இந்தியாவில் மூன்று புதிய பெர்ஃபாமன்ஸ் பைக்குகளை வெளியிட்டுள்ளது ஹோண்டா.. அவை என்னென்ன?
இந்தியாவில் தற்போது நான்கு புதிய பிக் விங் (Big Wing) பைக்குகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹோண்டா. விலை குறைவான, நிறைய வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய பைக்குகளை ரெட் விங் (Red Wing) ஷோரூம்களின் மூலமும், மிகவும் விலை உயர்ந்த, ப்ரீமியமான பெர்ஃபாமன்ஸ் பைக்குகளை பிக் விங் ஷோரூம்களின் மூலமும் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். தற்போது வெளியாகியிருக்கும் நான்கும் பிக் விங் ரகத்தைச் சேர்ந்தவை.
இதில் கோல்டு விங் பைக் குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இங்கே மற்ற மூன்று பைக் மாடல்களைப் பார்க்கலாம். இவற்றைப் புதிது என்று கூற முடியாது. ஏற்கனவே இருந்ததை மறுஅறிமுகம் அல்லது புதிய வசதிகளுடன் மாற்றியிருக்கிறது ஹோண்டா. இத்துடன் அந்த பைக்குகளின் விலைகளையும் உயர்த்தியிருக்கிறது. அந்த மூன்று புதிய பைக்குகளையும் வரிசையாகப் பார்க்கலாம்.

ஹோண்டா CBR1000RR-R ஃபயர்பிளேடு SP:
சர்வதேச அளவில் விற்பனையில் இருக்கும் தங்களது 1000 சிசி பைக்கான CBR1000RR-R ஃபயர்பிளேடு SP பைக்கை இந்தியாவில் மறுஅறிமுகம் செய்துள்ளது ஹோண்டா. இந்த பைக்கை ஏற்கனவே இரண்டு முறை இந்தியாவில் விற்பனை செய்து பின்னர் நிறுத்தியிருக்கிறது. கடந்த முறை வெளியிடப்பட்டதில் இருந்து எந்தவொரு மாற்றமும் இல்லாமல் விலை மட்டும் கூடுதலாக வெளியாகியிருக்கிறது புதிய பைக்.
இந்த முறை 33.50 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது இந்த 1000 சிசி பைக். இந்த பைக்கில் 14,000 rpm-ல் 217.5 hp பவர் மற்றும் 12.000 rpm-ல் 113 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 999 சிசி, லிக்விட்-கூல்டு, இன்-லைன் ஃபோர் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் பை-டேரக்ஷனல் க்விக்ஷிப்டர் வசதி கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

முன்னர் விற்பனை செய்யப்பட்டதை விட 4.51 லட்சம் ரூபாய் வரை கூடுதலான விலையில் இப்போது வெளியாகியிருக்கிறது. இது விலை அதிகமான பைக் என்பதால் அவ்வப்போது பேட்ச் பேட்சாக இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்துவிட்டு, பின்னர் வலைத்தளத்தில் விற்பனைப் பட்டியலில் இருந்து ஹோண்டா நீக்கிவிடுவதாகத் தெரிகிறது. BMW S1000 RR, கவாஸாகி நின்ஜா ZX-10R மற்றும் டுகாட்டி பனிகாலோ V4 S ஆகிய 1,000 சிசி பைக்குகளுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவுள்ளது இந்த ஹோண்டா பைக்.
ஹோண்டா CB750 ஹார்னெட் மற்றும் XL750 டிரான்ஸ்ஆல்ப்:
அடுத்ததாக CB750 ஹார்னெட் மற்றும் XL750 டிரான்ஸ்ஆல்ப் ஆகிய இரண்டு 750 சிசி பைக் மாடல்களையும் E-கிளட்ச் தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்துள்ளது ஹோண்டா. கடந்த மாதம் தான் NX500 பைக்கை இந்த தொழில்நுட்பத்துடன் ஹோண்டா அப்டேட் செய்த நிலையில், தற்போது 750 சிசி பைக்குகளையும் அப்டேட் செய்துள்ளது.
E-கிளட்ச் என்பது எலெக்ட்ரானிக் கிளட்ச் என்பதைக் குறிக்கிறது. பெயருக்கு ஏற்றது போல கிளட்ச் பயன்பாட்டை முழுவதுமாக எலெக்ட்ரானிக் மயமாக்கி, அதன் மூலம் ரைடருக்கு சிறிய ஆசுவாசத்தைத் தருவது தான் இந்த வசதியின நோக்கம். பைக்கை ஸ்டார்ட் செய்யும் போதும் சரி, கியரை மாற்றும் போதும் சரி, நிறுத்தத்திற்குக் கொண்டு வரும் போது சரி, எப்போதுமே கிளட்சைப் பற்றி நீங்கள் கவலைப் படத் தேவையில்லை. பைக்கே அதனைப் பார்த்துக் கொள்ளும்.
இந்த E-கிளட்ச் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர இந்த இரண்டு பைக்குகளிலும் வேறெந்த மாற்றமும் இல்லை. ஆனால் விலை கூடியிருக்கிறது. CB750 ஹார்னெட் பைக்கை 10.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், XL750 டிரான்ஸ்ஆல்ப் பைக்கை 13.20 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் இப்போது வாடிக்கையாளர்கள் வாங்கலாம். அனைத்து பைக்குகளுக்குமான முன்பதிவை பிக் விங் டீலர்ஷிப்கள் மூலம் இப்போது தொடங்கியிருக்கிறது ஹோண்டா.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை அதிகம் என்றாலும், இந்திய சந்தையில் தொடர்ந்து பெரிய இன்ஜின் கொண்ட பெர்ஃபாமன்ஸ் பைக்குகளை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. சற்று விலை அதிகம் தான் என்றாலும், இதன் மூலம் சர்தேச அளவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளை இந்தியாவிலும் வாடிக்கையாளர்கள் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு ஹோண்டாவை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications