ஹோண்டா ADV160 Vs யமஹா ஏராக்ஸ்155 Vs ஹீரோ ஸூம்160: எது சிறந்தது? - முழுமையான ஒப்பீடு
இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை வேகமாக மாறி வருகிறது. குடும்ப பயன்பாட்டுக்கான ஆக்டிவா, ஜூபிடர் போன்ற மாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விற்பனையில் அசத்தி வரும் நிலையில், இப்போது அதிக செயல்திறன் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பிரிவில் யமஹா ஏராக்ஸ் 155 நீண்ட காலமாக முன்னணி மாடலாக இருந்து வருகிறது. சமீபத்தில் வந்த ஹீரோ ஸூம் 160 சிறந்த மாற்றுத் தேர்வு வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனமும் மேக்ஸி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனது ADV160 ஸ்கூட்டருடன் விரைவில் களம் காண உள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் பொதுமக்கள் பார்வைக்கு ஹோண்டா காட்சிப்படுத்தியது.
இந்த நிலையில், ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹீரோ ஸூம் 160 மற்றும் யமஹா ஏராக்ஸ் 155 ஆகிய இரு மாடல்களுக்கும் விரைவில் வரவுள்ள ஹோண்டா ஏடிவி160 ஸ்கூட்டர் நேரடி போட்டியாக இருக்கும். இந்த மூன்று ஸ்கூட்டர்களில் எது சிறந்தது? வாங்கப் போகிறவர்கள் எதை தேர்வு செய்யலாம்? என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு சிறப்பு ஒப்பீட்டுப் பார்வையை தொடர்ந்து பார்க்கலாம்.

டிசைன்
மூன்று ஸ்கூட்டர்களும் வெவ்வேறு வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஹோண்டா ADV160 ஸ்கூட்டரை பார்த்தவுடன் இது ஒரு பிரிமீயமான மேக்ஸி ஸ்கூட்டருக்கான தோற்றத்துடன் வெகுவாக கவர்கிறது. பெரிய முன்புற விண்ட்ஸ்கிரீன், அகலமான ஹேண்டில்பார், உயரமான முன்புறம், இருபுறமும் நீளமான LED ஹெட்லைட்கள், அட்வென்ச்சர் பைக் போன்ற தோற்றம் ஆகியவை இதன் முக்கிய அடையாளங்கள். நகர பயன்பாட்டை விட நீண்ட தூர பயணங்களுக்காக உருவாக்கப்பட்டிருப்பதை தோற்றத்தை வைத்தே கண்டுகொள்ளலாம்.
அடுத்து, ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டர் அட்வென்ச்சர் ரக ஸ்டைலை பின்பற்றுகிறது. பறவைகளின் அலகு போன்ற முன்புற பீக் (Beak) டிசைன், உயரமான உடல் அமைப்பு, டூயல் LED ஹெட்லேம்ப், பின்புறத்தில் கட்டுமஸ்தானத் தோற்றம் ஆகியவை இதனை சாலையில் வித்தியாசமாக காட்டுகின்றன.
இதில், யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் மட்டும் முற்றிலும் வேறு அணுகுமுறையில் உள்ளது. இது ஒரு ஸ்போர்ட்ஸ் மேக்ஸி ஸ்கூட்டர். கூர்மையான உடல் வடிவம், சென்ட்ரல் Tunnel அமைப்பு ஆகியவற்றுடன் R15 பைக்கில் இருந்து பெறப்பட்ட சில டிசைன் அம்சங்கள் கலந்து கட்டி இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது.
டிசைனைப் பொறுத்தவரை அட்வென்ச்சர் தோற்றம் விரும்புபவர்களுக்கு ADV160 மற்றும் Xoom 160 பிடிக்கும். ஸ்போர்ட்டியான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு Aerox 155 சிறந்த தேர்வாக இருக்கும். டிசைனில் ஹோண்டா ADV160 சற்று கூடுதல் கவனத்தை பெறுகிறது.
எஞ்சின் ஒப்பீடு
ஹோண்டா ஏடிவி160-ல் 156.9cc லிக்விட்-கூல்டு, 4-வால்வ் eSP+ எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் சுமார் 16 எச்பி பவரையும் 14.7 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது. CVT கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஹீரோ ஸூம்160-ல் 156cc லிக்விட்-கூல்டு எஞ்சின் வழங்கப்படுகிறது. இது சுமார் 14.8 எச்பி பவர் மற்றும் 14 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. யமஹா ஏராக்ஸ் 155-ல் R15-ல் பயன்படுத்தப்படும் 155cc VVA தொழில்நுட்பம் கொண்ட லிக்விட்-கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 15 எச்பி பவர் மற்றும் 13.9 என்எம் டார்க் திறனை வழங்குகிறது.
அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப விவரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ADV160 அதிக பவர் மற்றும் டார்க் திறனை வழங்குகிறது. அதிக எஞ்சின் சுழல் வேகத்தில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதில், யமஹாவின் VVA தொழில்நுட்பம் Aerox எஞ்சினுக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.
| விவரம் | Honda ADV160 | Hero Xoom 160 | Yamaha Aerox 155 |
|---|---|---|---|
| எஞ்சின் | 156.9cc, Liquid-Cooled | 156cc, Liquid-Cooled | 155cc, Liquid-Cooled, VVA |
| பவர் | 16 hp | 14.8 hp | 15 hp |
| டார்க் | 14.7 Nm | 14 Nm | 13.9 Nm |
| கியர்பாக்ஸ் | CVT | CVT | CVT |
நடைமுறை பயன்பாடு
யமஹா ஏராக்ஸ் 155 நகரத்தில் அதிவிரைவான பிக்கப்பை வழங்கும் திறன் கொண்டது. உடனடி ஆக்சிலரேஷன் மற்றும் குறைந்த எடை இதன் பலம். ஹோண்டா ஏடிவி160-ன் எஞ்சின் மிக மென்மையான செயல்பாட்டை வழங்குகிறது. குறிப்பாக நீண்ட தூரங்களில் தொடர்ந்து ஓட்டும்போது எஞ்சின் சோர்வை குறைக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டிருக்கும். ஹீரோ ஸூம்160 தினசரி பயணத்துக்கும், வார இறுதி சுற்றுலாவுக்கும் இடைநிலையான தேர்வாக இருக்கும்.
சஸ்பென்ஷன்
ஹோண்டா ஏடிவி160-ல் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் அமைப்பு சற்று மென்மையாக டியூன் செய்யப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. ஹீரோ ஸூம்160-லும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ரியர் ஷாக் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக சீரற்ற சாலைகளில் நம்பிக்கையுடன் ஓட்ட முடியும். யமஹா ஏராக்ஸ் 155-ன் சஸ்பென்ஷன் ஸ்போர்ட்டியான டியூனிங்கில் உள்ளதால் நல்ல சாலைகளில் சிறந்த ஸ்டெபிலிட்டி வழங்கும். அதேநேரத்தில், பள்ளங்கள் அதிகமாக உள்ள சாலைகளில் மற்ற இரண்டு மாடல்களை விட சற்று கடினமான பயணத்தை உணரலாம்.
| விவரம் | Honda ADV160 | Hero Xoom 160 | Yamaha Aerox 155 |
|---|---|---|---|
| முன்புற சஸ்பென்ஷன் | Telescopic Fork | Telescopic Fork | Telescopic Fork |
| பின்புற சஸ்பென்ஷன் | Twin Shock | Twin Shock | Twin Shock |
| சீட் உயரம் | 780 mm | 787 mm | 790 mm |
| கெர்ப் எடை | 133 kg | 141 kg | 126 kg |
| கிரவுண்ட் கிளியரன்ஸ் | 165 mm | 155 mm | 145 mm |
பிரேக் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்
ஹோண்டா ஏடிவி160-ன் மிகப்பெரிய பலம் Dual Channel ABS மற்றும் Honda Selectable Torque Control (HSTC) ஆகும். வழுக்கும் சாலைகளில் சக்கர சுழற்சியை கட்டுப்படுத்தும் இந்த அம்சம் பாதுகாப்பை அதிகரிக்கிறது. ஹீரோ ஸூம்160-லும் Dual Channel ABS வழங்கப்பட்டுள்ளது. ஆனால் Traction Control இல்லை. யமஹா ஏராக்ஸ் 155-ல் தற்போது இந்தியாவில் Single Channel ABS மட்டுமே வழங்கப்படுகிறது. Traction Control வசதி இருந்தாலும், Dual Channel ABS இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை ஹோண்டா ஏடிவி160 தெளிவான முன்னிலை பெறுகிறது.
| விவரம் | Honda ADV160 | Hero Xoom 160 | Yamaha Aerox 155 |
|---|---|---|---|
| முன்புற பிரேக் | Disc | Disc | Disc |
| பின்புற பிரேக் | Disc | Disc | Disc |
| ABS | Dual Channel | Dual Channel | Single Channel |
| Traction Control | Yes (HSTC) | No | Yes |
தொழில்நுட்ப வசதிகள்
ஹோண்டா ஏடிவி160 ஸ்கூட்டரில் முழு LED விளக்குகள், Smart Key, USB சார்ஜிங், பெரிய டிஜிட்டல் டிஸ்ப்ளே, உயரத்தை மாற்றக்கூடிய விண்ட்ஸ்கிரீன், பெரிய அண்டர்-சீட் ஸ்டோரேஜ் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஹீரோ ஸூம்160-ல் LED விளக்குகள், டிஜிட்டல் திரை, Smart Key, Navigation உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. யமஹா ஏராக்ஸ் 155-ல் Bluetooth இணைப்பு, Y-Connect செயலி, Smart Key (S Version), LED விளக்குகள் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. சிறப்பம்சங்களின் பட்டியலைப் பார்க்கும்போது, ஹோண்டா ஏடிவி160 இந்த பிரிவில் மிகவும் பிரீமியம் அம்சங்களுடன் வரும் ஸ்கூட்டராக இருக்கும்.
| அம்சம் | Honda ADV160 | Hero Xoom 160 | Yamaha Aerox 155 |
|---|---|---|---|
| LED விளக்குகள் | ✔ | ✔ | ✔ |
| Smart Key | ✔ | ✔ | S Variant |
| Bluetooth Connectivity | ✔ | ✔ | ✔ |
| Navigation | ✔ | ✔ | Via Y-Connect |
| USB Charging | ✔ | ✔ | ✔ |
| Adjustable Windscreen | ✔ | ✘ | ✘ |
சீட் உயரம்... யாருக்கு எளிதாக இருக்கும்?
ஹோண்டா ஏடிவி160 ஸ்கூட்டரின் சீட் உயரம் 780 மிமீ ஆகவும், ஹீரோ ஸூம்160 ஸ்கூட்டரின் சீட் உயரம் 787 மிமீ ஆகவும், யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரின் சீட் உயரம் 790 மிமீ ஆகவும் உள்ளது. இதனால், உயரம் குறைவான ரைடர்களுக்கு ஹோண்டா ஏடிவி160 ஓரளவு வசதியாக இருக்கும்.
கெர்ப் எடை
ஹோண்டா ஏடிவி160 ஸ்கூட்டர் 133 கிலோ கெர்ப் எடையும், ஹீரோ ஸூம்160 ஸ்கூட்டர் 141 கிலோ கெர்ப் எடையும், யமஹா ஏராக்ஸ் 155 126 கிலோ கெர்ப் எடை கொண்டதாகவும் உள்ளன. இதில் Aerox 155 மிகவும் இலகுவானது. நகரத்தில் அடிக்கடி நிறுத்தி இயக்குபவர்களுக்கு இது கூடுதல் பலனாக இருக்கும். ஹீரோ ஸூம்160 அதிக எடை கொண்டதால் மெதுவான வேகத்தில் கையாள சற்று பழக வேண்டி வரலாம்.
விலை
ஹீரோ ஸூம்160 ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.1.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. யமஹா ஏராக்ஸ் 155 வேரியண்ட்டைப் பொறுத்து சுமார் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.54 லட்சம் வரை விலையில் கிடைக்கிறது. ஹோண்டா ஏடிவி160-ன் இந்திய விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனவே விலை அடிப்படையில் ஒப்பிட முடியாது. இருப்பினும், சர்வதேச சந்தை மற்றும் அதன் அம்சங்களை கருத்தில் கொண்டால், ஹீரோ ஸூம்160 மற்றும் யமஹா ஏராக்ஸ் 155-ஐ விட சற்று அதிக விலையில் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
யாருக்கு எந்த ஸ்கூட்டர்?
நகரத்தில் ஓட்டும்போது சிறந்த பிக்கப் மற்றும் ஸ்போர்ட்டியான ஓட்டும் அனுபவம் வேண்டும் என்றால் யமஹா ஏராக்ஸ் 155 இன்னும் சிறந்த தேர்வாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள், மோசமான சாலைகள், அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிரீமியம் அனுபவம் வேண்டும் என்றால் ஹோண்டா ஏடிவி160 மிகவும் பொருத்தமானதாக தெரிகிறது. அட்வென்ச்சர் தோற்றம், Dual Channel ABS மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் ஒரு 160cc ஸ்கூட்டர் வேண்டும் என்றால் ஹீரோ ஸூம்160 நல்ல மாற்று தேர்வாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்த மூன்று மாடல்களும் ஒரே பிரிவில் இருந்தாலும், மூன்றின் குணாதிசயமும் வேறுபடுகிறது. யமஹா ஏராக்ஸ் 155 இலகுவான கையாளுமை மற்றும் செயல்திறனை முன்னிலைப்படுத்துகிறது. ஹீரோ ஸூம்160 விலை மற்றும் அட்வென்ச்சர் தோற்றத்தை சமநிலைப்படுத்துகிறது. ஹோண்டா ஏடிவி160 மட்டும் இந்த இரண்டையும் தாண்டி, அதிக பாதுகாப்பு, அதிக வசதிகள், உயரமான கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற பிரீமியம் மேக்ஸி ஸ்கூட்டராக தன்னை நிலைநிறுத்த முயல்கிறது. ஹோண்டா ஏடிவி160 ஸ்கூட்டருக்கு சவாலான விலை நிர்ணயிக்கப்பட்டால், இந்த பிரிவில் ஹோண்டா ஏடிவி160 ஒரு முக்கிய போட்டியாளராக மாறும் என்று ஆணித்தரமாக கூறலாம்.


Click it and Unblock the Notifications