இந்தியாவில் EV புரட்சி ஆரம்பம்... பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு ஆப்பு!
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் மாத விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாகனங்களை வாங்கும் ஆர்வம் அதிகரித்ததும், புதிய மாடல்களின் அறிமுகமும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் மொத்தம் சுமார் 2.24 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது சுமார் 48% வளர்ச்சியாகும். இதன் மூலம் இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தை இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

டிவிஎஸ் அதிரடி வளர்ச்சி
இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அக்டோபரில் மட்டும் 60,433 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 27% சந்தைப் பங்கை பெற்று டிவிஎஸ் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. கடந்த ஆண்டு இதன் சந்தைப் பங்கு 20.6% என்று இருந்தது.
இரண்டாவது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை 49,067 யூனிட்டுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக 21.9% சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதன் விற்பனை சுமார் 51% அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தில் உள்ள ஏத்தர் எனர்ஜி நிறுவனம் அக்டோபரில் சுமார் 31,796 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலமாக 14.2% சந்தைப் பங்குடன் தொடர்ந்து முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதேசமயம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பிராண்டும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த மாதம் 29,901 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஓலா நிறுவனத்திற்கு பின்னடைவு
முன்னணி நிறுவனங்களில் ஓலா எலக்ட்ரிக் மட்டும் அக்டோபரில் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது அதன் விற்பனை சுமார் 26% குறைந்துள்ளது. அக்டோபரில் 12,096 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் சந்தைப் பங்கு 5.4% ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் 10,838 EV வாகனங்களைப் பதிவு செய்து ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரிவர் மொபிலிட்டி, பிகாஸ், இ-ஸ்பிரிண்டோ உள்ளிட்ட நிறுவனங்களும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, மோட்டோவோல்ட் நிறுவனம் அக்டோபரில் 1,702 வாகனங்களைப் பதிவு செய்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
வளர்ச்சிக்கு காரணம்?
மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. பெட்ரோல் விலை உயர்வு, குறைவான பராமரிப்புச் செலவு, தினசரி பயணங்களுக்கான சிக்கனமான போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவை மக்களை மின்சார வாகனங்களை நோக்கி ஈர்த்து வருகின்றன.
இதுதவிர, சார்ஜிங் நிலையங்கள் கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக அதிகரித்து வருவதும் இந்த வளர்ச்சிக்கு உதவுகிறது. நகர்ப்புறங்களில் அலுவலகம் செல்வோர், குறுகிய தூரப் பயணங்களை மேற்கொள்வோர் மத்தியில் மின்சார ஸ்கூட்டர்கள் நடைமுறைக்கு ஏற்ற தேர்வாக மாறி வருகின்றன. புதிய தொழில்நுட்ப வசதிகளும் வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகின்றன.
குறைந்த விலையில் மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதிலும் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. பட்ஜெட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு விலைப் பிரிவுகளில் புதிய மாடல்கள் அறிமுகமாகின்றன. இதனால் ஏற்கெனவே மின்சார வாகனங்களை வாங்கத் தயங்கியவர்களும் தற்போது அவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.
பெட்ரோல் வாகனங்களுக்கு போட்டி
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் சந்தைப் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் பதிவான மொத்த இருசக்கர வாகனங்களில் 9.7% மின்சார வாகனங்களாக இருந்ததாக வாகன் தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த 4.7% அளவை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தை தற்போது ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தை எட்டியுள்ளது. டிவிஎஸ், பஜாஜ், ஏத்தர் மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்களின் போட்டி வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளை வழங்குகிறது. விலை குறைப்பு, புதிய மாடல்கள் மற்றும் சார்ஜிங் வசதிகள் மேம்பாடு தொடர்ந்தால், வரும் மாதங்களில் மின்சார வாகன விற்பனை மேலும் புதிய சாதனைகளைப் படைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications


