இனி இந்த ஹோண்டா பைக்குகள் இந்தியாவில் விற்பனை இல்லை.. இப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல!
கடந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஹோண்டாவின் 650 சிசி பைக்குகளான CB650R மற்றும் CBR650R ஆகிய பைக்குகளின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் மட்டுமின்றி இந்தியாவில் கடந்தாண்டு அந்நிறுவனம் வெளியிட்ட X ADV என்ற அட்வென்சர் மேக்ஸி ஸ்கூட்டரின் விற்பனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏன் ஹோண்டா இந்த முடிவை எடுத்தது என்பது குறித்து விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.
2025ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வந்தது ஹோண்டா. CBR1000RR-R SP, ரெபல் 500, X ADV, CB750 ஹார்னெட், CB1000 ஹார்னெட் SP மற்றும் மேலே குறிப்பிட்டிருக்கும் 650 சிசி பைக்குகள் ஆகிய அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டரையும் கடந்தாண்டு தான் இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட்டது.

இந்த பைக்குகளை இந்தியாவில் தயாரிக்காமல் CBU முறையில் வெளிநாடுகளில் இருந்து முழுவதுமாக இறக்குமதி செய்தே விற்பனை செய்தது ஹோண்டா. எனவே, அதிகளவில் இல்லாமல் ஒவ்வொரு பைக் மாடலையும் குறிப்பிட்ட அளவு மட்டும் இறக்குமதி செய்து ஹோண்டா பிக் விங் ஷோரூம்கள் மூலம் அவற்றை விற்பனை செய்தது.
இப்படி குறிப்பிட்ட அளவு மட்டும் இறக்குமதி செய்வதனால், அந்த யூனிட்டுகளின் விற்பனை முடிந்த பின்பு அவற்றை விற்பனையை இந்தியாவில் நிறுத்திவிடுகிறது ஹோண்டா. ஏற்கனவே CBR1000RR-R SP மற்றும் ரெபல் 500 ஆகிய பைக்குகளின் விற்பனையை கடந்தாண்டு நிறுத்தியது. தற்போது அந்த வரிசையில் 650 சிசி பைக்குகள் மற்றும் X ADV ஸ்கூட்டரின் விற்பனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதால் இந்த பைக்குகள் இனி இந்தியாவில் விற்பனையே செய்யப்படாதா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. வாடிக்கையாளர்களிடம் இருக்கும் டிமாண்டைப் பொறுத்துத் தான் குறிப்பிட்ட பைக்குகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதா வேண்டாமா என்ற முடிவு எடுக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட அளவில் மட்டும் இது போன்ற விலையுயர்ந்த பைக்குகளை ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வருகிறது.
எனவே மீண்டும் இதனை இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்தாண்டு கூட மேற்கூறிய 650 சிசி பைக்குகளை இந்தியாவில் மறுவெளியீடு தான் செய்தது ஹோண்டா. சில ஆண்டுகளுக்கு முன்னரும் கூட இந்த பைக்குகள் குறிப்பிட்ட அளவில் மட்டும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2027ல் மீண்டும் இந்த பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
CB650R மற்றும் CBR650R ஆகிய இரண்டு பைக்குகளிலும், 649 சிசி, இன்லைன்-ஃபோர் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினே பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜினானது 12,000 rpm-ல் 95 hp பவரையும், 9,500 rpm-ல் 63 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தது. இந்த இன்ஜினானது 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பைக்குகளிலும் E-கிளட்ச் தொழில்நுட்பத்தையும் ஹோண்டா கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பைக்குகளும் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறத்தேர்வுகளைக் கொண்டிருந்தது. ஸ்ட்ரீட் நேக்கட் வகையிலான CB650R பைக்கை ரூ.9.60 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், முழுமையான ஃபேரிங் கொண்ட CBR650R பைக்கை ரூ.10.40 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்து வந்தது ஹோண்டா. அதேபோல் தற்போது விற்பனை நிறுத்தப்பட்டிருக்கும் மேக்ஸி ஸ்கூட்டரான X ADV-யை ரூ.11.90 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்தது அந்நிறுவனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிய இன்ஜின் கொண்ட விலை அதிகமான பைக்குகளுக்கு இந்தியாவில் வாடிக்கையாளர் வட்டம் சிறியது. ஆனால், அந்த வகையான பைக்குகளுக்கும் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக அவ்வப்போது குறிப்பிட்ட அளவு யூனிட்டுகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது ஹோண்டா.


Click it and Unblock the Notifications








