ஆக்டிவாவைப் போலவே அதிகமாக விற்பனை செய்ய ஹோண்டா வெளியிடும் புதிய ஸ்கூட்டர் இது தான்
இந்தியாவில் புதிதாக ADV160 என்ற மேக்ஸி ஸ்கூட்டரின் டிசைனை காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது ஹோண்டா. கடந்த சில வாரங்களில் மட்டும் இந்தியாவில் ஹோண்டா காப்புரிமைக்காகப் பதிவு செய்யும் மூன்றாவது இருசக்கர வாகன டிசைன் இதுவாகும். இதற்கு முன்பு WN7 என்ற எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஏர்பிளேடு என்ற மற்றொரு மேக்ஸி ஸ்கூட்டர்களின் டிசைனையும் இந்தியாவில் காப்புரிமைக்காக ஹோண்டா பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
ADV160 மேக்ஸி ஸ்கூட்டரின் டிசைனை இந்தியாவில் காப்புரிமை செய்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய அட்வென்சர் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடுமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்திருக்கிறது. இந்த அட்வென்சர் வகை ஸ்கூட்டர் மாடலின் சிறப்பம்சங்கள் என்ன, இது இந்தியாவில் வெளியாகுமா ஆகிய கேள்விகளுக்கான பதிலை இங்கே நாம் பார்க்கலாம்.

இந்த ஸ்கூட்டரில் 157 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜினைக் கொடுத்துள்ளது ஹோண்டா. ஏர்பிளேடு ஸ்கூட்டரிலும் இதே இன்ஜின் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை விட சற்று கூடுதல் பவரை உற்பத்தி செய்யும் வகையில் இருக்கிறது ADV160 ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்ஜின். இந்த இன்ஜினானது 16 hp பவர் மற்றும் 14.7 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது.
இந்த ADV160 ஸ்கூட்டரைப் பார்க்கும் போதே எதற்குப் போட்டியாக இவற்றை இந்தியாவில் ஹோண்டா வெளியிடலாம் என்பதை நாம் யூகித்து விடலாம். ஆம், யமஹாவின் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டருக்கே முதன்மைப் போட்டியாக இந்த ADV160 ஸ்கூட்டரை வெளியிட ஹோண்டா திட்டமிட்டிருக்கும். அதனைத் தவிர்த்து ஹீரோவின் ஸூம் 160 ஸ்கூட்டருக்குப் போட்டியாகவும் இந்த ADV160 இருக்கும்.

அண்டர்போன் சேஸியைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஹோண்டா மேக்ஸி ஸ்கூட்டரில், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் செட்டப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்கூட்டரின் முன்பக்கம் 14 இன்ச் வீலும், பின்பக்கம் 13 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்காக முன்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
780 மிமீ சீட் உயரத்துடன், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலேயே இந்த மேக்ஸி ஸ்கூட்டர் இருக்கிறது. எடை 133 கிலோ. இது ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரை விட 7 கிலோ அதிகம், ஆனால் ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரை விட 9 கிலோ குறைவு. 125 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர் என்பதால் சிங்கிள் சேனல் ABS வசதியும் இந்த ஸ்கூட்டரில் உண்டு.
மிகவும் அக்ரஸிவ்வான டிசைனைக் கொண்டிருக்கும் இந்த மேக்ஸி ஸ்கூட்டரை ஹோண்டா இந்தியாவில் வெளியிடுமா? பொதுவாக காப்புரிமையை பாதுகாப்பதற்காக பல்வேறு இருசக்கர வாகன டிசைனை இந்தியாவில் ஹோண்டா பதிவு செய்கிறது. அவையெல்லாமே இந்தியாவில் வெளியாவதில்லை. ஆனால் இந்த ADV160 மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியாவதற்கு நிறையே வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த ஆண்டில் இருந்தே இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியிடப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த மேக்ஸி ஸ்கூட்டரை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது ஹோண்டா. இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் பட்சத்தில், இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம். ஹோண்டா என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டுமொத்தமாக ஸ்கூட்டர் பிரிவில் ஹோண்டாவின் ஆக்டிவா தான் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. அதே போல் மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவிலும் ஆதிக்கம் செலுத்த ஹோண்டா விரும்பலாம். ஆனால் மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவு இப்போது தான் தொடக்கநிலையில் இருக்கிறது. மிகவும் குறைவான வாடிக்கையாளர்களே மேக்ஸி ஸ்கூட்டர்களைத் தேடி வாங்குகிறார்கள். ஆனால் இப்போதே கணிசமான அளவில் போட்டியாளர்கள் இந்தப் பிரிவில் இருக்கிறார்கள்.
தற்போது 110 சிசி மற்றும் 125 சிசி பிரிவில் மட்டுமே இரண்டே இரண்டு ஸ்கூட்டர் மாடல்களை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவு வளரத் தொடங்கும் போது அதில் ஒரு ஹோண்டா ஸ்கூட்டர் இருக்க வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்களிடம் விசிபிலிட்டி கிடைக்கும். அதுவே இந்தியாவில் இந்த ADV160 ஸ்கூட்டரை ஹோண்டா வெளியிட நல்ல காரணம் தான்.


Click it and Unblock the Notifications