மீண்டும் RX100 பைக்கை இந்தியாவில் வெளியிடும் யமஹா?
இந்திய இளைஞர்கள் அல்லது மத்திய வயதினர் அதிகம் எதிர்பார்க்கும் பைக்குகளில் ஒன்று RX100. ஒரு காலத்தில் இந்திய இளைஞர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு பைக். தற்போதும் பயன்படுத்தப்பட்டு நல்ல கண்டிஷனில் இருக்கும் RX100 பைக்கை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்கவும் சிலர் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இந்த பைக்கை யமஹா மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வரவிருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வந்தன.
உண்மையிலேயே RX100 மீண்டும் இந்தியாவில் வெளியாகிறதா என்று கேட்டால், அதிகாரப்பூர்வமாக அதிகுறித்து எந்தவொரு தகவலும் இல்லையென்றே சொல்ல வேண்டும். வேறு எந்த சிறிய இன்ஜின் பைக்கிற்கும் கிடைக்காத கல்ட் கிளாஸிக் அந்தஸ்து RX100 பைக்கிற்கு இந்தியாவில் கிடைத்தது. இது தங்களையே ஆச்சரியப்படுத்தியதாக யமஹாவின் சேர்மன் ஒருமுறை அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

மேலும், வாய்ப்பு இருந்தால் மீண்டும் RX100 பைக்கை கண்டிப்பாக வெளியிடும் ஆர்வம் யமஹாவுக்குமே இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் RX100 போன்ற பைக்கை மீண்டும் யமஹாவே நினைத்தாலும் உருவாக்க முடியாது. அதற்கு முக்கியமான காரணம் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள்.
RX100 ஒரு 2 ஸ்ட்ரோக் இன்ஜின் பைக். இருப்பதிலேயே அதிக காற்று மாசுபாட்டை வெளியிடுபவை என்றால் அது 2 ஸ்ட்ரோக் இன்ஜின்கள் தான். எனவே அவற்றின் தயாரிப்பு இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. 2 ஸ்ட்ரோக் இன்ஜினாக இல்லால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் 4 ஸ்ட்ரோக் இன்ஜினாக அதே அளவு பவர் மற்றும் திறனைக் கொண்டு வர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 200 சிசியாகவாவது அது இருக்க வேண்டும் என யமஹாவின் சேர்மனே சொல்லியிருக்கிறார்.

RX100 பைக்கில் 98 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் அப்போது பயன்படுத்தப்பட்டது. இந்த இன்ஜினானது 7,500 rpm-ல் 11 hp பவர் மற்றும் 6,500 rpm-ல் 10.4 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தது. இப்போது வரை இந்தியாவின் மிகவும் பவர்ஃபுல்லான 100 சிசி இன்ஜின் என்றால் அது RX100-ன் இந்த இன்ஜின் தான்.
இதே அளவு பவரை 4 ஸ்ட்ரோக் இன்ஜின் மூலம் மீண்டும் ஒரு 100 சிசி பைக்கில் கொண்டு வருவது மிகவும் கடினம். மேலும், இன்ஜின் மட்டுமின்றி, RX100-ன் அந்த எக்சாஸ்ட் சத்தம் தான் அனைவரும் அந்த பைக்கை நோக்கி ஈர்த்த மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அந்த சத்தத்தை மீண்டும் யாராலும் கொண்டு வரவே முடியாது.
எனவே RX100 'போல' ஒரு பைக்கை மீண்டும் யமஹா உருவாக்கலாம், அதனை விற்பனையும் கூட செய்யலாம். ஆனால் அது 'RX100' ஆக இருக்காது. அது வேறுவொரு சிறப்பான பைக்காக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நாம் எதிர்பார்க்கும் பழைய RX100 ஆக அது இருக்காது. மேலும், யமஹாவுக்கும் அப்படி ஒரு பைக்கை தயாரிக்கும் திட்டம் துளியளவும் இல்லை.
இறுதியாக என்னவென்றால், RX100 பைக் மீண்டும் வராது. அது ஒரு சிறப்பு பைக் எனவும், இந்தியாவில் மதிப்பை புதிய பைக்கின் மூலம் சிதைக்க விரும்பவில்லை எனவும் யமஹா சில ஆண்டுகளுக்கு முன்னரே சூசகமாக சொன்னது குறிப்பிடத்தக்கது. RX100 பைக்கை நினைவு கூறும் விதமாக RX என்ற பெயிரில் ஒரு சிறப்பு பைக்கை வேண்டுமானால் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: RX100 பைக் ஒன்று தான், அது 1990-களில் விற்பனை செய்யப்பட்டது தான். இனி அதே RX100 பைக்கை யார் நினைத்தாலும் கொண்டு வர முடியாது. மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை உலகளாவிய அரசுகள் கடுமையாக்கிக் கொண்டே வரும் நிலையில், அடுத்த சில தசாப்தங்களில் பெட்ரோல் பைக்குகளே இருக்குமா என்பதே கேள்விக்குறி என்பது தான் நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications