இந்தியாவில் தைரியமாக பல கோடி ரூபாய் பணத்தை கொட்டும் ஹோண்டா! முதலமைச்சரே சொல்லிட்டாரா!!
இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (HMSI) நிறுவனம் தனது உற்பத்தித் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன்படி, ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள தபுகரா ஆலையில் மூன்றாவது உற்பத்திப் பிரிவை அமைக்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
HMSI-இன் இந்த புதிய உற்பத்திப் பிரிவு 2028ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 6.7 லட்சம் இருசக்கர வாகனங்களை தயாரிக்க முடியும். இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, HMSI-இன் தபுகரா ஆலையின் மொத்த உற்பத்தித் திறன் ஒரு வருடத்திற்கு 20.1 இலட்சம் யூனிட்டுகளாக உயரும்.

இந்த விரிவான திட்டத்திற்காக HMSI சுமார் ரூ.1,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த விரிவாக்கம் அந்தப் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய உற்பத்தி விரிவாக்கம் ஆனது ஹோண்டா மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நோக்கில் கொண்டுவரப்படுகிறது.
HMSI நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுட்சுமு ஓட்டானி இதுகுறித்து கூறுகையில், "இந்த விரிவாக்கம் நிறுவனத்தின் உற்பத்திச் சூழலை வலுப்படுத்தும். மேலும், சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்தும். இது நீண்டகால வளர்ச்சிக்கு உதவுவதுடன், சப்ளை செயினில் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா, மாநிலத்தின் உற்பத்திச் சூழலுக்கு இந்த முதலீடு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தொழில் வளர்ச்சியில் ராஜஸ்தானின் நிலையை இது மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தன்னம்பிக்கை உடன் தெரிவித்து உள்ளார்.
HMSI-இன் தபுகரா ஆலை 2011ஆம் ஆண்டில் வருடத்திற்கு 6 லட்சம் யூனிட் உற்பத்தி திறனுடன் செயல்படத் தொடங்கியது. பல ஆண்டுகளாக இதன் உற்பத்தித் திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது ஆண்டுக்கு 13 இலட்சம் யூனிட்களாக உள்ளது. 2026 நிதியாண்டுக்குள் ஆட்டோமேஷன் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளால் இந்த திறன் 13.4 இலட்சம் யூனிட்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
HMSI நிறுவனம் தற்போது இந்தியாவில் நான்கு உற்பத்தி ஆலைகளை நிர்வகிக்கிறது. அவற்றின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 62.5 இலட்சம் யூனிட்டுகள் ஆகும். 2001இல் செயல்பாடுகளைத் தொடங்கியதில் இருந்து இந்தியாவில் சுமார் 7 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களை HMSI தயாரித்துள்ளது. தபுகரா விரிவாக்கத்துடன், குஜராத்தில் உள்ள விதாலபூர் ஆலையிலும் ஹோண்டா நிறுவனம் நான்காவது உற்பத்திப் பிரிவை அமைத்து வருகிறது. இது 2027இல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய உற்பத்திப் பிரிவுகள் மற்றும் பிற திட்டமிடப்பட்ட விரிவாக்கங்களின் மூலம், 2028 நிதியாண்டுக்குள் HMSI நிறுவனத்தின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் இந்தியாவில் சுமார் 80 இலட்சம் யூனிட்டுகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன்-இல்லா போக்குவரத்து இலக்கை அடைவதற்கான உலகளாவிய இலக்குடன் தனது செயல்பாடுகளை ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து சீரமைத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் அதிகம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹோண்டா உள்ளது. இத்தகைய நிறுவனத்திற்கு முக்கியமான உற்பத்தி மையம் என்றால், அது நமது இந்தியா தான். ஆகையால், இந்தியாவில் தொழிற்சாலையை விரிவாக்குவதன் மூலம் இந்திய சந்தையில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, உலகளாவிய தேவைகளையும் ஹோண்டாவால் சமாளிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








