ADV 160 ஸ்கூட்டர் ஸ்பைடர்மேன் எடிஷனை வெளியிட்டுள்ளது ஹோண்டா
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விரைவிலேயே புதிய 160 ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடவுள்ளது. வெளிநாடுகளில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ADV 160 என்ற மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட ஹோண்டா திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் யமஹா ஏராக்ஸ் 155, ஹீரோ ஸூம் 160 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக இந்த மேக்ஸி ஸ்கூட்டர் வெளியாகவிருக்கிறது.
இந்த ADV 160 மேக்ஸி ஸ்கூட்டரை இப்போது மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில் இந்த ஸ்கூட்டரின் சிறப்பு எடிஷன் மாடலை வெளியிட்டிருக்கிறது. இளைஞர்களை ஈர்க்கும் விதமாக ADV 160 ஸ்பைடர்மேன் எடிஷனை மலேசியாவில் தற்போது வெளியிட்டுள்ளது ஹோண்டா.

ஸ்டாண்டர்டு ADV 160 ஸ்கூட்டரில் இருந்து காஸ்மெடிக்காக மட்டும் புதிய ஸ்பைடர்மேன் எடிஷன் ஸ்கூட்டர் வேறுபடுகிறது. மெக்கானிக்கலாகவோ, வசதிகள் ரீதியாகவோ எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தப் புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரை இந்திய மதிப்பிற்கு 3.34 லட்சம் ரூபாய் என்ற விலையில் ஹோண்டா மலேசியாவில் விற்பனை செய்யவுள்ளது. இது ஸ்டாண்டர்டு ADV 160 ஸ்கூட்டரை விட 32,000 ரூபாய் கூடுதல் விலை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய ஸ்பைடர்மேன் எடிஷானது சிறப்பு எடிஷன் மட்டுமல்ல, லிமிடட் எடிஷனும் கூட. இதனை வெறும் 300 யூனிட்டுகளை மட்டுமே தயாரித்து மலேசியாவில் விற்பனை செய்யவுள்ளது ஹோண்டா. காஸ்மெடிக்கான மாற்றங்களுடன் ஒரு பரிசுப் பெட்டகத்தையும் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறது ஹோண்டா. அதில் ஸ்பைடர்மேன் எடிஷன் ஃப்யூல் டேங்க் கேப், ஸ்பைடர்மேன் எடிஷன் LED தெர்மோ ஃபிளாஸ்க், ஹோண்டா மற்றும் ADV 160 எம்ப்ளம் மற்றும் உரிமைச் சான்றிதழ் ஆகியவை அடங்கும்.

ஹோண்டா ADV 160 ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்:
பார்த்தவுடனே மார்வல் யூனிவர்ஸின் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையிலான கிராஃபிக்ஸைக் கொண்டுள்ளது புதிய ADV 160 ஸ்பைடர்மேன் எடிஷன் ஸ்கூட்டர். சிவப்பு மற்றும் நீல நிறங்கள் முன்பக்க மற்றும் பக்கவாட்டு பாடி பேனல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள. இத்துடன் ஸ்பைடர்மேனின் உடை போலவேலான கிராஃபிக்ஸையும் பாடி பேனல்கள் கொண்டிருக்கின்றன.
இதனைத் தவிர வேறு மாற்றங்களோ, வேறுபாடுகளோ புதிய சிறப்பு எடிஷன் ஸ்கூட்டரில் இல்லை. அதே 157 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் தான். CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 15.8 hp பவர் மற்றும் 14.7 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதே இன்ஜின் தான் இந்தியாவில் வெளியிடப்படும் ADV 160 ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளூடூத் வசதியுடன் கூடிய 5 இன்ச் TFT டிஸ்பிளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், எஸ்எம்எஸ் மற்றும் கால் அலர்ட்கள், LED லைட்டிங், கீலெஸ் இக்னிஷன், USB டைப்-C சார்ஜிங் போர்ட், அட்ஜஸ்டபிள் விண்டு ஸ்கிரீன் மற்றும் சிங்கிள் சேனல் ABS ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது இந்த மேக்ஸி ஸ்கூட்டர். முன்பக்கமும் பின்பக்கமும் 14 இன்ச் மற்றும் 13 இன்ச் வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பதையடுத்து, சிறப்பான ஹேண்டிலிங்கையும் இந்த மேக்ஸி ஸ்கூட்டர் கொண்டிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
இந்தியாவில் மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவில் வேகமாக போட்டி அதிகரித்து வருகிறது. முன்னர் யமஹாவின் ஏராக்ஸ் 155 மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. அடுத்ததாக ஹீரோ ஸூம் 160 வந்தது. ஹோண்டாவுடன், டிவிஎஸ்ஸும் விரைவில் புதிய லிக்விட்-கூல்டு இன்ஜின் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டரை வெளியிடவுள்ளது. போட்டி அதிகமாவதைத் தொடர்ந்து யமஹாவும் மற்றொரு மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்குகிறது. மாஸ் மார்க்கெட் மேக்ஸி ஸ்கூட்டர் களம் உண்மையிலேயே சூடுபிடித்து அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது.


Click it and Unblock the Notifications