ரூ.1.35 லட்சத்தில் ஹோண்டா க்யூசி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்... டிவிஎஸ் ஐக்யூப் போட்டியாளர்!
இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனம் தனது புதிய க்யூசி3 (QC3) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.1.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர், குடும்பப் பயன்பாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏதர் ரிஸ்டா, விடா விஎக்ஸ்2 உள்ளிட்ட மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும்.
புதிய ஹோண்டா க்யூசி3 ஸ்கூட்டரில் 3 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 145 கி.மீ வரை செல்லும் திறன் இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இது இந்திய ஓட்டுநர் சுழற்சி (IDC) சோதனை முறைகளின் அடிப்படையிலான மதிப்பீடு என்பதால், அன்றாடப் பயன்பாட்டில் கிடைக்கும் ரேஞ்ச் என்பது வேகம் மற்றும் ஓட்டும் முறையைப் பொறுத்து மாறுபடும்.

பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது. முழுமையாக 100 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய சுமார் 4 மணி நேரம் தேவைப்படும். தினசரி பயன்பாட்டுக்கும், நெரிசல் மிகுந்த நகர்ப்புற பயன்பாட்டிற்கும் இந்த சார்ஜ் செய்வதற்கான நேரமும், ரேஞ்ச் போதுமானதாக இருக்கும் என்று கூறலாம்.
புதிய க்யூசி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 5 இன்ச் டிஎஃப்டி (TFT) டிஜிட்டல் திரை வழங்கப்பட்டுள்ளது. ஹோண்டா ரோடு ஸின்க் (RoadSync) இணைப்பு மூலம் ஸ்மார்ட்போன் தொடர்பான வசதிகளையும், வழிகாட்டி (Navigation) தகவல்களையும் பெற முடியும். ஸ்மார்ட் கீ, முன்புற யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி போன்றவை தினசரி பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன.
குடும்பப் பயன்பாட்டை கருத்தில் கொண்டவர்களுக்கு மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. க்யூசி3 ஸ்கூட்டரில் 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட இருக்கைக்கு அடியில் பொருட்களுக்கான சேமிப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் மற்றும் அன்றாடப் பொருட்களை வைத்துச் செல்ல இது உதவும். குறிப்பாக பேட்டரி அமைப்பால் சேமிப்பு இடம் குறையும் சில மின்சார ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்கூட்டரில் போதுமானதாக இருக்கிறது.
ஏற்கனவே க்யூசி1 மற்றும் ஆக்டிவா இ: ஆகிய மாடல்கள் உள்ள நிலையில், ஹோண்டாவின் மின்சார ஸ்கூட்டர் வரிசையில் மூன்றாவது மாடலாக க்யூசி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது. அதிக தூரம் செல்லக்கூடிய குடும்ப ஸ்கூட்டராக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்ட கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிக்கு பதிலாக, க்யூசி3 ஸ்கூட்டரில் நிலையான பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது.
முதல்கட்டமாக டெல்லி, ஆக்ரா, கட்டாக், சூரத் மற்றும் கொல்லம் ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹோண்டா ரெட்விங் (RedWing) டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை தொடங்குகிறது. அடுத்த கட்டமாக தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். குறிப்பிட்ட நகரங்களில் ரூ.5,000 தொகையுடன் முன்பதிவு தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட்டில் பெட்ரோல் பைக், ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டா முன்னிலையில் உள்ளது. ஆனால், எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மார்க்கெட்டில் மிகவும் பின்தங்கி உள்ளது.
முன்கூட்டியே தனது EV இருசக்கர வாகனங்களை சந்தைக்கு கொண்டு வரவில்லை என்பதுடன், ஆக்டிவா இ ஸ்கூட்டரின் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரி மற்றும் அதன் சார்ஜிங் முறைகள் உள்ளிட்டவை போதுமான வரவேற்பை பெற்று தரவில்லை. இதனை மனதில் வைத்து பட்ஜெட் விலையிலான QC1 ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக சற்றே அதிக பிரிமீயம் அம்சங்கள், ரேஞ்ச் கொண்டதாக இந்த புதிய QC3 ஸ்கூட்டரை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications


