ரூ.1.95 லட்சத்தில் புதிய ஹோண்டா CB350 பைக் அறிமுகம்... விலை குறைப்புடன் கூடுதல் அம்சங்கள்!
இந்தியாவில் ரெட்ரோ கிளாசிக் மோட்டார்சைக்கிள் பிரியர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஹோண்டா சிபி350 வரிசை மோட்டார்சைக்கிள் மாடல்கள் தற்போது புதிய மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. சிபி350, சிபி350சி மற்றும் சிபி350ஆர்எஸ் ஆகிய மூன்று பிரபலமான மாடல்களின் வேரியண்ட்டுகள் மற்றும் விலைகளை ஹோண்டா நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. சந்தையில் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், இந்த மோட்டார்சைக்கிள் வரிசையின் ஆரம்ப விலை முந்தைய மாடலை விட ரூ.2,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும்.
புதிய மாற்றங்களின்படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிபி350 எஸ்டிடி அடிப்படை வேரியண்ட் ரூ.1,95,200 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதன் டாப்எண்ட் மாடலான சிபி350 குரோம் மாடலுக்கு ரூ.1,99,900 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பழமையான டிசைன் அம்சங்கள் கொண்ட சிபி350சி மாடல்கள் ரூ.2,00,300 முதல் ரூ.2,04,700 வரையிலும், ஸ்போர்ட்டியான அம்சங்களை கொண்ட சிபி350ஆர்எஸ் மாடல் ரூ.1,99,900 முதல் ரூ.2,02,500 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக இருந்த 'ஹைனெஸ்' என்ற பெயர் நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய குரோம் மாடலாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிபி350ஆர்எஸ் மாடலில் புதிதாக 'பேர்ல் சைரன் புளூ' என்ற வண்ணத் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளதுடன், பாடி கிராபிக்ஸ் டிசைன்களும் புதிய தோற்றத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம்கள் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ரூ.5,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எஞ்சினிலோ அல்லது முக்கிய தொழில்நுட்ப அம்சங்களிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 348 சிசி ஏர்கூல்டு, ஒற்றை சிலிண்டர் எஞ்சினே தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. இது அதிகபட்சமாக 20.7 எச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. குறைந்த ஆர்பிஎம்மிலேயே அதிக டார்க் கிடைப்பதால், நெரிசல் மிகுந்த நகரச் சாலைகளிலும், நீண்ட தூர நெடுஞ்சாலைப் பயணங்களின் போதும் அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. எளிதாக கையாளும் வாய்ப்பையும் வழங்கும்.
பாதுகாப்பு வசதிகளில் ஹோண்டா நிறுவனம் எப்போதும் போல அதிக கவனம் செலுத்தியுள்ளது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் சேனல் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் ஹோண்டா ரோடு ஸின்க் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி ஆகியவை நிலையான அம்சங்களாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக, மழைக்காலங்களில் வழுக்கும் சாலைகளில் டிராக்ஷன் கன்ட்ரோல் பைக்கின் நிலைத்தன்மையை உறுதி செய்யும். அசிஸ்ட் கிளட்ச் வசதி நகரப் போக்குவரத்தில் அடிக்கடி கிளட்ச் பிடிக்கும் போது கைகளுக்கு ஏற்படும் சோர்வைக் கணிசமாகக் குறைக்கும்.
இந்த புதிய ஹோண்டா சிபி350 மோட்டார்சைக்கிள் மாடல்கள் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்கப்பட உள்ளன. ஆனால் சிபி350 மற்றும் சிபி350சி மாடல்களின் டெலிவரி அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் ஜாவா 42 ஆகிய மாடல்களுக்கு ஹோண்டா சிபி350 சீரிஸ் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


