ரூ.1.85 லட்சத்தில் ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் அறிமுகம்! என்னென்ன புதுசு தெரியுமா?
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது பிரபலமான 42 மாடலின் புதிய All Stars எடிசனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலானது ரூ.1,84,942 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வண்ணங்கள் மட்டுமின்றி, தோற்றம், டயர்கள், சக்கரங்கள் மற்றும் சில மெக்கானிக்கல் மாற்றங்களுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது.
ஜாவாவின் All Stars வரிசையில் ஏற்கனவே 42 FJ மற்றும் 42 Bobber ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போது 42 All Stars அந்த வரிசையின் மூன்றாவது மாடலாக இணைந்துள்ளது. புதிய பைக்கிற்கான முன்பதிவு நாடு முழுவதும் உள்ள ஜாவா-யெஸ்டி டீலர்ஷிப்களில் தொடங்கியுள்ளது.

வண்ணத் தேர்வுகள்
புதிய ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் ஆறு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் ஏற்கனவே உள்ள கருப்பு மற்றும் யானைத் தந்த இரட்டை வண்ணத் தேர்வுடன் கூடுதலாக ஆல் ஸ்டார்ஸ் ஐவரி, நெபுலா புளூ, மோஸ் க்ரே, பேட்டில் க்ரீன் மற்றும் ஆல் ஸ்டார்ஸ் பிளாக் ஆகிய புதிய வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.
இதில், கருப்பு - யானைத் தந்த வண்ணத் தேர்வு ரூ.1,79,942-ல் தொடங்குகிறது. ஆல் ஸ்டார்ஸ் யானைத் தந்த வண்ணத் தேர்வுக்கு ரூ.1,84,942 விலையும், நீலம், சாம்பல், பச்சை ஆகிய வண்ணத் தேர்வுகளுக்கு ரூ.1,86,942 விலையும், ஆல் ஸ்டார்ஸ் கருப்பு வண்ணத் தேர்வுக்கு ரூ.1,89,942 விலையிலும் கிடைக்கும்.
தோற்றத்தில் மாற்றங்கள்
புதிய 42 All Stars மோட்டார்சைக்கிளின் பாரம்பரிய டிசைன் அம்சங்கள் தொடர்ந்து தக்க வைக்கப்பட்டுள்ளன. வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட், கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், நீளமான இருக்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், மோட்டார்சைக்கிளின் பின்புறம் முன்பைவிட சற்று ஸ்போர்ட்டியாக மாற்றப்பட்டுள்ளது. புதிய சைடு பேனல்கள், புதிய ஃபென்டர் அமைப்பு, அலாய் சக்கரங்கள், மேல்நோக்கி அமைந்த இரட்டை சைலென்சர் குழாய்கள் ஆகியவை ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகின்றன.
இருக்கையும் கூடுதல் சொகுசுத் தன்மை உடையதாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 100/90-18 டயரும், பின்புறத்தில் அகலமான 150/70-17 டயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மோட்டார்சைக்கிளின் பின்புற தோற்றம் மேலும் கம்பீரமாக மாறியுள்ளது.
எஞ்சின்
எஞ்சினில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஜாவா 42 மோட்டார்சைக்கிளில் ஏற்கனவே பயன்படுத்தப்படும், அதே 294.7சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின்தான் இந்த மாடல்களிலும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎஸ் பவரையும், 26 என்எம் டார்க்கையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
புதிய 42 All Stars மாடலில் முன்புறத்தில் 35மிமீ ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் 1,369 மிமீ வீல்பேஸ் நீளத்தையும், 173மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, 795மிமீ இருக்கை உயரமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், 13.2 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் ஆகியவையும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications


