ஏத்தர் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்யும் இந்திய அரசு
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. முன்பை விட தற்போது அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் எனர்ஜியின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. டிவிஎஸ் மற்றும் பஜாஜ் உள்ளிட்ட, பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையான மதிப்பையும் நம்பிக்கையையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் பெற்று வருகிறது.
இந்த நிலையில் தான், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் இந்திய அரசு முதலீடு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1,200 கோடி ரூபாய் வரை முதலீட்டைத் திரட்ட ஏத்தர் எனர்ஜி முயற்சி செய்து வரும் நிலையில், அதில் 200 கோடி ரூபாய் இந்திய அரசின் மூலமாக வரவிருக்கிறது. ஆனால் நேரடியாக இல்லை.

இந்திய அரசும், ஜப்பான் பேங்க் ஆஃப் இன்டர்நேஷனல் கோஆப்ரேஷனும் (Japan Bank of International Cooperation) சேர்ந்து இந்தியா-ஜப்பான் ஃபண்டு (India-Japan Fund) என்ற முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வரும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.
அந்த வகையிலேயே பசுமை ஆற்றல் மூலம் காற்று மாசுபாட்டுப் பிரச்சினைக்கு தீர்வளித்து வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் மேற்கூறிய திட்டத்தின் கீழ் 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மட்டுமில்லாமல், இந்திய அரசு மற்றும் ஜப்பான் வங்கியின் கூட்டு முதலீடாகவும் இதனை நாம் பார்க்கலாம்.

இதுமட்டுமின்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் இந்நிறுவனத்தில் மேலும் 960 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும் ஏத்தர் எனர்ஜி குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் 29.48 சதவீதம் பங்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே கொண்டிருக்கிறது. இந்தப் புதிய முதலீடு மூலம் அந்நிறுவனத்தில் ஹீரோவின் பங்கு மேலும் அதிகரிக்கவுள்ளது.
இந்த முதலீடுகள் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு உதவுவது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையையும் உயர்த்துகின்றன. இது மறைமுகமாக ஏத்தர் எனர்ஜியின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகளவில் விற்பனை ஆவதற்கும் உதவும். தற்போது இந்தியாவில் டிவிஎஸ் மோட்டார் மற்றும் பஜாஜுக்கு அடுத்தபடியாக அதிக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் விடா (ஹீரோ மோட்டோகார்ப்) உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் இந்தியாவில் புதிய விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் EL என்ற பிளாட்ஃபார்மில் தற்போது அந்நிறுவனம் விற்பனை செய்வதை விட சற்று குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றை ஆகஸ்ட் 29ம் தேதியன்று ஏத்தர் இந்தியாவில் வெளியிடவிருப்பதாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்பத்தை வாங்கிப் பயன்படுத்தும் நிறுவனமாக இல்லாமல், சொந்தமாகவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்ஃபார்ம், பேட்டரி, பவர்ட்ரெயின் உள்ளிட்டவற்றை உருவாக்கிப் பயன்படுத்தி வரும் ஒரு நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருந்து வருகிறது. இதனாலேயே இந்திய அரசு பங்குபெற்றிருக்கும் முதலீட்டுத் திட்டத்தின் மூலமாகவே இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சற்று கூடுதல் விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்தாலும், ஏத்தரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனவே ஏத்தர் எனர்ஜியின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு குறைவான விலையைக் கொண்டிருக்கும் பட்சத்தில், அதிக விற்பனையைப் பதிவு செய்ய நிறையவே வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications