இந்தியாவில் காப்புரிமை பெற்ற ஹோண்டா UC3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... 122 கி.மீ ரேஞ்ச், 80கிமீ வேகம்!!
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புதிய மாடல்களை வரிசை கட்டி அறிமுகம் செய்யும் முனைப்பில் ஹோண்டா உள்ளது. அதன்படி, தனது யுசி3 (UC3) எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். தற்போது வியட்நாம் மற்றும் தாய்லாந்து நாடுகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவிலும் காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் உள்ளிட்ட நிறுவனங்கள் மிக வலுவான நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் இரண்டாவது பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பெட்ரோல் பைக், ஸ்கூட்டர் சந்தையில் மிக வலுவான நிலையில் இருந்தாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் மிகவும் பின்தங்கி உள்ளது.

தற்போது இரண்டு ஆக்டிவா இ மற்றும் க்யூசி1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை மட்டும் வைத்துள்ள அந்நிறுவனம் விரைவில் புதிய மாடல்களுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையிலும் வர்த்தகத்தை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் இருக்கும் வழக்கமான டிசைன்களில் இல்லாமல் வித்தியாசமான வடிவமைப்பில் அடுத்த மாடலை கொண்டு வரும் திட்டத்திலும் அந்த நிறுவனம் உள்ளது.
இதற்காக, யுசி3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ஹோண்டா விரைவில் களமிறக்கும் என தெரிகிறது. தற்போது காப்புரிமை பெறப்பட்டுள்ள இந்த புதிய மாடலானது முன்புறத்தில் அப்ரான் உள்ளிட்ட பகுதிகள் பார்ப்பதற்கு மேக்ஸி ஸ்கூட்டர் போலவும், பின்புறத்தில் அந்த காலத்து டிசைன் அம்சங்களை பரைசாற்றும் வகையில் ரெட்ரோ ஸ்கூட்டராகவும் கலந்து கட்டி டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

முகப்பில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி இண்டிகேட்டர்களுடன் வசீகரிக்கிறது. விண்ட்ஸ்க்ரீன் அமைப்பும் இதற்கு வலு சேர்க்கிறது. இந்த ஸ்கூட்டரில் LFP பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த 3.2kWh பேட்டரியானது அதிகபட்சமாக 122 கிமீ தூரம் வரை ரேஞ்ச் தரும் என்று தெரிகிறது. இது தாய்லாந்து நாட்டின் சோதனை நிலைகளில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான ரேஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 6கkW பவரை அளிக்கும் வல்லமை கொண்ட மின் மோட்டார் இருக்கிறது. அதிகபட்சமாக 80 கிமீ வேகம் வரை செல்லும். இந்த ஸ்கூட்டர் 160சிசி பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான ஆற்றல் கொண்டதாக இருக்கும். தவிரவும், 5 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மூன்று விதமான டிரைவிங் மோடுகள், பின்புறமாக ஸ்கூட்டரை நகர்த்துவதற்கான ரிவர்ஸ் அசிஸ்ட் வசதியும் இருக்கும்.

இந்த ஸ்கூட்டரில் 26 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி, 12 அங்குல சக்கரங்கள், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் வித்தியாசமான டிசைனில் சக்திவாய்ந்த புதிய ஸ்கூட்டரை வாங்க விரும்பும் இளைஞர்களை குறிவைத்து இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications


