ஆக்டிவாவைப் போலவே புதிய 125 சிசி ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது ஹோண்டா
ஹோண்டா நிறுவனமானது புதிய ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஹூரைடு (HooRide) எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்கூட்டர் மாடலை, இந்தியாவில் அல்ல, சீனாவில் வெளியிட்டுள்ளது ஹோண்டா. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுவதற்காக அன்றி சீனாவில் மட்டுமே விற்பனை செய்யும் நோக்கத்தோடு இந்தப் புதிய ஸ்கூட்டரை அந்நிறுவனம் உருவாக்கியிருப்பதாகத் தெரிகிறது.
பார்ப்பதற்கு மிகவும் அக்ரஸிவ்வான டிசைனோடு, பெரிய இன்ஜின் கொண்ட பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், இதுவொரு 125 சிசி ஸ்கூட்டர் தான். ஆம், இந்த ஸ்கூட்டரில் 124.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினே கொடுக்கப்பட்டிருக்கிறது. 11 hp பவர் மற்றும் 11.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த இன்ஜினை PCX 125 உள்ளிட்ட பிற ஸ்கூட்டர்களிலும் ஹோண்டா பயன்படுத்தியிருக்கிறது.

இன்ஜின் 125 சிசிதான் என்றாலும், அனைத்து வகையிலும் மேம்பட்ட வசதிகளைக் கொண்ட ஸ்கூட்டராகவே இந்த ஹூரைடு 125 இருக்கிறது. ஒரு குட்டி அட்வென்சர் ஸ்கூட்டர் போல இதனை உருவாக்க நினைத்ததால், மிகவும் ரக்கடான டிசைனை இதற்குக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. அந்நிறுவனத்தின் பெரிய இன்ஜின் கொண்ட பைக் ஒன்று இருக்கிறது. ஆப்பிரிக்கா ட்வின் என்ற பெயர் கொண்ட அந்த பைக்கின் குட்டி ஸ்கூட்டர் வடிவம் போலான லுக்கையே ஹூரைடு 125 கொண்டிருக்கிறது.
கீலெஸ் கோ, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 5 இன்ச் TFT டிஸ்பிளே, டைப்-A மற்றும் டைப்-C USB போர்ட்கள், NFC கீ கார்டு, கனெக்டட் டெக் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளை இந்த 125 சிசி ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. இதன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஸ்கூட்டரை DJI ஆக்ஷன் கேமராவுடன் நாம் கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஸ்கூட்டரின் தொழில்நுட்ப அம்சங்களை இலகுவாகப் பயன்படுத்த ப்ரீமியமான ஸ்விட்ச்கியரையும் கொடுத்துள்ளது ஹோண்டா.

ஸ்கூட்டர் என்றாலும் பைக்குகள் போல பெரிய 17 இன்ச் அலாய் வீல்களை ஹூரைடு 125-யில் கொடுத்துள்ளது ஹோண்டா. சஸ்பென்ஷனுக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஷாக் அப்சார்பர்கள் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. 760 மிமீ என்ற அளவில் குறைவான சீட் உயரத்தைக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டர், 125 கிலோ வரையிலான எடையையும் கொண்டுள்ளது.
இரண்டு வேரியன்ட்களாக இந்த ஹூரைடு 125 ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது ஹோண்டா. இந்திய மதிப்பிற்கு 1.83 லட்சம் ரூபாய் மற்றும் 2.07 லட்சம் ரூபாய் என்ற விலையில் இந்த வேரியன்ட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை ஹோண்டா வெளியிடுவதற்கான வாய்ப்பு இப்போது இல்லை.
இந்தியாவில் ஸ்கூட்டர் கிங் என ஹோண்டா சொல்லப்பட்டாலும், அதன் அனைத்து பெருமைகளும் ஆக்டிவாவை மட்டுமே சேரும். டியோவும் ஓரளவிற்கு விற்பனையாகிறது தான். ஆனால் இந்தியாவில் ஹோண்டாவின் தோல்வியடைந்த ஸ்கூட்டர்களின் பட்டியல் இன்னும் சற்று நீண்டது. க்ளிக், ஏவியேட்டர், கிராஸியா, ஆக்டிவா e மற்றும் QC1 என நிறைய ஸ்கூட்டர்கள் ஹோண்டாவிற்கு இந்தியாவில் வொர்க்அவுட் ஆகாமல் போயிருக்கிறது.
எனவே நிறைய ஸ்கூட்டர் மாடல்களின் டிசைனை இந்தியாவில் காப்புரிமை செய்திருந்தாலும், எதனையும் விற்பனைக்குக் கொண்டு வர ஹோண்டா மெனக்கெடவில்லை. இந்த ஹூரைடு ஸ்கூட்டரின் டிசைனையும் இந்தியாவில் ஹோண்டா பதிவு செய்யலாம். ஆனால் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்தியாவிற்கு 125 சிசி பிரிவைக் கடந்து, 160 பிரிவில் பெர்ஃபாமன்ஸ் ஸ்கூட்டர் ஒன்றை ஹோண்டா திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஹூரைடு 125 சிசி ஸ்கூட்டர் தான் என்றாலும், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்தயாவில் 125 சிசி பிரிவில் ஏர் கூல்டு இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. லிக்விட்-கூல்டு இன்ஜின் ஸ்கூட்டர் விலை அதிகமாக இருக்கும். பட்ஜெட் பிரிவான 125 சிசி பிரிவில் இந்தியா வாடிக்கையாளர்கள் கூடுதலான விலையில் ஸ்கூட்டர்களை விரும்புவார்களா என்பது தெரியாது. எனவே நிறுவனங்களும் பெரிய அளவில் ரிஸ்க் எடுப்பதில்லை.


Click it and Unblock the Notifications