மின்சார ஸ்கூட்டர்களுக்கு செம டிமாண்ட்... முதல் முறையாக 2 லட்சத்தை கடந்த விற்பனை!
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான டிமான்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மின்சார இருசக்கர வாகனங்களின் மாத விற்பனை முதல்முறையாக 2 லட்சம் யூனிட்டுகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
வாகன் (Vahan) தளத்தின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் அனைத்து வகை மின்சார வாகனங்களையும் சேர்த்து மொத்தமாக 3.3 லட்சம் யூனிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது, இது 66 சதவீதம் அளவுக்கு கூடுதலாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் 3.1 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜூலையில் மேலும் உயர்ந்து 3.3 லட்சம் யூனிட்டுகளாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக, நாட்டின் மின்சார வாகன விற்பனையில் மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை மிக அதிக பங்களிப்பை வழங்கி வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் 2,04,201 மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் 1.95 லட்சம் யூனிட்டுகள் பதிவாகி இருந்த நிலையில், ஜூலையில் முதல்முறையாக 2 லட்சம் யூனிட்டுகளை கடந்துள்ளது.
மேலும், இந்தியாவில் மொத்த இருசக்கர வாகன விற்பனையில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை 11.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் இது 10.6 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த மாதம் மேலும் உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மின்சார வாகனங்களின் மீதான பார்வை அதிக அளவில் திரும்பி இருப்பதை இது காட்டுகிறது.

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு, புதிய மாடல்களின் அறிமுகம் மற்றும் பேட்டரித் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் மற்றும் பேட்டரிக்கான அதிக வாரண்டி காலம் போன்றவை மின்சார வாகனங்களின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை திருப்பி உள்ளது. மேலும், மின்சார வாகனங்களுக்கான எரிபொருள் செலவு பெட்ரோல் வாகனங்களைவிட மிக குறைவாக இருப்பதும் முக்கிய காரணியாக இருக்கிறது.
மின்சார கார் பிரிவிலும் நல்ல வளர்ச்சி பதிவாகி உள்ளது. ஜூலை மாதத்தில் மின்சார கார் விற்பனை கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 82 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வும், E20 பெட்ரோல் மீதான சந்தேகங்களும் மின்சார கார்களின் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொழிற்துறையினர் தரவுகளின் அடிப்படையிலான தகவல்களின்படி, இதே வளர்ச்சியை தொடர்ந்தால் இந்த ஆண்டிலேயே இந்தியாவின் மின்சார வாகன இருசக்கர வாகன சந்தை 20 லட்சம் விற்பனை என்ற வரலாற்று மைல்கல்லாகவும் எட்டும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மின்சார வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது மின்சார வாகன சந்தை ஆரம்ப நிலையிலிருந்து வாடிக்கையாளர்களின் பிரதானப் போக்குவரத்து தேர்வாக மாறி வருவதை இந்த விற்பனை புள்ளிவிபரங்கள் மூலமாக தெளிவாக தெரிகிறது. குறிப்பாக, மின்சார இருசக்கர வாகன சந்தையானது மிக வேகமான வளர்ச்சியை பெறும் என்று கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications