ஹோண்டா ADV160 மேக்ஸி ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தது... 115 கிமீ டாப் ஸ்பீடு!
இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்த உள்ள ADV160 மேக்ஸி ஸ்கூட்டர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அதன் முழுமையான தொழில்நுட்ப விபரங்கள் தற்போது கசிந்துள்ளன. ஹோண்டா பிக்விங் (BigWing) டீலர்ஷிப் மூலம் இந்த புதிய மேக்ஸி ஸ்கூட்டரின் எஞ்சின், சஸ்பென்ஷன், பிரேக்கிங் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஸ்கூட்டர் ஏற்கெனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், அதன் முழுமையான தொழில்நுட்ப விபரங்கள் மற்றும் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, இதன் செயல்திறன் மற்றும் நீண்ட தூரப் பயணத்திற்கான வசதிகள் கவனம் பெறுகின்றன.

பவர்ஃபுல் ஸ்கூட்டர்
ஹோண்டா ADV160 ஸ்கூட்டரில் 156.93 சிசி, 4 வால்வு, eSP+ தொழில்நுட்பத்துடன் கூடிய லிக்யூடு கூல்டு எஞ்சின் இடம்பெறுகிறது. இது BS6.2 OBD-II விதிமுறைகளுக்கு இணக்கமானதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்மில் 16.31 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
இதனுடன் சிவிடி (CVT) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், E85 எத்தனால் கலந்த பெட்ரோல் வரை பயன்படுத்தும் வகையில் ஃப்ளெக்ஸ் ஃபியூல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வசதிகள்
முன்பக்கத்தில் 130 மிமீ டிராவல் நீளம் கொண்ட டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 102 மிமீ டிராவல் நீளம் கொண்ட ட்வின் ஷாக் அப்சார்பர்கள் இடம்பெற்றுள்ளன. இவை சீரற்ற சாலைகளில் பயணிப்பதற்கும், மேடு பள்ளங்களைச் சமாளிப்பதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரேக்கிங் வசதியைப் பொறுத்தவரையில், முன்பக்கத்தில் 240 மிமீ ஹைட்ராலிக் வேவ் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ வேவ் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும், ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் (HSTC) வசதியை ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியும்.

முக்கிய அம்சங்கள்
இந்த ஸ்கூட்டரில் 27 லிட்டர் கொள்திறன் கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, 8.1 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க், ஹோண்டாவின் ரோட்சிங்க் மொபைல்போன் அப்ளிகேஷனை இணைத்துக் கொள்ளும் வசதிகளும் உள்ளன. 12.7 செமீ டிஎஃப்டி வண்ணத் திரையும் உள்ளது.
இந்த ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று உயரத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய விண்ட்ஸ்கிரீன் உள்ளது. இதில் இரண்டு நிலைகளில் விண்ட்ஸ்கிரீனை மாற்ற முடியும். உயரமான மற்றும் தாழ்வான நிலைகளுக்கு இடையே 71 மிமீ வித்தியாசம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது காற்றின் வேகத்தை எதிர்கொள்வதற்கும், நீண்ட தூரப் பயணங்களில் ஓட்டுநரின் சவுகரியத்தை அதிகரிப்பதற்கும் இந்த வசதி உதவியாக இருக்கும்.
மைலேஜ் மற்றும் வாரண்டி விபரங்கள்
தற்போது கசிந்துள்ள தகவல்களின்படி, இந்த ஸ்கூட்டர் E10 பெட்ரோலில் லிட்டருக்கு 45 கிமீ வரையிலும், E20 பெட்ரோலில் 42.5 கிமீ வரையிலும் மைலேஜ் வழங்கும் எனக் கூறப்படுகிறது. E85 ஃப்ளெக்ஸ் ஃபியூலில் லிட்டருக்கு சுமார் 36 கிமீ மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உறுதியானத் தகவல்கள் இதுவரை இல்லை.
ஹோண்டா ADV160 ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் அல்லது 42,000 கிமீ வரை ஸ்டாண்டர்டு வாரண்டி வழங்கப்படும் என தெரிகிறது. முதல் இலவச சர்வீஸ் 1,000 கிமீ அல்லது ஒரு மாதத்திலும், அடுத்தடுத்த சர்வீஸ்கள் 6,000 கிமீ அல்லது 6 மாத இடைவெளியிலும் மேற்கொள்ளப்படும். கூடுதலாக 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் கிடைக்க வாய்ப்புள்ளது.
கூடுதல் ஆக்சஸெரீஸ் மற்றும் டெலிவரி
இந்த ஸ்கூட்டருக்கு 35 லிட்டர் டாப் பாக்ஸ், ஹெவி டியூட்டி ரியர் கேரியர், கிராஷ் கார்டுகள், எஞ்சின் பாதுகாப்பு பார்கள், ஹேண்ட்கார்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்சஸெரீஸ்களை ஹோண்டா வழங்கவுள்ளது. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப்புகள் வாயிலாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா ADV160 ஸ்கூட்டரின் டெலிவரி வரும் டிசம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இந்தியாவில் யமஹா ஏராக்ஸ் 155 மற்றும் ஹீரோ ஸூம் 160 ஆகிய ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக ADV160 அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Via- Team BHP


Click it and Unblock the Notifications



