பெரிய கனவோடு ஹோண்டா அறிமுகப்படுத்திய பைக்! ஒருத்தரும் வாங்காததால் சைலண்ட்டாக விற்பனை நிறுத்தம்!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India - HMSI) நிறுவனத்திற்கு விலை குறைவான பைக்குகள் தான் விற்பனையில் எப்போதும் நம்பிக்கை அளிக்கக் கூடியவைகளாக இருந்துள்ளன. அதிக விலையில் பல்வேறு விதமான பிரீமியம் பைக்குகளை இந்தியாவில் ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது. ஆனால், அவற்றுள் மக்களின் கவனத்தை ஈர்த்தவை மிக சில மட்டுமே ஆகும்.
இருப்பினும், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளவதும், பின்னர் அது ஹோண்டா நிறுவனத்திற்கு எடுப்படாமல் போவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், சில வருடங்களுக்கு முன் பலத்த நம்பிக்கையுடன் அறிமுகம் செய்த 300சிசி பைக்கின் விற்பனையை எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் சைலண்ட்டாக HMSI நிறுத்திக் கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, HMSI-இன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ள அந்த 300சிசி ஹோண்டா பைக் வேறு எதுவும் இல்லை... சிபி300எஃப் (CB300F) ஆகும். மேலும், இந்த பைக்கின் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் (Flex-fuel) வேரியண்ட்டின் விற்பனையும் நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹோண்டாவின் ஒரேயொரு ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்காக சிபி300எஃப் இருந்த நிலையில் அதன் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம் சமீபத்தில்தான் சிபி300எஃப் பைக்கின் விலையை குறைத்திருந்தது. அதன் மூலமாக, இந்தியாவிலேயே குறைந்த விலையிலான 300சிசி பைக்காக சிபி300எஃப் கிடைத்துவந்தது. மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி (GST) குறைப்பு மூலமாக அந்த விலை குறைப்பை ஹோண்டா கொண்டுவந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதனை வாடிக்கையாளர்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தினர்.

மேலும், சிபி300எஃப் பைக்கில் வழங்கப்பட்டு வந்த பெட்ரோல் என்ஜின் ஆனது 85% எத்தனால் (Ethanol) கலக்கப்பட்ட பெட்ரோலிலும் இயங்கக்கூடியதாக இருந்தது. இ85 எனப்படும் இந்த வகை பெட்ரோலை நாடு முழுவதும் விநியோகிக்க இப்போதுதான் மத்திய அரசு ஆலோசித்துவரும் நிலையில், ஹோண்டா அதனை ஏற்கனவே தனது சிபி300எஃப் பைக்கில் செயல்படுத்தியது.
இத்தனை சிறப்பம்சங்கள் உடன் வந்ததால் அறிமுகத்தின் போது ஹோண்டா சிபி300எஃப் பைக் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியது. செயல்படுதிறனில் இந்த ஹோண்டா பைக்கை பெரியதாக எந்தவொரு குறையும் சொல்ல முடியவில்லை. இருப்பினும், இந்த பைக்கை வாங்க பலரும் முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
விற்பனை போதிய அளவிற்கு இல்லாத காரணத்தினாலேயே சிபி300எஃப் பைக்கின் விற்பனையை ஹோண்டா நிறுத்தியுள்ளது. இதனால், இந்தியாவில் ஹோண்டாவின் விலை குறைவான பைக்குகளுக்கும், விலைமிக்க பைக்குகளுக்கும் இடையில் தற்போதைக்கு சிபி350 (CB350) மற்றும் சிபி350 ஆர்.எஸ் என்கிற இரு 350சிசி பைக்குகள் மட்டுமே தற்போதைக்கு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் 200சிசி- 250சிசி பைக்குகள் பிரிவு பல பிரபலமான பைக் மாடல்களுடன் போட்டி மிகுந்ததாக உள்ளது. இதில், சிபி300எஃப் மூலம் ஹோண்டா தனக்கான ஒரு இடத்தை பிடிக்க முயற்சித்து தோற்றுப்போய் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். செயல்படுதிறனை பொறுத்தவரையில் சிபி300எஃப் பைக்கை எந்தவொரு குறையும் சொல்ல முடியாது. தொழிற்நுட்ப அம்சங்களிலும் பெரியதாக எந்த குறையும் இல்லை.
அப்படியென்றால், எந்த இடத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதில் இந்த பைக் கோட்டை விட்டுள்ளது என்றால், தோற்றத்தில் ஆகும். ஹோண்டா சிபி300எஃப் மிகவும் ஸ்டைலிஷான பைக் என சொல்ல முடியாது. மற்ற பைக் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது பைக்குகளின் தோற்றத்தை மெருக்கேற்றி வரும் நிலையில், சற்று சாதாணமான தோற்றத்திலான சிபி300எஃப் ஆல் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications