கார்களை போன்று மோட்டார் சைக்கிள்களுக்கான ADAS தொழில்நுட்பம்: ஹோண்டா அறிமுகம்!
கார்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் மேம்பட்ட ஓட்டுனர் உதவி தொழில்நுட்பம் (ADAS), இனி மோட்டார் சைக்கிள்களிலும் முக்கிய இடம்பிடிக்கப் போகிறது. இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற EICMA 2026 மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் ஹோண்டா நிறுவனம், இருசக்கர வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Honda SENSING RIDE என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பம், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கார்களுக்காக ஹோண்டா ஏற்கனவே பயன்படுத்தி வரும் Honda SENSING தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இருசக்கர வாகனங்களுக்கேற்ற வகையில் பல்வேறு புதிய அம்சங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் மில்லிமீட்டர் அலை ரேடார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவை வாகனத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்தைக் கண்காணித்து, அருகில் வரும் வாகனங்களைக் கண்டறியும். இதன் மூலம் ஆபத்தான சூழ்நிலைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு ஓட்டுபவருக்கு எச்சரிக்கை வழங்கும்.
இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் (ACC) வசதியும் இடம்பெற்றுள்ளது. முன்னால் செல்லும் வாகனத்திற்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளியைப் பராமரிக்க இந்த வசதி உதவும். மேலும், போக்குவரத்து நெரிசலில் வாகனம் நிற்பது, மீண்டும் புறப்படுவது போன்ற சூழ்நிலைகளையும் Stop & Go வசதி இந்த தொழில்நுட்பம் மூலமாக கையாளப்படும். இதனால் நீண்ட பயணங்களில் ஓட்டுபவரின் சிரமம் வெகுவாக குறையும்.
குழுவாக மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்களுக்காக Group Ride Assist என்ற வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பைக்குகள் ஒன்றாகச் செல்லும்போது, அவற்றுக்கு இடையிலான பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்க இது உதவும். குறிப்பாக, நீண்ட தூர பைக் சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் எச்சரிக்கும் Forward Collision Warning வசதியும் இதில் உள்ளது. மேலும், ஓட்டுபவர் பிரேக் பிடிக்கும்போது கூடுதல் பிரேக்கிங் உதவியை வழங்கும் Emergency Brake Assist தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது. இதனுடன் Brake Pulse வசதியும் இணைந்து செயல்படும். இதன் மூலம் ஆபத்தான சூழ்நிலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.
பின்புறத்தில் இருந்து வரும் வாகனங்களையும் இந்த தொழில்நுட்பம் கண்காணிக்கும். வாகனத்தின் Blind Spot பகுதியில் மற்றொரு வாகனம் இருந்தால், கண்ணாடியில் உள்ள எச்சரிக்கை விளக்குகள் மூலம் ஓட்டுனருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். பின்னால் மோதும் அபாயம் இருந்தால் இண்டிகேட்டர்கள் வேகமாக ஒளிர்ந்து எச்சரிக்கும். அருகில் வரும் வாகனங்கள் குறித்த தகவலும் திரையில் காட்டும் வசதி உள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தை முதன்முதலில் 2027ம் ஆண்டு மாடலாக வரும் புதிய Honda CRF1150L Africa Twin Adventure Sports மோட்டார் சைக்கிளில் அறிமுகப்படுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் DCT எனப்படும் Dual Clutch Transmission தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல மாடல்களுக்கு இந்த வசதியை விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இந்த தொழில்நுட்பம் முழுமையான தானியங்கி ஓட்டுனர் வசதி கிடையாது என்பதை ஹோண்டா தெளிவுபடுத்தியுள்ளது. சாலை நிலை, வானிலை மற்றும் வாகனத்தின் செயல்பாடு உள்ளிட்ட காரணிகளால் இதன் செயல்பாடு மாறுபடலாம். எனவே, இந்த வசதிகள் இருந்தாலும் ஓட்டுபவர்கள் தொடர்ந்து சாலையைக் கவனித்து பாதுகாப்பாக வாகனம் ஓட்ட வேண்டும்.
மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் ஹோண்டாவின் இந்த புதிய தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரேடார் அடிப்படையிலான ADAS வசதிகள் இருசக்கர வாகனங்களில் எந்த அளவுக்குப் பயன்படுகின்றன என்பதை கணிக்க முடியும். வரும் ஆண்டுகளில் இந்தியாவிலும் இந்த புதிய தொழில்நுட்பத்துடன் ஹோண்டா மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


