முரட்டுத்தனமான தோற்றம், மிரட்டும் பவர்.. ஹோண்டாவின் புதிய அட்வென்ச்சர் ஸ்கூட்டர் இந்தியாவில் பார்வைக்கு வந்தது
இந்தியாவில் பிரீமியம் ஸ்கூட்டர் சந்தை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் அதிக திறன் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட Honda ADV160 மேக்ஸி ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டர் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
விற்பனை எப்போது?
புதிய Honda ADV160 இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் திட்டமும் உள்ளது. தற்போது இந்தியாவில் இந்த மாடலை அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருப்பது, அறிமுகத்துக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

அட்வென்ச்சர் வகையிலான மேக்ஸி ஸ்கூட்டர்
ஹோண்டா ADV160-வின் முக்கிய சிறப்பு அதன் வடிவமைப்புதான். வழக்கமான ஸ்கூட்டர்களைப் போல இல்லாமல், அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களை நினைவூட்டும் வகையில் உயரமான முன்புறம், பெரிய அட்ஜஸ்டபிள் விண்ட்ஸ்கிரீன், டூயல் LED ஹெட்லேம்ப்கள், அகலமான ஹேண்டில்பார் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றுடன் முரட்டுத்தனமாக உள்ளது. இதனால் நகரப் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், நீண்ட தூர சுற்றுலா பயணங்களுக்கும் ஏற்ற அம்சங்களை இந்த ஸ்கூட்டர் வழங்குகிறது.
என்ஜினில் என்ன சிறப்பு?
Honda ADV160 ஸ்கூட்டரில் 157cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், eSP+ இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 16 ஹெச்பி பவர் மற்றும் 14.7 Nm டார்க் திறனை வழங்குகிறது. CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வரும் இந்த ஸ்கூட்டர், நகரப் பயன்பாட்டிலும் நெடுஞ்சாலை பயணங்களிலும் சீரான ஓட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்சங்களிலும் குறைவில்லை
ADV160 ஸ்கூட்டரில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், Smart Key, Idling Stop System, USB சார்ஜிங் வசதி, டிஸ்க் பிரேக்குகள், ABS, டிராக்ஷன் கன்ட்ரோல் (HSTC), விசாலமான அண்டர்-சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 780 மிமீ சீட் உயரமும், 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் இருப்பதால் இந்திய சாலை சூழலுக்கும் இது ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாருடன் போட்டி?
இந்தியாவில் அறிமுகமானதும் Honda ADV160-க்கு நேரடி போட்டியாக Yamaha Aerox 155 மற்றும் Hero Xoom 160 இருக்கும். Aerox 155 ஸ்போர்ட்டி செயல்திறனுக்காக அறியப்படும் நிலையில், Hero Xoom 160 அட்வென்ச்சர்-ஸ்டைல் வடிவமைப்பை முன்னிறுத்துகிறது. இந்த இரண்டுக்கும் இடையே, அட்வென்ச்சர் தோற்றம், மேம்பட்ட வசதிகள் மற்றும் Honda பிராண்டின் நம்பகத்தன்மையை இணைத்து ADV160 புதிய தேர்வாக வரவுள்ளது.
இந்திய விலை எவ்வளவு இருக்கலாம்?
Honda இன்னும் ADV160-ன் இந்திய விலை அல்லது அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என்பதால் இதன் விலை சவாலானதாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Yamaha Aerox 155 மற்றும் Hero Xoom 160 விலை வரம்பை மனதில் கொண்டு இதன் விலையும் நிர்ணயிக்கப்படலாம் என்று ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்தியாவில் மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவு இன்னும் வளர்ந்து வரும் நிலையில், Honda ADV160-ன் வருகை இந்த சந்தையில் போட்டியை மேலும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக Aerox 155-க்கு மாற்றாக வேறொரு பிரீமியம் ஸ்கூட்டரை எதிர்பார்த்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இது கவனிக்கத்தக்க புதிய தேர்வாக அமையும். Honda-வின் நம்பகமான இன்ஜின், அட்வென்ச்சர் தோற்றம் மற்றும் நவீன வசதிகள் இணைந்திருப்பது ADV160-க்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தர வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications