
இதனாலேயே இந்த சோதனை ஓட்டம் ஆனது உயரமான பனி படர்ந்த மலைகள் நிறைந்த லடாக் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, புதிய எக்ஸ்பல்ஸ் 421 பைக் ஆனது இவ்வாறான அசாதாரணமான பயணங்களுக்கும் கொண்டு செல்லக்கூடியது என்பதை ஹீரோ நிறுவனம் மறைமுகமாக நமக்கு தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, இவ்வாறான பைக்குகளை சோதனை செய்வதற்கு லடாக் போன்ற பகுதிகள் பொருத்தமானவை ஆகும்.

பைக் இன்னும் அறிமுகம் செய்யப்படாததால், இந்த சோதனை ஓட்டத்தில் எக்ஸ்பல்ஸ் 421 பைக் மறைப்பால் மறைக்கப்பட்டு நிலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான படங்கள் 'ஷிஃப்டிங் கியர்ஸ் இன்' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப இந்த பைக்கில் முன்பக்க ஹெட்லைட் ஆனது நன்கு உயரமாக பொருத்தப்பட்டுள்ளதை காணலாம்.
ஹெட்லைட்டை சுற்றிலும் வெட்டுகளும், கோடுகளும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. நின்றுக் கொண்டு பைக்கை ஓட்டினாலும் எளிதாக ஹேண்ட்லிங் செய்வதற்கு ஏதுவாக பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தை தவிர்த்து, புதிய எக்ஸ்பல்ஸ் 421 பைக்கின் பக்கவாட்டு மற்றும் பின்பகுதிகள் அதிகமாக தற்போதைய எக்ஸ்பல்ஸ் பைக்கை ஒத்துக் காணப்படுகின்றன.
புதிய எக்ஸ்பல்ஸ் 421 பைக் இரும்பு ட்ரெல்லிஸ் ஃபிரேமில் உருவாக்கப்பட்டது போன்று காட்சியளிக்கிறது. இந்த பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் நீண்ட டிராவல் உடன் USD ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதே சஸ்பென்ஷன் செட்-அப்பை தான் இதே அட்ஜெஸ்மெண்ட் உடன் அறிமுகம் செய்யும் எக்ஸ்பல்ஸ் 421 பைக்கில் ஹீரோ நிறுவனம் வழங்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.
சக்கரங்களை பொறுத்தவரையில், முன் சக்கரம் சற்று பெரியதாக 21 இன்ச்சிலும், பின் சக்கரம் 18 இன்ச்சிலும் இருப்பதுபோல் தெரிகிறது. இந்த சக்கரங்களில், சாதாரணமான சாலைகள் மற்றும் கரடுமுரடான பாதைகளிலும் என இரண்டிலும் பயன்படுத்தக்கூடிய ட்யூயல்-பர்பஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர்கள் வழக்கமான ட்யூப் வகையை சேர்ந்ததாக வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்கின் 421சிசி என்ஜின் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு இல்லையென்றாலும், 421சிசி என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்படுவதன் மூலமாக புதிய எக்ஸ்பல்ஸ் 421 பைக்கை நேரடியாக ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கிற்கு போட்டியாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் களமிறக்குவதை அறிய முடிகிறது. அடுத்த 2027ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 பைக் இந்த ஆண்டு இறுதியில் இத்தாலியில் நடைபெறும் 2026 EICMA கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.
முகப்பு படம் வேறொன்றாக மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications