மீண்டும் விற்பனைக்கு வந்தது ஹோண்டா ரெபெல் 500.. இ-கிளட்ச் மாடலும் அறிமுகம்!
பிரீமியம் பைக் சந்தையில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு எஞ்சின் திறன் மட்டுமின்றி, தனித்துவமான வடிவமைப்பும் முக்கியமானதாக மாறியுள்ளது. வழக்கமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளிலிருந்து மாறுபட்டு தனித்துவமான க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களை விரும்புபவர்களுக்கான தேர்வுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ரெபெல் 500 பைக்கை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட இந்த மாடல், தற்போது அதிக இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. அத்துடன், பல புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் சந்தைக்கு வந்துள்ளது.

இரண்டு வேரியண்ட்டுகள்
புதிய ஹோண்டா ரெபெல் 500 இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலின் விலை ரூ.4,49,900 ஆகவும், இ-கிளட்ச் தொழில்நுட்பம் கொண்ட மாடலின் விலை ரூ.4,89,900 என்ற பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு மாடல்களுக்கும் ரூ.40,000 வரை
வித்தியாசம் உள்ளது.
முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் சிபியூ (CBU) மாடலாக விற்பனை செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ.5.12 லட்சமாக இருந்தது. தற்போது இந்தியாவில் உற்பத்தி மற்றும் உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுவதால், ஆரம்ப விலை கணிசமாக குறைந்துள்ளது.
இரட்டை சிலிண்டர் எஞ்சின்
ரெபெல் 500 பைக்கின் முக்கிய பலமாக இதன் எஞ்சினை குறிப்பிடலாம். இதில் 471 சிசி, லிக்யூடு கூல்டு, பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 46 எச்பி பவரையும், 43.3 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இதனுடன் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிலிண்டர்கள் கொண்ட அமைப்பு என்பதால் சீரான பவர் டெலிவரியை எதிர்பார்க்கலாம். குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த எஞ்சின் அமைப்பு முக்கியமானதாக இருக்கும்.
தனித்துவமிக்க வடிவமைப்பு
ஹோண்டா ரெபெல் 500 வழக்கமான க்ரூஸர் பைக்குகளைப் போல பெரிய அளவிலான குரோம் அலங்காரங்கள் இல்லை. அதற்கு பதிலாக கருப்பு நிற உதிரிபாகங்கள், எளிமையான பாடி அமைப்பு, தடிமனான டயர்கள் ஆகியவற்றுடன் பாபர் (Bobber) வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் தோற்றம் மற்ற பைக்குகளிலிருந்து வேறுபடுகிறது.
முன்புறத்தில் வட்ட வடிவ எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறிய அளவிலான எரிபொருள் டேங்க், அகலமான ஹேண்டில்பார் மற்றும் தனித்துவமான இருக்கை அமைப்பு இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் அதிக அலங்காரங்கள் இல்லாத எளிமையான வடிவமைப்பை விரும்புபவர்களை இலக்காகக் கொண்டு இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் இருக்கை உயரம் வெறும் 690 மிமீ மட்டுமே. இதனால் வெவ்வேறு உயரம் கொண்ட ரைடர்களும் கால்களைத் தரையில் ஊன்றுவதற்கு வசதியாக இருக்கும். இதன் மொத்த எடை 191 கிலோவாகவும், 11.2 லிட்டர் எரிபொருள் டேங்க் கொண்டதாகவும் இருக்கிறது. முன்புறம் மற்றும் பின்புறம் 16 இன்ச் வீல்கள் இடம்பெற்றுள்ளன.
இ-கிளட்ச் வசதி
இந்த முறை ரெபெல் 500 பைக்கில் இ-கிளட்ச் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாக மேனுவல் பைக்குகளில் கியர் மாற்றும்போதும், வாகனத்தை நிறுத்தி மீண்டும் நகர்த்தும்போதும் கிளட்ச் லிவரை இயக்க வேண்டும். ஆனால் இந்தத் தொழில்நுட்பம் அந்த வேலையை மின்னணு முறையில் தானாகச் செய்கிறது.
குறிப்பாக போக்குவரத்து நெரிசலில் அடிக்கடி கிளட்ச் லிவரை இயக்க வேண்டிய சிரமம் குறையும். இருப்பினும், இது முழுமையான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடையாது. ரைடர் வழக்கம்போல கியர்களை மாற்ற வேண்டும். விரும்பினால் கிளட்ச் லிவரையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் மேனுவல் ரைடிங் அனுபவம் தொடர்கிறது.
புதிய தொழில்நுட்ப வசதிகள்
முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது புதிய ரெபெல் 500-ல் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் 3.5 இன்ச் வட்ட வடிவ டிஎஃப்டி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. ஹோண்டா ரோட்சிங்க் (RoadSync) இணைப்பு மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதிகள் மூலம் பயண விவரங்களை எளிதாக அறிந்துகொள்ள முடியும்.
மேலும், ஹோண்டா செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் எனப்படும் டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பாதுகாப்பு வசதி இடம்பெற்றுள்ளது.
முன்பதிவு தொடக்கம்
புதிய ரெபெல் 500 பைக்கிற்கான முன்பதிவு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.5,000 செலுத்தி ஹோண்டா அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பிக்விங் (BigWing) விற்பனையகங்களில் முன்பதிவு செய்யலாம். மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் மேட் டியூன் பிரவுன் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த மோட்டார்சைக்கிள் கிடைக்கும்.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 உள்ளிட்ட பிரீமியம் க்ரூஸர் மாடல்களுக்கு ஹோண்டா ரெபெல் 500 போட்டியாக இருக்கும். குறிப்பாக, 471 சிசி இரட்டை சிலிண்டர் எஞ்சின், குறைவான இருக்கை உயரம் மற்றும் இ-கிளட்ச் வசதி ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்களாக இருக்கும். உள்நாட்டு பாகங்கள் மூலமாக விலை குறைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மாற்றுத் தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications
" title="கர்நாடகாவில் இனி அரை ஹெல்மெட்டுக்கு தடை... அரசு அதிரடி அறிவிப்பு!
