இந்த பைக்ல கிளட்ச்சே பயன்படுத்த தேவையில்ல.. ஹோண்டாவின் புதிய பைக் அறிமுகம்

இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்து வரும் 500 சிசி அட்வென்சர் பைக் மாடலாக இருக்கிறது NX500. தற்போது இந்த பைக்கை E-கிளட்ச் (E-Clutch) தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்துள்ளது அந்நிறுவனம். E-கிளட்ச் தொழில்நுட்பம் என்பது கிளட்ச் இல்லாத பைக் பயன்பாட்டைக் கொடுப்பதற்காக ஹோண்டா சொந்தமாக உருவாக்கிய ஒரு தொழில்நுட்பம் ஆகும். இதனை சர்வதேச அளவில் பல்வேறு பைக்குகளில் ஹோண்டா பயன்படுத்தி வருகிறது.

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் NX500 பைக்கிற்கும் இந்த தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இந்த E-கிளட்ச் தொழில்நுட்பம் கொண்ட CB650R மற்றும் CBR650R ஆகிய பைக்குகளை இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்திருக்கிறது. E-கிளட்ச் தொழில்நுட்பம் கொண்ட மூன்றாவது ஹோண்டா பைக்காக இந்தியாவில் விற்பனை செய்யப்படவிருக்கிறது புதிதாக அப்டேட் செய்யப்பட்ட NX500.

Honda NX500 with E-Clutch

E-கிளட்ச் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து முன்பு விற்பனையில் இருந்த NX500-க்கும், இனி விற்பனை செய்யப்படவிருக்கும் NX500-க்கும் இடையே வேறு எந்த வேறுபாடுகளும் இல்லை. ஆனால் இந்த வசதி புதிதாகக் கொடுக்கப்பட்டிருப்பதால் விலை கொஞ்சம் அதிகமாகவே கூடியிருக்கிறது. முந்தைய மாடலை விட 1.11 லட்சம் ரூபாய் அதிகமாக 7.44 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது E-கிளட்ச் தொழில்நுட்பம் கொண்ட புதிய NX500.

E-கிளட்ச் தொழில்நுட்பத்தினால் என்ன பயன்?

மேலே கூறியது போல கிளட்ச் இல்லாத பயன்பாட்டை இந்தத் தொழில்நுட்பம் கொடுக்கும். புதிய NX500 பைக்கில் வழக்கம் போல ஒரு கிளட்ச் லீவர் மற்றும் கியர் பெடல் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும். இதில் கிளட்சை நாம் பயன்படுத்த வேண்டிய தேவையே இல்லை. கியரை மட்டும் மாற்றினால் போது கிளட்சின் பயன்பாட்டை எலெக்ட்ரானிக் ஆக்சுவேட்டர்கள் (Electronic Actuators) மூலமாக பைக்கே பார்த்துக் கொள்ளும்.

2026 Honda NX500

பைக் ஓடும் போது மட்டுமல்ல, நிறுத்தும் போது கூட கிளட்சை நாம் மேனுவலாகப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. நான்காவது கியர் அல்லது ஐந்தாவது கியரில் கூட டவுன்ஷிப்ட் செய்யாமல் அப்படியே பைக்கை நிறுத்தலாம். பைக்கே கிளட்ச் செயல்பாடுகளைப் பார்த்துக் கொள்ளும். ஆனால் மீண்டும் பைக்கை இயக்குவதற்கு முன்பு முதல் கியருக்கு டவுன்ஷிப்ட் செய்துவிட வேண்டும்.

மேனுவலாக கிளட்சை நான் இயக்கினால் தான் எனக்குப் பிடிக்கும் என சொல்லும் வாடிக்கையாளர்களுக்குத் தான், கிளட்ச் லீவரையும் இந்த பைக்கில் ஹோண்டா கொடுத்திருக்கிறது. வேண்டும் என்னும் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் கிளட்ச் லீவரைப் பயன்படுத்தி கியர் ஷிப்ட் செய்யலாம். இதனால் எந்த வேறுபாடும் ஏற்படப்போவது இல்லை.

ஹோண்டா NX500 சிறப்பம்சங்கள்:

மேலே கூறியது போல இந்த ஒரு வசதி கொடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து பைக்கில் வேறு எந்த வகையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. E-கிளட்ச் சிஸ்டத்தை கூடுதாகக் கொடுப்பதால் பைக்கின் எடை மட்டும் 3 கிலோ வரை உயர்ந்து 199 கிலோவாக இருக்கிறது. இந்த பைக்கில் 471 சிசி, ட்வின் சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 8,500 rpm-ல் 47 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 43 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. முன்பக்கம் 19 இன்ச் வீலுடன் USD ஃபோர்க் சஸ்பென்ஷனுடன், பின்பக்கம் 17 இன்ச் வீலுடன் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு பக்கமும் டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ப்ரீமியமான பைக் என்பதால் முன்பக்கம் டூயல் டிஸ்க் பிரேக்குகளுடன் ப்ரீமியமான நிஸ்ஸின் காலிப்பர்களே கொடுக்கப்பட்டுள்ளன. டூயல் சேனல் ஏபிஎஸ்ஸைத் தவிர்த்து, ஸ்விட்சபிள் ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதி மட்டுமே எலெக்ட்ரானிக் வசதியாகப் புதிய பைக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவற்றைத் தவிர்த்து ஒரு ப்ரீமியம் பைக்கில் இருக்கும் ரைடிங் மோடுகள், பிற எலெக்ட்ரானிக் அம்சங்கள் மற்றும் ஃபிளாஷியான வசதிகள் எதுவும் இந்த 500 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்கில் கொடுக்கப்படவில்லை. அந்த வகையில் ப்ரீமியம் பிரிவில் அடிப்படையான பைக் என்றும் இதனைக் கூறலாம். ஆனால் விலை சற்று அதிகமாக இருப்பது இங்கே பிரச்சினை தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

E-கிளட்ச் தொழில்நுட்பம் புதுமையான ஒன்று தான் என்றாலும் அதற்காக மட்டும் இந்த பைக்கை வாங்க முடியாது அல்லவா. அதுவும் இதனை விடக் குறைவான விலையில் போட்டி பைக்குகள் இருக்கும் போது. இந்த ஹோண்டா NX500 பைக்கிற்குப் போட்டியாக, இதனை விட மேம்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய F 450 GS பைக்கை சமீபத்தில் தான் BMW அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த F 450 GS பைக்கும் முழுமையான அட்வென்சர் பைக்காக, ட்வின் சிலிண்டர் இன்ஜினுடன், 5.30 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. NX500-ன் இன்ஜின் உற்பத்தி செய்யும் கிட்டத்தட்ட அதே பவர் மற்றும் டார்க் அளவையே F 450 GS-ன் 420 சிசி இன்ஜினும் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, May 12, 2026, 13:21 [IST]
English summary
Honda nx500 with e clutch technology launched in india check all details here
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+