எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த பிராண்டில் வாங்குவதுனு குழப்பமா? எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட 5 கம்பெனிகள்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல விரிவடைந்து வருவதாக கடந்த சில வருடங்களாகவே கூறி வருகிறோம். இதன் காரணமாகவே, கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவடைய இருந்த பிரதமர் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தை மத்திய அரசாங்கம் இந்த ஜூலை மாதம் வரையில் நீட்டித்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதன் மூலமாக, இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகரித்துவரும் நிலையில், நடந்து முடிந்த 2026 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்த டாப்-5 நிறுவனங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் விற்பனை எண்ணிக்கைகள் யாவும் வஹான் (VAHAN) தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளவை ஆகும்.

5. ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric): கடந்த சில மாதங்களாக விற்பனையில் பெரிய சரிவை சந்தித்துவந்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. வஹான் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 10 ஆயிரத்து 117 ஓலா வாகனங்கள் ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஓலாவின் எலெக்ட்ரிக் பைக்குகளும் அடங்குகின்றன என்றாலும், இந்த எண்ணிக்கையில் 90- 95% ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே ஆகும்.
4. ஹீரோ விடா (Hero Vida): ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிராண்டான விடாவில் இருந்து கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் 21 ஆயிரத்து 434 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது வெறும் 8 ஆயிரத்து 39 விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த 2025ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தை காட்டிலும் சுமார் 128% அதிகமாகும்.

3. ஏத்தர் எனர்ஜி (Ather Energy): இந்தியாவில் தற்சமயம் வேகமாக வளர்ந்துவரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக விளங்கும் ஏத்தரில் இருந்து கடந்த மாதத்தில் 35 ஆயிரத்து 688 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துவரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் விற்பனை ஒரு மாதத்தில் 30 ஆயிரம் யூனிட்களை கடப்பது இதுவே முதல்முறை ஆகும். ஓலாவை போன்று ஏத்தரின் கடந்த மாத விற்பனையும் 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் 128% அதிகரித்துள்ளது.
2. பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto): பஜாஜ் நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு சேத்தக் என்கிற ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால், கடந்த மாதத்தில் பஜாஜ் விற்பனை செய்துள்ள 46 ஆயிரத்து 246 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனைத்தும் சேத்தக் ஆகும். ஒரு மாதத்தில் இத்தனை சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.
1. டிவிஎஸ் மோட்டார் (TVS Motor): இந்தியாவில் தற்போதைக்கு அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டிவிஎஸ் விளங்குகிறது. டிவிஎஸ் பிராண்டில் இருந்து தற்சமயம் ஐக்யூப் (iQube), ஆர்பிட்டர் (Orbiter) மற்றும் எக்ஸ் (X) என மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவை மொத்தமாக கடந்த மார்ச் மாதத்தில் 49 ஆயிரத்து 304 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2025 மார்ச் மாதத்தை காட்டிலும் 60% அதிகமாகும். BaaS எனப்படும் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரியை வாடகைக்கு வழங்கும் முறையை டிவிஎஸ் பின்பற்ற ஆரம்பித்ததினாலேயே இந்த அளவிற்கு அதிகப்படியான வளர்ச்சியை விற்பனையில் கண்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் முதலிடத்தை பிடித்துவந்தாலும், 2வது இடத்தில் உள்ள பஜாஜ் நிறுவனம் சேத்தக் என்கிற அதன் ஒரேயொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக இந்த இடத்தை பிடித்து இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. சேத்தக்கை போன்று மேலும் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தால், பஜாஜ் ஆட்டோ இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








