எலெக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பயன்படுத்துறதால 1 லட்சம் ரூபாய் மிச்சம் பண்ண முடியும்.. எப்படி தெரியுமா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கும் போது நமக்குச் சொல்லப்படும் முக்கியமான ஒரு விஷயம் குறைவான பயன்பாட்டுச் செலவு என்பது தான். சரி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கும், எரிபொருள் பைக்/ ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கும் இடையே எவ்வளவு செலவு வித்தியாசம் வரும் எனக் கணக்கிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? வாங்க அதை இப்போ பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான பயன்பாட்டுச் செலவு:

இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ்ஸின் ஐக்யூப் (TVS iQube) தான். எனவே அதனையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இந்த ஸ்கூட்டர் பல்வேறு பேட்டரி அளவுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 3.5 kWh பேட்டரி பேக் கொண்ட வேரியன்டை நாம் கணக்கில் எடுத்து் கொள்வோம்.

TVS iQube

3.5 kWh பேட்டரி பேக் கொண்ட ஐக்யூப் வேரியன்டானது இந்தியாவில் 1.38 லட்சம் ரூபாய் என்ற ஆன்-ரோடு விலையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 145 கிமீ வரை செல்ல முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது டிவிஎஸ். தினசரிப் பயன்பாட்டில் இந்த அளவு சற்று குறைவாகவே இருக்கும். எனவே நாம் 110 கிமீ ரேஞ்சு என எடுத்துக் கொள்வோம்.

இப்போது மின்சாரக் கட்டணத்திற்கு வருவோம். மாதம் 500 யூனிட்டுகள் மின்சாரம் நம் வீட்டில் பயன்படுத்துவோம் என வைத்துக் கொள்வோம். முதல் 200 யூனிட்டுகள் இலவசம். அடுத்த 200 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 4.7 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடைசி 100 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 6.3 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது (இந்தத் தகவல்கள் தமிழக மின்சார வாரியத்தின் வலைத்தளப் பக்கத்தில் இருந்து நேரடியாகப் பெறப்பட்டது).

Hero Splendor Plus

இந்த அளவீட்டை வைத்துப் பார்த்தோமானால், மேற்கூறிய ஐக்யூப் வேரியன்ட் மூலம் ஒரு கிமீ பயணம் செய்ய 22 பைசா செலவாகிறது. அதாவது நாம் நான்கு கிமீ பயணம் செய்தாலும் 1 ரூபாய்கும் கீழ் தான் செலவாகும். இந்தக் கணக்கீட்டிற்கு 6.3 ரூபாய் என்ற அதிகபட்ச கட்டண அளவைத் தான் நாம் இங்கே எடுத்துக் கொண்டுள்ளோம்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 கிமீ பயணம் செய்கிறீர்கள் என எடுத்துக் கொண்டால், மாதத்திற்கு 1,500 கிமீ. அப்படியென்றால் ஸ்கூட்டரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டும். ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 3.5 யூனிட்டுகள் மின்சாரம் என எடுத்துக் கொண்டால், மாதம் 50 யூனிட்டுகள் மின்சாரத்தை ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்காகவே நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு மின்கட்டம் மாதம் 300 ரூபாயில் இருந்து 350 ரூபாய்க்குள் இருக்கும்.

குறிப்பு: 400 முதல் 500 யூனிட்டுகளில், யூனிட் ஒன்று 6.3 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த அளவைத் தான் இங்கே கணக்கீட்டிற்காக நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக மின்கட்டணத்தின் சராசரியை எடுத்துக் கொண்டால், பயன்பாட்டுச் செலவு இன்னும் குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் பைக்கிற்கான பயன்பாட்டுச் செலவு:

சரி, அப்படியே இதே அளவு பயன்பாட்டிற்கு எரிபொருள் பைக் அல்லது ஸ்கூட்டரில் எவ்வளவு செலவாகும் என்பதைக் கணக்கிட்டால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் நாம் எவ்வளவு சேமிக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு விட முடியும். இதற்காக இந்தியாவில் அதிகம் பேரால் வாங்கப்படும் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கையே நாம் எடுத்துக் கொள்வோம்.

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் சராசரியாக லிட்டருக்கு 75 கிமீ மைலேஜ் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். பெட்ரோல் விலை லிட்டருக்கு 108 ரூபாய். அப்படியென்றால் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் மூலம் ஒரு கிமீ பயணம் செய்வதற்கு 1.44 ரூபாய் செவாகிறது. மேலே நாம் பார்த்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்துவதற்கான செலவை விட 6.5 மடங்கு அதிகம்.

மாதத்திற்குக் கணக்கிட்டால், 1,500 கிமீக்கு 2160 ரூபாய் பெட்ரோலுக்கு நாம் செலவழிக்க வேண்டும். இது மேலே நாம் பார்த்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான 350 ரூபாய் என்ற பயன்பாட்டுச் செலவை விட 1,800 ரூபாய் அதிகமாகும். இதுவே ஓராண்டிற்கு என எடுத்துக் கொண்டால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட, பைக்கிற்கு 21,600 ரூபாய் நாம் கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும்.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்கின் ஆன்-ரோடு விலையானது தோராயமாக 95,000 ரூபாய் என்ற விலையில் தொடங்குகிறது. நாம் சற்று வசதிகள் கூடுதலான வேரியன்டை நோக்கிப் போகும் போது 1 லட்சம் ரூபாய் என்ற ஆன்-ரோடு விலையை எட்டிவிடும். மேலே நாம் பார்த்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொடக்கவிலை இதனை விட 38,000 ரூபாய் அதிகம். அப்படியென்றால் இரண்டு ஆண்டுகளில் இந்தக் கூடுதல் விலையை, எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் குறைவான பயன்பாட்டுச் செலவின் மூலம் நாம் சரிக்கட்டி விட முடியும்.

5 ஆண்டுகளுக்கான செலவு:

அடுத்தாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது கேட்கிறது. இந்த பயன்பாட்டுச் செலவை பேட்டரி செயலிழந்து கூடுதலாக்கி விடும் என்று தானே. அதனையும் சேர்த்தே இங்கே நாம் பார்த்து விடுவோம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடக்கக் காலத்தில் இருந்ததை விட தற்போது பேட்டரி தொழில்நுட்பம் நன்றாகவே மேம்பட்டிருக்கிறது. எனினும் பேட்டரியின் மேல் நம்பிக்கை இல்லை என்றால், நிறுவனங்கள் அளிக்கும் கூடுதல் வாரண்டி திட்டத்தை வாங்கலாம்.

மேற்கூறிய பேட்டரிக்கு 6,000 ரூபாய் என்ற விலையில் கூடுதலாக 2 ஆண்டுகள் அல்லது 20,000 கிமீ வரையிலான வாரண்டியைக் கொடுக்கிறது டிவிஎஸ். ஸ்கூட்டருடன் 3 ஆண்டுகள் வரையிலான பேட்டரி வாரண்டி ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்படுகிறது. கூடுதல் வாரண்டியையும் சேர்த்து வாங்கினால், ஐந்து ஆண்டுகள் வரை பேட்டரி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

மொத்தமாக ஐந்து ஆண்டுகளில் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்கிற்கு நீங்கள் எவ்வளவு செலவு செய்திருப்பீர்கள் என்பதைப் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டிரின் விலை, 1.38 லட்சம் ரூபாய், ஒரு ஆண்டிற்கான பயன்பாட்டுச் செலவு, 4,200 ரூபாய், கூடுதல் பேட்டரி வாரண்டிக்கு 6,000 ரூபாய் என மொத்தமாக, தோராயமாக 1.50 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பீர்கள். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் நகரும் பாகங்கள் குறைவு, எனவே பராமரிப்புச் செலவு எரிபொருள் பைக்கை விட குறைவாகவே இருக்கும். எனினும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எரிபொருள் பைக் ஆகிய இரண்டின் பராமரிப்புச் செலவையுமே இங்கே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அப்படியே எரிபொருள் பைக்கிற்கு வருவோம். பைக்கின் தொடக்கவிலை 1 லட்சம் ரூபாய், ஒரு ஆண்டிற்கான பயன்பாட்டுச் செலவு 25,920 ரூபாய், ஒட்டுமொத்தமாக 1.26 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். அப்படியே ஐந்து ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் 1.30 லட்சம் ரூபாய் பயன்பாட்டுச் செலவுடன், சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு எரிபொருள் பைக்கிற்கு 2.30 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பீர்கள்.

இதுவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால், ஐந்து ஆண்டுகளுக்கான செலவு 1.67 லட்சம் ரூபாய் மட்டுமே. இத்துடன் பராமரிப்புச் செலவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இந்த இடத்தில் குறைவான செலவுகளைக் கொண்டதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து:

செலவுகளின் அடிப்படையில் மட்டுமே இங்கே நாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் நன்மைகளைக் கணக்கிட்டிருக்கிறோம். மேலும், அதிக மைலேஜ் தரும் எரிபொருள் பைக்குடன் மட்டுமே கணக்கிட்டிருக்கிறோம். எரிபொருள் ஸ்கூட்டருடன் கணக்கிட்டோம் என்றால், இரண்டு ஸ்கூட்டர்களுக்கு இடையிலான பயன்பாட்டுச் செலவு வித்தியாசம் இன்னும் அதிகமாக இருக்கும். ஏனெனில் சராசரியாக ஒரு 125 சிசி ஸ்கூட்டர் 50 கிமீ வரையிலான மைலேஜை மட்டுமே கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப ரீதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், எரிபொருள் பைக்ககளை விட ரொம்பவே மேம்பட்டவை. எனவே குறைவான செலவிற்கு கூடுதலான அம்சங்கள் மற்றும் பிராட்டிகாலிட்டியையும் நாம் பெறுகிறோம். 360 டிகிரியில் அனைத்து விதமான நன்மைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், பேட்டரி டீகிரடேஷன் என்ற அந்த ஒரு புள்ளியைத் தவிர அனைத்து இடங்களிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் கையே ஓங்கியிருக்கும்.

எனவே, ரொம்ப யோசிக்காம உங்களுக்குப் பிடிச்ச அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தைரியமா வாங்குங்க மக்களே.

Article Published On: Saturday, June 20, 2026, 11:47 [IST]
English summary
How much can you save by using an electric scooter against an petrol bike
மேலும்... #electric scooter #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out