புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 450 பைக் அறிமுகம்: கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்குக்கு நேரடி போட்டி!
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் EICMA 2026 சர்வதே மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் தனது புதிய எக்ஸ்பல்ஸ் 450 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அந்நிறுவனத்தின் தற்போதைய மோட்டார்சைக்கிள்களிலேயே அதிக சக்திவாய்ந்த மாடலாக வந்துள்ளது.
ஏற்கெனவே எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 210 மூலம் அட்வென்ச்சர் பைக் பிரிவில் தனக்கென இடம்பிடித்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தற்போது அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் சந்தையில் நுழைகிறது. டக்கார் ராலி மோட்டார்பந்தயங்களில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய பைக்கை ஹீரோ உருவாக்கி இருக்கிறது.

பவர்ஃபுல் எஞ்சின்
இந்த புதிய மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 421 சிசி லிக்யூடு கூல்டு 4 வால்வு DOHC எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 46.7 எச்பி பவரையும், 38 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச் வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த எஞ்சின் அதிக வேகத்தில் பயணிப்பதற்கு மட்டுமின்றி, கரடுமுரடான சாலைகள் மற்றும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் ராலி அணியின் அனுபவங்கள் இதன் செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களில் முக்கிய பங்காற்றி உள்ளது.
அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன்
புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 450 மோட்டார்சைக்கிளின் முன்பக்கத்தில் 43 மிமீ KYB USD ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 225 மிமீ வீல் டிராவல் நீளம் உள்ளது. மேலும், கம்ப்ரஷன் மற்றும் ரீபவுண்ட் ஆகியவற்றை 22 நிலைகளில் மாற்றியமைக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சாலை நிலைமைகளுக்கு ஏற்ப சஸ்பென்ஷனை மாற்றிக்கொள்ள முடியும். பின்பக்க சஸ்பென்ஷன் குறித்த முழுமையான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. முன்பக்கத்தில் 21 அங்குல சக்கரமும், பின்பக்கத்தில் 17 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளன.
நவீன தொழில்நுட்ப வசதிகள்
இந்த பைக்கில் 7 அங்குல TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இடம்பெற்றுள்ளது. இதில் Android Auto மற்றும் Apple CarPlay வசதிகள் இடம்பெற்றுள்ளன. அட்வென்ச்சர் பைக் பிரிவில் இந்த வசதிகள் முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றன.
மேலும், பல்வேறு ரைடிங் மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல், ABS மோடுகள், த்ராட்டில் மேப்பிங் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளன. நீண்ட தூர பயணங்களிலும் சவாலான சாலை நிலைகளிலும் இவை ரைடர்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்தியாவில் எப்போது அறிமுகம்?
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 450 முதலில் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன்பின்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் இந்திய அறிமுக தேதி மற்றும் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மற்றும் KTM 390 அட்வென்ச்சர் ஆகிய மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும். ரூ.3 லட்சம் விலையில் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் அனைத்து இருசக்கர வாகன நிறுவனங்களும் இந்த சந்தையில் புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ் 450 மாடலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications


