ஹீரோ ஸ்பிளெண்டருக்கு போட்டியாக புதிய பைக்கை களமிறக்கும் ஹோண்டா! சம்பவத்துக்கு தேதி குறிச்சுட்டாங்க!
இந்தியாவில் தற்போது ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வாகனங்கள் (Flex-Fuel Vehicles) அதிக அளவில் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவின் நம்பர்-1 டூவீலர் நிறுவனமாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, 2 ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
அவை ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் (Hero Splendor Plus Flex-Fuel) மற்றும் ஹீரோ ஹெஎச்எஃப் டீலக்ஸ் ப்ளக்ஸ்-ஃப்யூயல் (Hero HF Deluxe Flex-Fuel) ஆகியவை ஆகும். இவை E85 எரிபொருளில் இயங்க கூடியவை ஆகும். அதாவது 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலந்த எரிபொருளில் இயங்கும் திறன் இவற்றுக்கு உண்டு.

இதை தொடர்ந்து ஹோண்டா நிறுவனமும் 'மீண்டும்' ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் சந்தையில் நுழையவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், மீண்டும்தான். ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் முன்பு சிபி300எஃப் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் (CB300F Flex-Fuel) பைக்கை விற்பனை செய்து வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் சிபி300எஃப் வரிசை பைக்குகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு குறைந்தது.
எனவே சிபி300எஃப் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் பைக்கின் விற்பனையை ஹோண்டா நிறுத்தி விட்டது. இதை தொடர்ந்துதான் தற்போது மீண்டும் இந்தியாவின் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வாகன சந்தையில் நுழைய ஹோண்டா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஹோண்டா நிறுவனம் வரும் ஜூலை 24ம் தேதி இந்திய சந்தையில் புத்தம் புதிய பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது என்ன பைக்? என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இது ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வாகனமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஹெச்டி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஒருவேளை ஹோண்டா நிறுவனம் வரும் ஜூலை 24ம் தேதி ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக இருந்தால் அது ஷைன் (Shine) பைக்கின் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் வெர்ஷனாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த தகவல் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக நேற்று (ஜூன் 12) ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் 4 பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ததது. அவை ஹோண்டா சிபி750 ஹார்னெட் இ-க்ளட்ச் (Honda CB750 Hornet E-Clutch), ஹோண்டா எக்ஸ்எல்750 டிரான்ஸ்லாப் இ-க்ளட்ச் (Honda XL750 Transalp E-Clutch), ஹோண்டா சிபிஆர்1000ஆர்ஆர்-ஆர் ஃபயர்பிளேடு எஸ்பி (Honda CBR1000RR-R Fireblade SP) மற்றும் 2026 ஹோண்டா கோல்டு விங் (2026 Honda Gold Wing) ஆகியவை ஆகும்.
இந்த பிரீமியம் பைக்குகளின் விலை முறையே 10.49 லட்ச ரூபாய், 13.20 லட்ச ரூபாய், 33.50 லட்ச ரூபாய் மற்றும் 44.30 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹீரோ நிறுவனம்தான் ஹோண்டா நிறுவனத்தின் முக்கியமான போட்டி நிறுவனம் ஆகும். இதில், ஹீரோ நிறுவனம் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் டூவீலர்களை அறிமுகம் செய்து விட்ட நிலையில், ஹோண்டா நிறுவனமும் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் டூவீலரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்றே நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications