இந்தியாவில் களமிறங்கும் மிரட்டலான தோற்றத்தில் இட்டால்ஜெட் பிரிமீயம் ஸ்கூட்டர்கள்!
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டி மாடல்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. சாதாரண பயன்பாட்டு வாகனங்களைத் தாண்டி, வித்தியாசமான டிசைன் மற்றும் சிறந்த ஓட்டுதல் அனுபவத்தைத் தரும் வாகனங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், உலகளவில் தனது விசித்திரமான மற்றும் கவர்ச்சிகரமான டிசைனுக்காகப் பெயர் பெற்ற இத்தாலிய இருசக்கர வாகன நிறுவனமான 'இட்டால்ஜெட்' (Italjet) விரைவில் இந்தியச் சந்தையில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இட்டால்ஜெட் ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்யும் பொறுப்பை கோல்காப்பூரை சேர்ந்த மோட்டோஹாஸ் (Motohaus India) நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Brixton Motorcycles) மற்றும் வி.எல்.எஃப் (VLF) ஆகிய சர்வதேச பிராண்டுகளின் விற்பனையை இந்தியாவில் மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது இட்டால்ஜெட் பிராண்டையும் தனது வரிசையில் இணைத்துள்ளது.

இத்தாலியின் போலோக்னா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இட்டால்ஜெட், தனது தனித்துவமான ஸ்கூட்டர் மாடல்களுக்காக உலக அளவில் பெயர் பெற்றது. நேக்கட் பைக்குகள் போலவே ஃபிரேம் கட்டமைப்பு, ஆக்ரோஷமான ஏரோடைனமிக் வடிவமைப்பு மற்றும் வழக்கமான ஸ்கூட்டர்களில் பார்க்க முடியாத முன்ப்பக்க சஸ்பென்ஷன் அமைப்பு போன்றவை இந்த ஸ்கூட்டர்களில் நேரடியாக பார்க்கும் வகையில் மறைப்புக்காக பேனல்கள் எதுவும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக, டிராக்ஸ்டர் வரிசையில் 125, 200 மற்றும் 300 ஆகிய மாடல்கள் அதன் தனித்துவமான வடிவமைப்புக்குப் பெயர் பெற்றதாக விளங்குகின்றன. பொதுவாக ஸ்கூட்டர்களில் முன்பக்க சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் அமைப்புகள் வழக்கமான வடிவமைப்பைப் பின்பற்றும். ஆனால், இட்டால்ஜெட் டிராக்ஸ்டர் மாடல்களில் பயன்படுத்தப்படும் இன்டிபென்டன்ட் ஸ்டீயரிங் சிஸ்டம் (Independent Steering System - ISS) அமைப்பை கொண்டுள்ளன.
இதனுடன், வெளிப்படையாகத் தெரியும் ட்ரெல்லிஸ் ஃபிரேம் (Trellis Frame) அமைப்பும் இந்த ஸ்கூட்டருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது. ஸ்கூட்டரின் உட்புறக் கட்டமைப்பை மறைக்கும் வழக்கமான பேனல்களுடன் மறைப்பதற்காக பதிலாக, அதன் உட்புற பாகங்கள் வெளியே தெரியும்படி இருக்கும்.
எனினும், இந்தியாவில் அறிமுகமாகவுள்ள இட்டால்ஜெட் மாடல்களின் விபரம், விற்பனைக்கு வரும் தேதி மற்றும் விலை போன்ற விபரங்கல் வரும் நவம்பர் மாதம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறவுள்ள 'ஐக்மா 2026' (EICMA 2026) மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்தியச் சந்தைக்கு எந்தெந்த எஞ்சின் ஆப்ஷன்கள் கொண்டுவரப்படும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பிரீமியம் மேக்சி-ஸ்கூட்டர் பிரிவில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்டு அல்லது சி.கே.டி (CKD) முறையில் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதால், இதன் விலை சற்று அதிகமாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது.
வழக்கமான ஸ்கூட்டர் வடிவமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, ஸ்போர்ட்டியான மற்றும் அதிநவீன ஓட்டுனர் அனுபவத்தை எதிர்பார்க்கும் இந்திய வாகன ஆர்வலர்களுக்கு இட்டால்ஜெட் பிராண்டு வருகை ஒரு புதிய தேர்வாக அமையும்.
இந்த இட்டால்ஜெட் டிராக்ஸ்டர் ஸ்கூட்டர்கள் கேடிஎம் ட்யூக் வரிசை பைக்குகளின் திறந்த மேனி உடல் அமைப்பை நினைவூட்டும் வகையில் இருக்கின்றன. விலை மட்டும் சரியாக இருந்தால் நிச்சயமாக நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
Via - Autocarindia


Click it and Unblock the Notifications


