வரலாற்றில் முதல்முறையாக.... அசத்தல் வசதிகளுடன் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டீல்த் எடிஷன் அறிமுகம்!
இந்தியாவில் 125சிசி பைக் சந்தையில் இளைஞர்களைக் கவரும் வகையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த சந்தையில் தனது பலத்தை அதிகரிக்கும் விதமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் புதிய ஸ்டீல்த் எடிஷனை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டீல்த் எடிஷனில் கூடுதலாக டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட பல முக்கியமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், தோற்றத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட் ரக பிரிவில் பிரீமியம் தொழில்நுட்பங்களுடன் இந்த பைக்கை ஹீரோ கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய எடிஷனில் 4.2 அங்குல டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதியுடன் செயல்படும் இந்த டிஸ்பிளே மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மொபைல்போன் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அறிவிப்புகளைப் பெற முடியும். மேலும், பாடல்கள் கேட்பதையும் கட்டுப்படுத்தும் வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஸ்போர்ட்டி 125சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் முதன்முறையாக டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) வழங்கப்படுவதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பைக்கின் டயர்களில் காற்றழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். காற்றழுத்தம் குறைந்தால் உடனடியாக எச்சரிக்கையும் கிடைக்கும்.
இந்த வசதி தினசரி பைக் பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக நீண்ட தூர பயணங்களின்போது டயர்களில் சரியான காற்றழுத்தம் இருப்பதை உறுதி செய்வது பாதுகாப்பிற்கு முக்கியமானது. டயர் பராமரிப்பை எளிதாக்குவதுடன், வெவ்வேறு சாலை நிலைகளிலும் நம்பிக்கையுடன் பயணிக்க இந்த தொழில்நுட்பம் உதவும்.
புதிய ஸ்டீல்த் எடிஷனின் தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் மிட்நைட் பிளாக் வண்ணத்துடன் பேர்ல் ரெட் என்ற வண்ண அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் வழக்கமான எக்ஸ்ட்ரீம் 125R மாடலை விட புதிய எடிஷன் கூடுதல் ஸ்போர்ட்டியான தோற்றத்தைப் பெற்றுள்ளது.
பாதுகாப்பு மற்றும் செயல்திறனைப் பொறுத்தவரை இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும், ரெயின், ரோடு மற்றும் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக சீதோஷ்ண நிலை, வெவ்வேறு சாலை நிலைகளுக்கு ஏற்ப பைக்கின் இயக்கத்தை மாற்றிக் கொள்ள முடியும்.
இதுதவிர, நீண்ட தூரப் பயணங்களின்போது சவுகரியத்தை அதிகரிக்கும் வகையில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிக விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களில் காணப்படும் இத்தகைய வசதிகளை 125சிசி பிரிவில் அறிமுகப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது. இதனால் தொழில்நுட்ப வசதிகளை விரும்பும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்புள்ளது.
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஸ்டீல்த் எடிஷனின் விலை ரூ.1,16,250 எக்ஸ்ஷோரூ் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மிட்நைட் பிளாக் மற்றும் பேர்ல் ரெட் வண்ணக் கலவையில் கிடைக்கும் இந்த பைக் தற்போது நாடு முழுவதும் உள்ள ஹீரோ டீலர்ஷிப்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications


