ஹோண்டா ஆக்டிவாவை விட பெரியதாக புதிய 160சிசி ஸ்கூட்டர்... 2026 முடிவதற்குள் அறிமுகம்!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக அளவில் பெரியதான ஒரு மேக்ஸி-ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
யமஹாவின் ஏரோக்ஸ் 155, ஹீரோ ஸூம் 160 மற்றும் TVS எண்டார்க் 150 உள்ளிட்ட மேக்ஸி-ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக ஒரு ஸ்கூட்டரை களமிறக்க ஹோண்டா நிறுவனம் கடந்த பல மாதங்களாகவே தயாராகி வருகிறது. அதன்படி, ADV 160 என்கிற மேக்ஸி-ஸ்கூட்டர் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது 1,950மிமீ நீளத்தில், 763மிமீ அகலத்தில், 1,196மிமீ உயரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 1,324மிமீ ஆகும். அதுவே தரையில் இருந்து ரைடர் இருக்கை ஆனது 780மிமீ உயரத்தில் அமைந்துள்ளது. தரையில் இருந்து ஸ்கூட்டரின் அடிப்பகுதி 165மிமீ உயரத்தில் வழங்கப்படுவது, இந்திய சாலைகளுக்கு போதுமானதாக இருக்கும்.
133 கிலோ எடை கொண்ட ஹோண்டா ADV 160 ஸ்கூட்டரில் பெட்ரோல் டேங்க் 8.1 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்பட உள்ளது. இரட்டை-தொட்டில் ஃபிரேமில் உருவாக்கப்படும் இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனுக்கு டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள் முன்பக்க சஸ்பென்ஷன் ஆகவும், இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பின்பக்க சஸ்பென்ஷன் ஆகவும் வழங்கப்படுகின்றன.

வெளிநாடுகளில் ஹோண்டா ADV 160 ஸ்கூட்டரில் முன் சக்கரம் சற்று பெரியதாக 14 இன்ச்சிலும், பின் சக்கரம் 13 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன. சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன. பிரேக்கிற்கு ஸ்கூட்டரின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. முன் பிரேக் உடன் சிங்கிள்-சேனல் ABS வழங்கப்படுகிறது.
என்ஜினை பொறுத்தவரையில், இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 156.9சிசி சிங்கிள்-சிலிண்டர் eSP+ என்ஜின் ஆனது லிக்யுடு-கூலிங், 4-வால்வுகள், சிங்கிள் ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட் மற்றும் PGM-Fi ஃப்யுல் இன்ஜெக்ஷன் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 15.8 எச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 14.7 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய இந்த என்ஜின் உடன் CVT கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
இந்த என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்படும் ACG ஸ்டார்டர் சிஸ்டம் ஆனது அமைதியான என்ஜின் ஸ்டார்ட்டிற்கு உதவக்கூடியதாக உள்ளது. இதனுடன் இந்த என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்படும் ஐடியல்-ஸ்டாப் தொழிற்நுட்பம் ஆனது ஸ்கூட்டர் ஓய்வு நிலைக்கு திரும்பும்போது என்ஜினை தன்னிச்சையாக அணைக்கக் கூடியதாக உள்ளது. மேலும், ஹோண்டா ADV 160 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்களில் ஹோண்டாவின் செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் சிஸ்டமும் வழங்கப்படுகிறது.
இந்த சிஸ்டம் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை ஸ்கூட்டரின் பின் சக்கரத்திற்கு கிடைக்கும் டிராக்ஷனை பொறுத்து அட்ஜெஸ் செய்யும். இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் உயரமான விண்ட்ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது. இருக்கை ஒரே துண்டாக, நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை சற்று நிமிர்ந்து அமர்ந்தப்படியே ஓட்ட வேண்டியிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேக்ஸி-ஸ்கூட்டர்களுக்கு மெல்ல மெல்ல மார்க்கெட் பெரியதாகி வருகிறது. இதன் 160சிசி என்ஜின் யமஹா ஏரோக்ஸ் 155 மற்றும் ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டர்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பது உறுதி. மேலும், TVS எண்டார்க் 150 ஸ்கூட்டரை போன்று அட்வென்ச்சர்-ஸ்டைல் பாடி வொர்க்கை புதிய ஹோண்டா ADV ஸ்கூட்டர் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications